திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா நவ.4ல் தொடக்கம் - நவ.9ல் சூரசம்ஹாரம் காண பக்தர்களுக்கு அனுமதியில்லை
திருச்செந்தூர் சுப்ரமணியசாமி கோவிலில் கந்த சஷ்டி விழா நவம்பர் 4ஆம் தேதியன்று யாகசாலை பூஜையுடன் தொடங்க உள்ளது. சூரசம்ஹாரம் காண பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி : முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக போற்றப்படும் திருச்செந்தூரில் புகழ்பெற்ற கந்த சஷ்டி விழா நவம்பர் 4ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்க உள்ளது. நவம்பர் 9ஆம் தேதி சூரசம்ஹார விழா நடைபெற உள்ளது. கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்கள். முருகப்பெருமான் அறுபடை வீடுகளில் கடற்கரையில் அமைந்துள்ள அற்புத தலம் திருச்செந்தூர். இங்கு மாதந்தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும் ஆவணி திருவிழா, ஐப்பசி மாதம் கந்த சஷ்டி விழா, மாசி திருவிழா சிறப்பானது.
தேவர்களை வதைத்த அசுரர்களை வெற்றி வேல் வீரவேல் என முழக்கமிட்டு வந்து முருகப்பெருமான் சம்ஹாரம் செய்து ஆட்கொண்ட தலம் திருச்செந்தூர். இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா நவம்பர் 4ஆம் தேதி தொடங்க உள்ளது. ஆறுநாட்கள் பக்தர்கள் விரதம் இருந்து ஆறுமுகனை தரிசனம் செய்வார்கள். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் சூர சம்ஹாரம் காண பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சாகா வரம் பெற்ற அசுரர்கள்
காசிபமுனிவருக்கும், அசுர குலத் தோன்றலாகிய மாயைக்கும் சூரபத்மன், தாரகன், சிங்கமுகன், அஜமுகி ஆகியோர் பிறந்தனர். காஷ்யபர் தன் பிள்ளைகளிடம், குழந்தைகளே! வடதிசைநோக்கிச் சென்று சிவபெருமானை நோக்கித் தவம் செய்யுங்கள். வேண்டிய வரங்களைப் பெற்று வாழுங்கள்! என்று உபதேசம் செய்தார். சூரபத்மனும் அவனது தம்பியரும் சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் மேற்கொண்டனர். தவத்தின் பயனாக, சூரபத்மன் சிவபெருமானிடம் 1008 அண்டங்களையும், 108 யுகங்கள்வரை ஆளும் வரத்தைப் பெற்றான். தம்பியரான தாரகனும் சிங்கமுகனும் வரங்களைப் பெற்றனர்.

சிவன் கொடுத்த வரம்
சூரபத்மன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து 108 யுகம் உயிர் வாழவும் 1008 அண்டம் அரசாளவும் இந்திர ஞாலம் எனும் தேரையும் வரமாக பெற்றான். மேலும் தனக்கு சாகாவரம் வேண்டும் என சூரபத்மன் சிவனிடம் கேட்டான். பிறந்தவன் மடிந்தே தீர வேண்டும் என்ற சிவன், எந்த வகையில் அவனுக்கு அழிவு வர வேண்டும் எனக் கேட்டார். சூரபத்மன் புத்திசாலித்தனமாக, ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்காத பிள்ளையால் தான் தனக்கு அழிவு வர வேண்டும் எனக் கேட்டான்.

தேவர்கள் அச்சம்
சாகா வரத்தைப் பெற்ற சூரபத்மனும் அவன் சகோதரர்களும் தன் குலகுருவான சுக்ராச்சாரியரின் ஆசியுடன் இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களையும் சிறையிலடைத்தனர். இந்திரன் சூரபத்மனுக்கு பயந்து பூலோகம் வந்து ஒளிந்து கொண்டான். இந்திரனின் மகனான ஜயந்தனையும் அவனது தோழர்களையும் கிரெளஞ்ச மலையில் சிறை வைத்தான். சூரபத்மன் ஒரு கட்டத்தில் அளவு கடந்து இனி தாங்க முடியாது என்ற நிலைமை உண்டாயிற்று. தேவர்கள் எல்லோரும் கூடிச் சிவபெருமானைச் சரணடைந்தனர். தங்களைக் காக்கும்படி முறையிட்டனர்.

