For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விஜயதசமி : குலசை முத்தாரம்மன் கோவிலில் சூரசம்ஹாரம் - குமரி பகவதி அம்மன் கோவில் பரிவேட்டை

விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு குலசை முத்தாரம்மன் கோவிலில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவின் சிகர நிகழ்ச்சியான பரிவேட்டை திருவிழா நடைபெற்றது.

Google Oneindia Tamil News

குலசேகரன்பட்டினம் தசரா பண்டிகையை முன்னிட்டு தன்னுடன் போரிட வந்த மகிஷாசூரனை சூலாயுதம் கொண்டு வதம் செய்தார் முத்தாரம்மன். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் பங்கேற்பின்றி கோவிலின் முன்பாக சூரசம்ஹாரம் எளிமையாக நடைபெற்றது.கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவின் சிகர நிகழ்ச்சியான பரிவேட்டை திருவிழா நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரசித்தி பெற்ற தசரா திருவிழா இந்த ஆண்டு கடந்த 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி பல்வேறு ஊர்களிலும் விரதம் இருந்த பக்தர்கள் காப்புக்கட்டி, நேர்த்திக்கடனாக பல்வேறு சுவாமிகளின் வேடங்களை அணிந்து, அந்தந்த ஊர்களில் காணிக்கை வசூலித்தனர்.

Vijayadasamy: Soorasamaharam at Kulasai Mutharamman Temple - Kumari Bhagvathi Amman Parivettai

தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 10ஆம் திருநாளான நேற்று இரவில் நடந்தது. இதையொட்டி காலை அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. நள்ளிரவு 12 மணியளவில் கோவில் சிம்மவாகனத்தில் எழுந்தருளி அம்மன் தன்னுடன் போரிட வந்த மகிஷாசூரனை சூலாயுதம் கொண்டு வதம் செய்தார். சூரசம்ஹாரம் முடிந்ததும் அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் பக்தர்கள் பங்கேற்பின்றி கோவிலின் முன்பாக சூரசம்ஹாரம் எளிமையாக நடைபெற்றது. விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் யூ-டியூப் இணையதளத்திலும், உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டன. பக்தர்கள் இதனைக் கண்டு தரிசனம் செய்தனர். சூரசம்ஹாரம் முடிந்ததை அடுத்து காப்புக்கட்டி விரதம் இருந்த பக்தர்கள் தங்களின் விரதத்தை முடிக்கின்றனர்.

கன்னியாகுமரி பகவதி அம்மன் பாரிவேட்டை

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா கடந்த 6ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. 10வது நாளான நேற்று நவராத்திரி விழாவின் சிகர நிகழ்ச்சியான பரிவேட்டை திருவிழா நடந்தது.

வியாழக்கிழமையன்று அம்மன் வேட்டைக்கு பயன்படுத்தும் வில், அம்பு மற்றும் வாள் போன்றவை கோவிலில் உள்ள கொலுமண்டபத்தில் எழுந்தருளி இருந்த உற்சவ அம்பாள் முன்பு பூஜையில் வைக்கப்பட்டு இருந்தது. இரவு பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி கோவிலை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க பவனி வந்தார்.

பரிவேட்டை திருவிழாவையொட்டி நேற்று அதிகாலை 4.30 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், பன்னீர், இளநீர், தேன், களபம், சந்தனம், குங்குமம் ஆகிய 8 வாசனை திரவியங்களாலும், புனித நீராலும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் காலை 9 மணிக்கு கோவிலின் வெளிப்பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் எலுமிச்சம் பழம் மாலை மற்றும் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 4 மணியளவில் அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி மகாதானபுரம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டார். அப்போது அம்மனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசாரின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

வாகனத்துக்கு முன்பாக வாள், வில், அம்பு ஏந்தியபடி சென்றனர். இந்த ஊர்வலம் 4 வழிசாலை ரவுண்டானா சந்திப்பு வழியாக மகாதானபுரத்தில் உள்ள பரிவேட்டை மண்டபத்தை சென்று அடைந்தது. அதன்பிறகு அம்மன் எழுந்தருளி இருந்த வெள்ளி குதிரை வாகனத்தை வேட்டை மண்டபத்தை சுற்றி 3 முறை வலம் வரச்செய்து வாகனத்தை கிழக்கு நோக்கி நிறுத்தி வைத்தனர். பின்னர் பரிவேட்டை நடைபெற்றது. அப்போது கோவில் மேல்சாந்தி வேட்டை மண்டபத்துக்கு உள்ளே 4 பக்கமும் அம்பு எய்தார். அதன்பிறகு வேட்டை மண்டபத்துக்கு வெளியே 4 திசையைநோக்கி அம்புகளை எய்தார்.

இறுதியாக ஒரு தென்னை இளநீரின் மீது அம்பு எய்தார். அம்பு பாய்ந்த தென்னை இளநீரை கோவில் ஊழியர் ஒருவர் கையில் ஏந்தியபடி அம்மன் எழுந்தருளி இருந்த வாகனத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க ஓடி ஓடி வலம் வந்தார். இந்த நிகழ்வானது பானாசுரன் என்ற அரக்கனை அம்மன் அம்பு எய்து வதம் செய்து அழித்தார் என்பது ஐதீகம். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் பாரிவேட்டை நிகழ்ச்சியை தரிசனம் செய்தனர்.

பரிவேட்டை நிகழ்ச்சி முடிந்ததும் அம்மன் மகாதானபுரத்தில் உள்ள நவநீதசந்தான கோபாலகிருஷ்ணசாமி கோவிலுக்கு முன்பு சென்று நின்றார். அங்கு பகவதி அம்மனுக்கும் நவநீதசந்தான கோபாலகிருஷ்ண சுவாமிக்கும் ஒரே நேரத்தில் தீபாராதனை நடந்தது. பின்னர் அம்மன் மீண்டும் கன்னியாகுமரிக்கு புறப்பட்டு சென்றார்.

Recommended Video

    அய்யா வைகுண்ட தர்மபதி கோயில் உற்சவம்… 1000 பெண்களின் சரவிளக்கு பூஜை

    கொரோனா ஊரடங்கினால் பக்தர்கள் தேங்காய், பழம் படைத்து வழிபட அனுமதிக்கப்படவில்லை. அம்மன் ஊர்வலமாக சென்ற பாதையில் வழிநெடுகிலும் சாலையின் இருபுறமும் ஏராளமான பக்தர்கள் திரண்டு நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.

    English summary
    Kulasekaranpattinam Mutharamman killed Mahishasura who came to fight with him on the eve of Dasara festival. Due to the corona restrictions, the procession was simply held in front of the temple without the participation of the devotees.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X