மயிலாடுதுறையின் ஏக்கம்!

Subscribe to Oneindia Tamil
Road
-வைத்தியநாதன் செளமியன்

ஆயிரம் ஆனாலும் மாயுரம் ஆகாது என்ற புகழ் கொண்டது- 80களின் ஆரம்பம் வரை மாயுரம் என்றும் அதன் பிறகு மயிலாடுதுறை என்றும் பெயர் பெற்றிருக்கும் மயிலாடுதுறை. பல வரலாற்றுச் சிறப்புக் கொண்ட மிக மிக அழகிய சிறு நகரம்.

காவேரி கடலில் கலப்பதற்கு முன் கடக்கும் பெறு நகரம்!

அதுவும் நகரை இரண்டாகப் பிளந்து கொண்டு ஊருக்கு நடுவே வளைந்து நெளிந்து செல்லும் அழகே அழகு…!

தமிழகத்தின் நெற்களஞ்சியமான பழைய தஞ்சை மாவட்டத்தில் எப்பொழுதும் மிக அதிக மகசூலைக் கொடுத்து முதலிடத்தில் இருப்பது மயிலாடுதுறை தாலுகாவே!

காரணம் டெல்டா என்றாலே ஒரு பெரிய நதி கடலில் கலக்கும் பகுதியை தான் குறிக்கும். நாம் மேலே குறிப்பிட்டது போல் காவேரி கடல் புகும் முன் கல்ககும் பெறு நகரமே மயிலாடுதுறை தான். பெருமை மிகு அந்த காவிரித்தாய் கடல் புகும் முன் கர்நாடகத்தில் இருந்து கடத்தி வந்த சத்துக்கள் அனைத்தையும் சத்தமில்லாமல் இங்கேயே படியவைத்துவிட்டு வெறும் தண்ணீராக மட்டுமே கலக்கிறாள். சில சமயம் கலப்பதற்கு தண்ணீரே இல்லாமல் மயிலையிலேயே 'தங்கி விடுவதும்' உண்டு.

அதனால் தான் மயிலாடுதுறை தாலுக்காவில் மட்டும் விளைச்சலுக்கு பஞ்சமிருந்ததில்லை.

காவிரி ஆற்றில் பிரிந்து காவிரியிலேயே கலக்கும் பழங்காவேரி என்னும் ஆறு அல்லது வாய்க்கால் என்று கூட சொல்லலாம். அது தன் பங்கிற்கு சில கிளை வாய்க்கால்களையும் சேர்த்துக்கொண்டு மயிலை நகர் முழுவதும் அனைத்து 39 வார்டுகளிலும் குறுக்கும் நெடுக்கும் வலைய வரும் அழகே அழகு…!

தமிழகத்தின் எந்தவொரு மூலைக்கும் அங்கிருந்து எந்தவொரு வட மாநிலத்திற்கும் செல்லக்கூடிய மிக முக்கியமான ரயில்வே சந்திப்பு.

ஆயிரத்தி இறுநூறு வருடங்களுக்கும் மேல் பழமை வாய்ந்த ஒன்பது சைவ வைணவ பெரிய கோவில்கள் - நகருக்குள்ளேயே…!

ஆறு மணி நேரத்தில் அனைத்து நவக்கிரக ஸ்தலங்களையும் தரிசனம் பண்ணி திரும்பக்கூடிய மையத்தில் அமைந்திருக்கும் நகரம்…!

அரசியலை எடுத்துக்கொண்டால் எந்த ஜாதி மதமும் வேட்பாளர்களின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க முடியாதபடி சம அளவில் கலந்திருப்பதும்…அது மட்டுமில்லாமல் பாராளுமன்றத்திற்கு மூன்று முறை இஸ்லாமியரையும் மூன்று முறையாக பிராமணரையும் பிரதிநிதியாகவும் அனுப்பியதோடு சட்டமன்றத்திற்கு இங்கிருந்து முஸ்லிம் பிரதிநிதியும் சென்றுள்ளார், பாஜக பிரதிநிதியும் சென்றுள்ளார்.

இது இந்த நகர மக்களின் ஜாதி, சமய வெறியற்ற பரந்த மனப்பான்மையை மட்டுமே காட்டுகிறது!

இதே போல் மயிலாடுதுறை நகரின் அழகையும் தொன்மையையும் பாரம்பரியத்தையும் மக்கள் பற்றியும் இன்னும் பெறுமைகளை கூறிக்கொண்டே செல்லலாம். ஆனால் நாம் சொல்ல வந்த விஷயத்தின் வீரியம் குறைந்துவிடும். ஆகையால் தற்பொழுது நேரடியாக விஷயத்திற்கு வருவோம்.

“புதிய பேருந்து நிலையம்"...

கடந்த 20 வருடங்களாக காங்கிரஸ், திமுக, அதிமுக, பாஜக என்று அனைத்து கட்சி பிரதிநிதிகளையும் இந்த மக்கள் தேர்ந்தெடுத்துப் பார்த்தும் இதுவரை புதிய பேருந்து நிலைய கோரிக்கை நிறைவேறாததோடு மட்டுமல்லாமல் மக்கள் வயிற்றில் புளியை கரைப்பது போல் பழைய பேருந்து நிலையத்தை தற்பொழுது புதுப்பிப்பதாகச் சொல்லி சிமெண்ட் ரோடு போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படியானால் இனி மற்ற ஊர்களைப்போல் நெருக்கடியில்லாத விசாலமான புது பேருந்து நிலையம் இங்கு அமையும் சாத்தியக்கூறுகளை அழித்துக் கொண்டிருக்கிறார்களா…?

மக்களின் 20 வருடகால ஏக்கம் ஏமாற்றமாகி விரக்திவயப்பட்டு தற்பொழுது பழைய பேருந்து நிலைய புதுப்பிப்பால் கோபமாக உறுமாறிக் கொண்டிருப்பதை சம்பந்தப்பட்டவர்கள் அறிவார்களா…?

20 வருடங்களுக்கு முன் மயிலாடுதுறையோடு சமமான நகரமாக பார்க்கப்பட்ட கும்பகோணம் தற்பொழுது ஊர் எல்லையை தாண்டி புது பேருந்து நிலையம், அதுவரை நகர விஸ்தரிப்பு, பெரிய காய்கறி அங்காடி, மீன் அங்காடி, இன்னும் பிற….! அங்கு சென்றாலே மயிலாடுதுறை மக்களுக்கெல்லாம் ஒரு பொறாமை உணர்வு ஏற்படும் நிலை உறுவாகியுள்ளது!

தற்பொழுது கும்பகோணம் அதன் தொன்மை பாரம்பரியம் எல்லாம் வெளிக் கொணரப்பட்டு தமிழகத்தின் பெறு நகரங்களின் வரிசையில் இருக்கிறது. அதற்கு சற்றேனும் குறைவில்லாத அறிவுஜுவிகளான மக்களைக் கொண்ட மயிலாடுதுறை இன்னமும் சிறு நகரமாக அலங்கோலமாக காட்சியளிக்கிறது.

பாதாள சாக்கடை அமைக்கின்றோம் என்ற போர்வையில் நான்கரை வருடங்கள் பல உயிர்களை பலி வாங்கி வாழ தகுதியற்ற நகரமாக இருந்து ஒரு வழியாக அது முடிவுக்கு வந்து ஓராண்டாகியும் இன்னும் ஐம்பது சதவிகித பயனாளிகளைக் கூட சேராத ஒரு அரை வேக்காட்டுத் திட்டமாகவே இருக்கிறது.

இந்தப் பக்கம் கும்பகோணம் என்றால் அந்தப்பக்கம் சீர்காழி!. மயிலாடுதுறையை விட மிகமிக சிறிய நகரம்- இல்லை இல்லை பெரிய கிராமம் அவ்வளவுதான்…! இதெல்லாம் பத்து வருடத்திற்கு முந்தைய கதை.

தற்பொழுது ஊருக்கு வெளியே பெரிய புது பேருந்து நிலையம், அதுவரை நீண்டுவிட்ட நகரப்பகுதி, இறால் பண்ணைகள், இன்னும் பிற தொழில் வாய்ப்புகள்.

15 வருடத்திற்கு முன்பு இரு சக்கர வாகனத்தில் இரண்டே நிமிடத்தில் கடந்து விடக்கூடிய சீர்காழி நகரத்தை தற்போது அரைமணி நேரத்தில் கூட கடக்க முடியாதபடி நீண்ட வளர்ந்த நகரமாகி, தேவைப்பட்டவர்கள் உள்ளே வாருங்கள் மற்றவர்கள் உள்ளே நுழையாமல் சுற்றிச் செல்லுங்கள் என்று பிரம்மாண்டமான பை பாஸ் சாலை அமைத்து முடியும் தருவாயில் உள்ளது.

இதெல்லாம் மயிலாடுதுறை நகர மக்கள் மனதின் கொதி நிலையை கொஞ்சம் கொஞ்சமாக உயர வைத்துக் கொண்டிருக்கிறது.

சாதாரணமாக தேர்தல் சமயங்களில் கோரிக்கை வைத்து பழக்கமில்லாத அவ்வாறு செய்வதை அநாகரீமாக எண்ணும் மனதுடைய மயிலாடுதுறை மக்கள் தற்பொழுதும் கோரிக்கை என்ற பெயரில் வேட்பாளர்களிடம் பிச்சை எடுக்க தயாராக இல்லை.

மாறாக ஓட்டுப்பிச்சை எடுக்கும் அரசியல் வியாபாரிகள் “இதுவும் கடந்து போகும்" என்று நினைத்து வழக்கமான பாதையில் சென்றால் பாதையை கடந்தவர்கள் “திரும்பவும் வர" பாதை இருக்காது….!

ஏனென்றால் மயிலாடுதுறை மக்கள் பொறுமைசாலிகள் மட்டுமல்ல..! அறிவுஜுவிகளும் கூட…!! பொறுமைக்கான அளவுகோல் அவர்களுக்குத் தெரியும்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...