முருகப்பெருமான் அவதாரம்
சிவனும் அவர்களைக் காப்பாற்றும் நோக்குடன் பார்வதியின் தொடர்பின்றி, தனது ஆறு நெற்றிக் கண்களைத் திறக்க அவற்றிலிருந்து தோன்றிய ஆறு ஆறு தீப்பொறிகளையும் எடுத்துச் சென்று கங்கையிடம் அளித்தான். அவள் அவற்றைத் தனது உற்பத்தித் தானமாகிய நாணற்காட்டில் இருந்த சரவணப் பொய்கையில் விட்டாள். அங்கு அவை ஆறும் அழகிய குழந்தைகளாக உருவாயின. அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் சீராட்டி வளர்த்தனர். இந்த ஆறு திருமுகங்களும் ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீரியம், வைராக்கியம், புகழ் எனும் ஆறு குணங்களைக் குறிக்கிறது.

வேல் கொடுத்த பார்வதி
அந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி கட்டி அணைக்க ஆறு முகங்களும் இரு கரங்களும் கொண்ட முருகப் பெருமானாகத் தோன்றினர். சிவபெருமான் முருகனை அழைத்து, "குமாரனே! நீ விரைந்து சென்று சூரனாதியரை வென்று தேவர்களுக்கு வாழ்வு தருக" என்று ஆணை மொழிந்தார். பிறகு சிவபெருமான் தனது அம்சமான பதினோரு ருத்திரர்களின் அம்சத்திலிருந்து பதினோரு ஆயுதங்களை அளித்தார். பிறகு பார்வதியிடம் "முருகனுக்கு ஆயுதமொன்றை வழங்குக" என்றார். பகைவரை எளிதில் அழித்து வெற்றியை அடைந்து மீள்வதுமான வலிய வேலாயுதத்தைப் படைத்து அவரிடம் அளித்தாள். சிவசக்தியரின் அம்சமாகவே வேல் தோன்றியது.

திருச்செந்தூரில் சம்ஹாரம்
முருகப்பெருமான் தேவகுரு பிரகஸ்பதி மூலம் அசுரர்களின் வரலாற்றினை அறிந்தார். அசுரர்களை அழிக்க நினைத்த முருகன் முதலில் சிங்கமுகன், தாரகாசுரன், அவன் மகன் என எல்லா சேனைகளையும் ஐந்து நாட்களில் அழித்தார். ஆறாம் நாள் எஞ்சியவன் சூரபத்மன்தான். மா மரமாக வடிவெடுத்து வந்த சூரபத்மனை சம்ஹாரம் செய்து சேவலும் மயிலுமாக ஆக்கி, தன் கொடியாகவும், வாகனமாகவும் அமைத்துக்கொண்டு கௌரவம் அளித்தார் முருகப்பெருமான்.

சிவபூஜை செய்த முருகன்
சூரசம்ஹாரத்தோடு விழா முடிவதில்லை. தேவர்களுக்கு முருகன் செய்த உதவிக்கு கைம் மாறாக, இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்து வைத்தான். எனவே மறுநாள் முருகன்- தெய்வானை திருமண வைபவத்தோடுதான் விழா நிறைவு பெறுகிறது. சூரசம்ஹாரம் முடிந்தபின் முருகன் சிவபூஜை செய்ய விரும்பினார். அதற்காகக் கடற்கரையில் கட்டப்பட்ட கோவில்தான் திருச்செந்தூர் கோவில். இங்கு மூல ஸ்தானத்தின் பின்பகுதியில் முருகன் பூஜை செய்த சிவலிங்கங்கள் உள்ளன.

பக்தர்களுக்கு அனுமதியில்லை
ஆண்டு தோறும் ஐப்பசி மாத கந்த சஷ்டி விழாவை காணவும் சூரசம்ஹாரம் காணவும் கடல் அலையென பக்தர்கள் திருச்செந்தூரில் திரள்வார்கள். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு சூரசம்ஹாரம் பக்தர்கள் பங்கேற்பு இன்றி நடைபெற்றது. நடப்பாண்டு வரும் நவம்பர் 4ஆம் தேதி கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் தொடங்க உள்ளது. நவம்பர் 9ஆம் தேதி சூரசம்ஹாரமும் 10ஆம் தேதி திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது. சூரசம்ஹார நிகழ்வையும், திருக்கல்யாணத்தையும் காண பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications