Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சினிமாவை சினிமாவாகப் பார்க்காமல் அரசியலாக விமர்சிப்பது சரிதானா? அ. குமரேசன்

Subscribe to Oneindia Tamil

நம்மிடம் வருகிற ஒன்றை எந்த விமர்சனமும் இல்லாமல் ஏற்றுக்கொள்வது நமக்கும் நல்லதல்ல, அதற்கும் நல்லதல்ல. எதையும் விமர்சனப் பார்வையோடு அணுகுவது ஒரு கலை, அத்துடன் அது ஒரு கடமையுமாகிறது. அரசியல், சமூகம், ஆன்மீகம், கலை, இலக்கியம் என அனைத்திற்கும் இது பொருந்தும். விமர்சனமில்லாத இலக்கியம் விளக்கில்லாத பாதையைப் போன்றது என்றொரு ஆங்கில மேற்கோள் நினைவுக்கு வருகிறது. பகல்நேரத்தில் விளக்கெதற்கு என்று கேட்டு விமர்சனத்தை ஒதுக்கிவிட முயல்வோரோடு என்ன பேசுவது?

அண்மையில் வெளியான ஒரு திரைப்படத்திற்கு வந்த விமர்சனங்களைப் பார்த்த சிலர், "ஒரு சினிமாவை சினிமாவாகப் பார்க்காமல் இப்படி அதிலே போய் அரசியல், சமூகப் பிரச்சினைகளை அலசுவது சரிதானா," என்று கேட்டார்கள். "முழுநீளப் பொழுதுபோக்கு எனப்படும் படங்கள் உண்மையில், இருக்கிற நிலைமை மாறக்கூடாது என்ற அரசியலைத்தான் கட்டமைக்கின்றன. ஆகவே எந்தப் படமானாலும் அதன் அரசியல், சமூகக் கண்ணோட்டங்களை விமர்சிக்கத்தான் வேண்டும்," என்று சிலர் பதிலளித்தார்கள். இன்று தமிழ் கலை-இலக்கியப் படைப்புகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்றால், அதற்குக் காரணம் கடந்தகால விமர்சனங்கள்தான்.

விமர்சனம் என்றால் என்ன? மானுட இயக்கத்திற்கே அடிப்படையான கருத்து வெளிப்பாட்டின் செதுக்கப்பட்ட வடிவம்தான் விமர்சனம். எந்தவொரு செயலிலும் காணக்கூடிய குணங்களையும் குறைகளையும் மதிப்பிடுகிறோம். சாப்பிடும் உணவு சுவையாக இருக்கிறது அல்லது தரமாக இல்லை என்று சொல்வது முதல், கேட்கும் இசை மயக்குகிறது அல்லது விரட்டுகிறது என்று சொல்வது வரை வாழ்க்கையில் எதிர்கொள்ளும் எதனைப் பற்றியும் நமக்கு ஏற்படுகிற கருத்தை வெளிப்படுத்துவதே விமர்சனம். அரசாங்க நடவடிக்கைகள், நீதிமன்றத் தீர்ப்புகள், தனி மனிதச் செயல்பாடுகள், அமைப்புகளின் நடைமுறைகள் என அனைத்தும் விமர்சனத்திற்கு உட்படுத்தப்படுகின்றன.

Cinema Criticism with Politics- A Kumaresan

நிறை, குறை இரண்டையுமே மதிப்பிடுவதே விமர்சனம் என்று அகராதிகள் சொல்கின்றன என்றாலும், அதென்னவோ விமர்சனம் என்றாலே குறைகளை மட்டுமே சொல்வதாகிவிட்டது. விமர்சனமே ஒரு படைப்பாக்கம்தான் என்று சொல்லப்படுவதுண்டு. விமர்சகர்கள் அல்லது திறனாய்வாளர்கள்தான் அப்படிச் சொல்லிக்கொள்கிறார்களோ என்ற கேள்வி மனசுக்குள் ஓடுவதுமுண்டு!

