ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் கிருஷ்ணஜெயந்தி : உறியடி உற்சவம் காணும் நம்பெருமாள்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் மாதந்தோறும் நடைபெறும் விழாக்களில் ஆவணி மாதம் நடைபெறும் கிருஷ்ணர் ஜெயந்தி புறப்பாடு மற்றும் உறியடி உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி இன்று உறியடி உற்சவம் நடைபெறுகிறது. நம்பெருமாள் கருட மண்டபத்தில் உறியடி உற்சவம் கண்டருளுகிறார்.

கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை பிருந்தாவனம், மதுரா, கோகுலம், துவாரகை, குருவாயூர், உடுப்பி, பூரி ஜெகன்நாத், பண்டரிபுரம் மற்றும் ஏனைய பெருமாள் ஆலயங்களில் மிகவும் விசேஷமாக கொண்டாடி வருகின்றனர். இந்த கிருஷ்ண ஜெயந்தியில் வழுக்குமரம் ஏறுவதையும் உறியடி திருநாளாக உறியடி அடிப்பதையும் மக்கள் கிருஷ்ணருடைய விளையாட்டாகக் கொண்டு விளையாடுகிறார்கள்.

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆவணி மாதம் நடைபெறும் கிருஷ்ணர் ஜெயந்தி புறப்பாடு மற்றும் உறியடி உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
கிருஷ்ணஜெயந்தி, உறியடி உற்சவத்தின் முதல் நாளான நேற்று காலை 9.15 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு காலை 9.45 மணிக்கு ஸ்ரீபண்டாரம் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு முற்பகல் 11 மணி முதல் மதியம் 1.30 மணிவரை திருமஞ்சனம் கண்டருளினார்.
உறியடி உற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று காலை 7 மணிக்கு கிருஷ்ணன் புறப்பாடு நடைபெறுகிறது. எண்ணெய் விளையாட்டு கண்டருளி காலை 7.30 மணிக்கு கிருஷ்ணன் சன்னதிக்கு வந்து சேர்ந்தார். பின்னர் மாலை 3 மணிக்கு நம்பெருமாள், உபயநாச்சியார்கள் திருச்சிவிகையில் மற்றும் கிருஷ்ணன் உடன் புறப்பட்டு கருடமண்டபத்திற்கு மாலை 3.30 மணிக்கு வந்து சேருகிறார்.
பின்னர் இரவு 9 மணிக்கு நம்பெருமாள் கருட மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9.15 மணியளவில் கருடமண்டப வளாகத்திலேயே உறியடி உற்சவம் கண்டருளுகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.
பகவான் ஸ்ரீகிருஷ்ணனுக்கு வெண்ணெய் மிகவும் பிடித்தமானது. எனவேதான் பக்தர்கள் கிருஷ்ணனுக்கு வெண்ணெய் நிவேதனம் செய்கின்றனர். ஆனால் உண்மையில் கொடுங்கோல் மன்னனான கம்சன் மக்களுக்கு அதிக வரி விதித்தான். அந்த வரியைக் கட்டுவதற்காக மக்கள் வெண்ணெய்யை விற்கும் கட்டாயத்திற்குள்ளானார்கள்.
தவறான முறையில் வரி விதித்து மக்களைத் துன்புறுத்தும் கம்சனிடமிருந்து மக்களைக் காப்பாற்றவே கண்ணன் வெண்ணெயைத் தின்பதும் அதை வாரி இறைப்பதுமான செயல்களைச் செய்தான். அரசனுக்கு கப்பம் கட்டுவதற்காக தங்கள் உணவுப் பொருட்களை தலையில் சுமந்துக் கொண்டு, மதுராவை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தனர்.

கோபியர்களின் தயிர், வெண்ணெய், பால் போன்ற பொருட்கள் அரசனுக்கு போய் சேரக்கூடாது என்று நினைத்ததால் தான் கண்ணன் கோபியர்களின் பானைகளை உடைத்தார். உடைந்த பானைகளில் இருந்த பால், தயிர், வெண்ணெய் போன்ற உணவுப் பொருட்களை தன்னுடன் இருந்த நண்பர்களுக்கும் கொடுத்தும், தானும் உண்டும் மகிழ்ந்தார் நந்தகோபனின் மகன் கோவிந்தன். அதை நினைவுபடுத்தும் விதமாகவே உறியடித்திருவிழா நடத்துகின்றனர்.












Click it and Unblock the Notifications