தமிழில் விமர்சனக் கலைக்கான அங்கீகாரம் இருக்கிறதா? சில இலக்கிய அமைப்புகள் திறனாய்வு நூல்களுக்கென விருது வழங்குகின்றன. நூல் திறனாய்வுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஆயினும், திறனாய்வு நூல் தேர்வுகளுக்கு விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய அளவிலேயே நூல்கள் வருகின்றன என்று அந்த அமைப்புகள் தெரிவிக்கின்றன. மேற்குலகில், படைப்பாக்கங்களுக்கு இணையாக, விமர்சன நூல்களும் வருகின்றன. இலக்கிய விவாத அரங்குகளில் அந்த நூல்களும் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இந்தியாவின் இதர மொழிகளில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை, ஆனால் தமிழில்? திறனாய்வு நூல்கள் வருவதே குறைவு, அந்நூல்கள் திறனாய்வுக்கு உட்படுத்தப்படுவதோ மேலும் குறைவு.

நடுநிலையும் நழுவுநிலையும்

"திரைப்படமோ, இலக்கியமோ பல விமர்சகர்கள் நடுநிலையாக நிற்பதில்லை. ஏதோவொரு சித்தாந்தச் சாய்வுடன்தான் விமர்சிக்கிறார்கள். இங்கே திறனாய்வு நூல்கள் நிறைய வராததற்கு இதுவொரு காரணமாக ஏன் இருக்கக்கூடாது," என்ற கேள்வியைச் சில அன்பர்கள் முன்வைக்கிறார்கள். "திரைப்படத்தைக் கூட அவரவர் அரசியல், சமூகக் கண்ணோட்டத்துடன்தான் பார்க்கிறார்கள். அது அவர்களின் விமர்சனங்களிலும் வெளிப்படுகிறது. பிறகு எப்படி இங்கே, மேற்கத்திய நாடுகள் போல நடுநிலையான, அடர்த்தியான, ஆழமான திரைப்பட விமர்சனங்கள் வரும்," என்றும் அந்த அன்பர்கள் கேட்கிறார்கள்.

நியாயமானதாக ஒலித்தபோதிலும், புனித முலாம் பூசப்பட்டிருக்கிற "நடுநிலை" என்ற கருத்தாக்கத்திலிருந்தே இந்தக் கேள்வி வருவதாகக் கருதுகிறேன். சரி, தவறு என்ற மதிப்பீடுதான் விமர்சனமென்றால், ஒருவர் தனக்கு எது சரி அல்லது தவறு என்று படுகிறதோ அதை நேர்மையாக வெளிப்படுத்தத்தான் வேண்டும். அந்தச் சரி அல்லது தவறு என்ற புரிதல் அவரது அரசியல், சமூகக் கொள்கையிலிருந்தே ஏற்படும். அதை அவர் பூசி மெழுகாமல் வெளிப்படுத்துவதே தரமான விமர்சனம். அதேவேளையில், இன்னொருவர் தனது அரசியல், சமூகப் பார்வையின் அடிப்படையில் மாறுபடலாம். முதலாவது விமர்சகர் "சரி" என்று கருதுவதை, இரண்டாவது விமர்சகர் தவறு என்று கருதலாம். அவரும் அதைப் பூசி மெழுகாமல் வெளிப்படுத்துகிற உரிமை அவருக்கு இருக்கிறது.

அப்படியானால் இதில் நடுநிலைக்கே இடமில்லையா? இருக்கிறது. ஒரு புத்தகம் அல்லது திரைப்படம் என்ன சொல்கிறது என்பதை, எவ்விதத் திரிப்பு வேலையும் செய்யாமல், அதில் எப்படிச் சொல்லப்பட்டிருக்கிறதோ அப்படியே எடுத்துக்காட்டுகிற அளவில் அந்த நடுநிலை வெளிப்பட வேண்டும். பின்னர் அது பற்றிய தனது நிலைப்பாட்டைக் கறாராகப் பதிவு செய்ய வேண்டும். ஒரு படத்தில் "இத்தனை நல்ல விசயங்கள் இருக்கின்றன," என்று ஐந்து காட்சிகளையும், "இத்தனை மோசமான விசயங்கள் இருக்கின்றன," என்று ஐந்து காட்சிகளையும் வரிசைப்படுத்திவிட்டு, "மொத்தத்தில் இது நல்ல படமா இல்லையா என்று முடிவு செய்வதை வாசகர்களிடமே விட்டுவிடுகிறோம்," என்று கூறுவது நடுநிலையல்ல, நழுவுநிலைதான்.

கொள்கைச் சார்பு நிலையிலிருந்து ஒரு படைப்பை விமர்சிப்பது நியாயமானது. தேவையானதும் கூட. ஆனால், வேண்டியவர் வேண்டாதவர் என்ற ஆள் சார்பு நிலையிலிருந்து கொண்டாட்டக் கொடி பறக்கவிடுவதோ, கிழித்துத் தொங்கப் போடுவதோ விமர்சன நேர்மையிலிருந்து விலகுவதாகிவிடுகிறது. படைப்பாளிக்கு ஆதரவு-எதிர்ப்பு என அணி பிரிந்து, சேர்ந்திருந்தால் கொடி பறக்கவிடுவதையும், விலகியிருந்தால் தொங்கப் போடுவதையும் பல நேரங்களில் காண முடிகிறது.

மாறுபடும் உரிமை

அதே போல, ஒருவர் தனது விமர்சனத்தை வைத்த பிறகு, எல்லோரும் அப்படியே ஏற்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. அவருடைய விமர்சன உரிமையைப் போலவே,. அவருடைய கருத்துடன் மாறுபட்டு எதிர் விமர்சனத்தை வைக்கிற உரிமையும் இருக்கிறது. தொடர் விவாதங்கள்தான் விமர்சனச் சுதந்திரத்திற்கான வெளியை விசாலமாகத் திறந்துவைக்கும். ஆரோக்கியமான விவாதங்கள், தொடர்வதற்கான விமர்சனத் தரம் பேணப்பட வேண்டும். 'சார்பட்டா பரம்பரை' திரைப்படத்தின் நுண்ணரசியல் மற்றும் நேரடி அரசியல் பற்றி 'ஒன் இந்தியா தமிழ்' தளத்தில் வெளியான எனது கட்டுரையுடன் முரண்பட்ட ஒரு நண்பர், "இதுக்கு அந்தப் பருத்திக் கிடங்கிலேயே கிடக்கலாம்," என்று எதிர்க்கருத்தைப் பதிவிட்டிருந்தார். எனக்குச் சந்தேகம் வந்துவிடக்கூடாது என்று (அதாவது மற்றர்களுக்குச் சந்தேகம் வந்துவிடக்கூடாது என்று), "உங்கள் விமர்சனத்தைத்தான் சொல்கிறேன்," என்று விளக்கக்குறிப்பும் இட்டிருந்தார். பருத்திக் கிட்டங்கியில் கிடக்கிற உழைப்பாளிகள் இழிவானவர்களா என்று கேட்கலாம் என்றாலும், திசைமாறிவிடக் கூடாது என்பதற்காக, அதை ஒரு நயமான விமர்சன வெளிப்பாடாக எடுத்துக்கொண்டு விட்டுவிட்டேன். எதிர்விமர்சனத்தை எதிர்கொள்ளும் இந்தப் பக்குவத்தைப் பெற எத்தனை கால உள்போராட்டம் எனக்குத் தேவைப்பட்டிருக்கிறது!

இது விமர்சனமா அல்லது விளம்பரமா என்று கேட்க வைப்பதாகப் பல பத்திரிகைகளில் எழுதப்படுகின்றன, தொலைக்காட்சிகளில் காட்டப்படுகின்றன. படத்தின் நீளத்தைக் குறைத்திருக்கலாம், பிற்பகுதியில் விறுவிறுப்பைக் கூட்டியிருக்கலாம், நடிகர் இன்னும் கொஞ்சம் உணர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கலாம், பின்னணி இசையில் கூடுதலாகக் கவனம் செலுத்தியிருக்கலாம் என்பதாக "இருக்கலாம்" ரகத்தில் மேலோட்டமான "விமர்சனங்கள்" மட்டுமே இருக்கும். அந்தப் படங்களுக்கான விளம்பரக் கட்டண வருவாய்தான் இதற்குக் காரணமா?

தற்போது வெளியாகியிருக்கும் 'திட்டம் இரண்டு' படத்தின் இரண்டாவது கதாநாயகி கதறி அழுகிற காட்சி பற்றி எழுதியுள்ள ஒரு பத்திரிகை, "இப்படி அந்தப் பெண் அழுவதாகத்தான் காட்ட வேண்டுமா" என்று கேட்டிருக்கிறது. அந்த நேரத்தில், அந்தச் சூழலில் கதறி அழுத பெண்ணின் கதையாக எடுத்துக்கொள்ளாமல், இப்படி அழுவதாகத்தான் காட்ட வேண்டுமா என்று கேட்பது, பெண்ணை அழவிடக்.கூடாது என்ற அக்கறையிலிருந்து வருகிறதா அல்லது கலைச் சித்தரிப்பு பற்றிய புரிதல் பற்றாக்குறையிலிருந்து வருகிறதா?

இல்லாத ஆளை அடிப்பது

ஒரு நாவலில் சித்தரிக்கப்பட்டிருக்கிற ஒரு நிகழ்வு சரியா தவறா, சித்தரிக்கப்பட்டிருக்கிற விதம் ஈர்க்கிறதா சோர்வைத் தருகிறதா என்றெல்லாம் விமர்சிக்கலாம். ஆனால், அதில் எழுத்தாளர் சித்தரிக்காத ஒன்றைக் குறிப்பிட்டு, அதைப் பற்றி ஏன் எழுதவில்லை என்று கேட்கப்படுவதுண்டு. எதைப் பற்றி எழுத வேண்டும், அதை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்று படைப்பாளி முடிவு செய்யலாம் - அது படைப்புரிமை. அவர் எழுதியிருப்பதை ஏற்றுக் கைத்தட்டலாம், எதிர்த்துப் புரட்டியடிக்கலாம் - அது விமர்சன உரிமை. ஆனால், படைப்பாளி சொல்லாமல் விட்டதை எடுத்துக்கொண்டு அதையே விவாதமாக மாற்றுவதில் பொருத்தப்பாடு இல்லை.

இதிலும் இரண்டு வகையினரைப் பார்க்க முடிகிறது. விடுபட்டுப் போனதைச் சேர்த்திருந்தால் படைப்பு முழுமையாகியிருக்கும், அதைச் சேர்ப்பது ஒரு வரலாற்றுப் பொறுப்பு என்ற சமூக அக்கறையோடு சுட்டிக்காட்டுகிறவர்கள் ஒரு வகை. குறிப்பிட்ட நிகழ்வு பற்றித் தனக்குத் தெரியும் என்று காட்டிக் கொள்கிறவர்கள் இன்னொரு வகை. முதல் வகையினரின் அணுகுமுறையில் எனக்கு மாறுபாடு உண்டென்றாலும், அவர்களது அந்த அக்கறை மதிக்கப்பட வேண்டியது.

வரலாற்றை வரலாறாக மட்டுமே பதிவு செய்யும் ஆவணத்திற்கும், வரலாறு சார்ந்த புனைவுக்குமான, படைப்புரிமை சார்ந்த வேறுபாடு பற்றிய புரிதல் இல்லாத, புரிந்தாலும் ஏற்றுக்கொள்ள மறுக்கிற மனநிலையிலிருந்தும் இது வெளிப்படுகிறது. இது அவர்களின் உரிமை என்ற அளவோடு நிற்க வேண்டியதாகிறது. 'சார்பட்டா' பற்றிய எனது கட்டுரையைப் படித்த ஒரு மூத்த தலைவர், "குத்துச்சண்டைக் கலையை மீட்பதுதான் நோக்கமென்றால் கதையை வேறு மாதிரி எழுதியிருப்பார்கள்," என்று கூறினார். அந்தப் படத்தின் நோக்கம் குத்துச்சண்டைக் கலையை மீட்பதல்ல, சுயநலப் பேர்வழிகளும், அரசியல் போட்டியாளர்களும் எப்படி அந்தக் கலையை வன்முறை மோதலாக மாற்றினார்கள் என்று விமர்சிப்பதுதான். மாற்றுக் கருத்துகளை மதிக்கத்தெரிந்த அந்தத் தலைவருடன் இது பற்றி உரையாட விருப்பம். வாய்ப்பு அமைகிறபோது, அவசரநிலை ஆட்சிக்காலத்தைக் காட்டுகிற படத்தில், திமுக-வைச் சேர்ந்த ரங்கன் வாத்தியாரைப் போலவே எதிர்த்துப் போராடி சிறை சென்ற செங்கொடி இயக்கத்தினரைக் குறியீடாகக் கூட காட்டவில்லையே ஏன் என்று இயக்குநர் ரஞ்சித்திடமும் கேட்க விருப்பம்.

குறிப்பிட்ட புத்தகம் அல்லது திரைப்படத்தின் இதர எல்லாக் கூறுகளையும் விட்டுவிட்டு, ஏதாவது ஒன்றை மட்டுமே மையப்படுத்தி விமர்சிக்கிற எழுத்துகளும் வருகின்றன. இந்தத் திரைப்படம் பற்றியும் அவ்வாறு வந்திருக்கிறது. குத்துச் சண்டைக் கலை வளர்ப்பில் மீனவர்களின் பங்களிப்பு பற்றி சொல்லப்படவில்லை என்ற ஆதங்கம் வெளிப்பட்டிருக்கிறது. புனைவில் எதை மையப்படுத்துவது என்ற படைப்பாளியின் உரிமை ஒருபுறமிருக்க, படத்தின் பிற்பகுதியில் இனி தேற மாட்டான் என்று அவனுடைய வாத்தியாராலேயே கைவிடப்பட்ட நாயகனை மற்றொரு முன்னாள் ஆட்டக்காரர் ஒரு மூத்த மீனவரிடம்தான் பயிற்சிக்கு அழைத்துச் செல்கிறார். வாத்தியாருக்கும் குழுவைச் சேர்ந்த பல சிறந்த குத்துச்சண்டை வீரர்களுக்கும் குரு அவர்தான் என்று தெரிவிக்கிறார். கடும் பயிற்சிகளாலும் ஊக்கச் சொற்களாலும் அவனைத் தகுதிப்படுத்துகிறார் அந்த பீடி ராயப்பன். இது மீனவர் பங்களிப்புக்கான ஒரு அழகிய வெளிப்பாடுதானே? மேற்படி இரண்டு திரைப்படங்களும் அண்மையில் வந்தவை என்பதால் இங்கே மேற்கோள் காட்டப்படுகின்றன - அவற்றிற்கு விளம்பரமாக அல்ல.

அடிக்கருத்தும் அழகியலும்

படைப்புலக அழகியல் பற்றிப் பேசுகிறபோது, அதன் பல்வேறு நுட்பங்களுக்கு மட்டுமே அழுத்தம் கொடுத்து, உள்ளடங்கிய கருத்துகளைப் புறந்தள்ளுகிற விமர்சனங்களும் வருவதுண்டு. வடிவ நுணுக்கங்களைப் பேசாதவர்களை கலைக்கல்வி பெறாதவர்களாகக் கீழ்த்தட்டிற்கு இறக்கிவிடுவார்கள். உள்ளடக்கத்திற்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து, அழகியல் கூறுகளைக் கண்டுகொள்ளாத விமர்சனங்களும் உண்டு. மையமான செய்திகளைப் பேசாதவர்களை சமூகநோக்கம் இல்லாதவர்களாக விளிம்புக்குத் தள்ளிவிடுவார்கள். இந்த இரு சாராரும் இணைவதில்தான் படைப்புக்கலை - விமர்சனக்கலை இரண்டுமே தழைத்திருக்கும்.

இந்தக் கவிதையால் மாற்றம் வந்துவிடுமா, இந்தக் கதையால் புதுமை நிகழ்ந்துவிடுமா, இந்தப் படத்தால் புரட்சி வெடித்துவிடுமா என்று சலிப்போடு ஒதுங்குகிற விமர்சனம் தனி ரகம். தனி மனிதர்கள், அரசியல் அமைப்புகள், சமூக இயக்கங்கள் இவையெல்லாம் சும்மா இருக்க, ஒரு படைப்பு மட்டுமே சுழன்றாடி முழுப்புரட்சியையும் நடத்திவிட வேண்டும் எதிர்பார்ப்பது போன்றது அது. சமுதாயம்தான் மாற்றத்தை நிகழ்த்த முடியும். அதற்கொரு தூண்டுதலாகும் படைப்புக் கலை. அதற்கொரு துணையாகச் சேரும் விமர்சனக்கலை.

இறுதியாக ஒன்று - விமர்சனம் பற்றிய இந்த விமர்சனமே இறுதியான கருத்தாக இருக்க வேண்டுமென்பதில்லை. கருத்துகளின் உறவாடலில் புதுப்புது கருத்துகள் பிறக்கட்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+