For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உளுந்தூர்பேட்டையும் உளுந்த வடையும்..

By A K Khan
Google Oneindia Tamil News

-ஏ.கே.கான்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் பேசப்பட்டு வரும் விஷயங்கள் வளர்ச்சியா, மதவாத எதிர்ப்பா, ஊழலை ஒழிப்பதா என்பதே. ஆனால், தமிழகத்தில் மட்டும் விஜய்காந்த் யாருடன் கூட்டணி சேருவார் என்ற கட்டத்தைவிட்டு அடுத்த நிலைக்கு அரசியல் நகரவே இல்லை.

திமுகவுடன் கூட்டணியா, பாஜகவுடன் கூட்டணியா, தனித்துப் போட்டியா என்று கடந்த 2 மாதங்களாகவே விஜய்காந்தை மட்டுமே மையமாக வைத்து அரசியல் நடந்து கொண்டுள்ளது. கூடவே பாமக யாருடன் கூட்டணி சேரும் என்ற ஒரு கேள்வியும் டீக்கடை பெஞ்சுகளில் காலையில் தொடங்கி இரவு வரை கேட்கப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது.

டீக்கடை பெஞ்சுகளில் மட்டுமல்ல சமூக வலைத்தளங்களிலும் இதே அக்கப்போர் தான் நடந்து கொண்டுள்ளது.

தா.பாண்டியன் நம்ம கட்சிக்காரர் தானே:

தா.பாண்டியன் நம்ம கட்சிக்காரர் தானே:

முதல்வர் ஜெயலலிதாவைப் பொறுத்தவரை அதிமுக தனித்துப் போட்டி, தனித்துப் போட்டி, 40 இடங்களும் நமக்கே என்று இரண்டு வருடங்களுக்கும் மேலாக கூவிவிட்டு இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்திருக்கிறார். ஒருவேளை தா.பாண்டியன் 'நம்ம கட்சிக்காரர்ர் தானே' என்பதால் அவர் சார்ந்த இந்திய கம்யூனிஸ்ட்டுடன் கூட்டணி அமைத்ததை வெளிக் கட்சியாக ஜெயலலிதா நினைக்கவில்லையோ என்னவோ.

பாண்டியனின் ஜால்ராவுக்கு இணையாக அதிமுகவுக்கு தம்பூரா வாசித்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும் இந்தக் கூட்டணியில் ஐக்கியமாகிவிட்டது.

இது சரத்குமாரின் பிளான்:

இது சரத்குமாரின் பிளான்:

சரத்குமாரைப் பொறுத்தவரை நம்மளை பிரச்சாரத்துக்கு மட்டும் அம்மா கூப்பிடட்டும், இந்த தா.பாண்டியனையும் ஓ.பன்னீர்செல்வத்தையும் எப்படியாவது ஓவர்டேக் செய்து காட்டனும் என்ற மாபெரும் திட்டத்தில் இருக்கிறார்.

ஆக, தனித்துப் போட்டி என்று வசனம் பேசிய அதிமுகவின் கூட்டணி ரெடி.

தம்பி, இந்தத் தேர்தலே தேவை தானா?:

தம்பி, இந்தத் தேர்தலே தேவை தானா?:

அடுத்தபடியாக திமுக...

இந்தக் கட்சிக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இருக்கும் நல்ல option, தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதே.

அழகிரி- ஸ்டாலின் இருவரும் இணைந்தால் தான் திமுக தேர்தலில் போட்டியிடும் என்று ஏதாவது ஒரு 'அட்ரா சக்கை' காரணத்தை சொல்லிவிட்டு தேர்தலில் இருந்து ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தால் திமுகவுக்கு காசு மிச்சம், மரியாதையும் மிஞ்சும். அந்த அளவுக்கு கட்சி தேய்ந்து போய் கிடக்கிறது.

2ஜி, 4ஜி, இல்லைஜி:

2ஜி, 4ஜி, இல்லைஜி:

கழுதைக்கு பொதியாக கூடவே வரும் காங்கிரஸ் இந்த முறை செத்த பிணமாக அதிகமாக கணக்கிறது. இதனால் அதை தன் முதுகில் ஏற்றிக் கொள்ள திமுக தயாராக இல்லை. ஆனாலும் காங்கிரஸ் விடுமா?.

2ஜி டேப்புகளை லீக் செய்து கொண்டிருக்கிறது. ஆனால், ''நீங்கள் 2ஜி மட்டுமல்ல 4ஜி டேப்புகளை வெளியிட்டாலும் கூட்டணியில் இடம் இல்லைஜி'' என்பதில் ஸ்டாலின் தீவிரமாகவே இருக்கிறார்.

காற்று வாங்க போனேன்.. பஞ்சர் வாங்கி வந்தேன்:

காற்று வாங்க போனேன்.. பஞ்சர் வாங்கி வந்தேன்:

அதே நேரத்தில் இந்திய தேசிய முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், விடுதலை சிறுத்தைகள் என்று தங்களுக்கென ஓட்டு வங்கி கொண்ட கட்சிகளை கூட்டணியில் இழுத்துள்ளதால் டியூப்பில் காத்து இல்லாவிட்டாலும் டயர்களை எப்படியாவது உருட்டிவிடலாம் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் உள்ளது திமுக.

ஒரு வேளை இப்பூடி, ஒரு வேளை அப்பூடி:

ஒரு வேளை இப்பூடி, ஒரு வேளை அப்பூடி:

ஆனால், டியூப், டயர் மட்டும் இருக்க என்ஜின் வேணுமே.. அதனால் தான் விஜய்காந்துக்கு வலை மேல் வலை வீசிக் கொண்டிருந்தது. ஆனால், விஜய்காந்த் தப்பிவிட்டார். ஆனாலும் இன்னும் கூட திமுக முழு அளவில் நம்பிக்கையை இழந்துவிடவில்லை. பாஜக கூட்டணியில் பாமகவும் வந்துவிட்டால் சீட் பிரச்சனை வரும், தொகுதிகளுக்காக அடிதடி நடக்கும். அப்போது விஜய்காந்த் நம்ம பக்கம் வருவார். காங்கிரஸ் உள்ளிட்ட எந்த முக்கிய கட்சியும் இல்லாததால் நம்மகிட்ட தான் ஏகப்பட்ட சீட் காலியா தானே இருக்கு என்ற நப்பாசையில் திமுக காத்துக் கொண்டுள்ளது.

டுபாக்கூரா, உண்மையான அலையா?:

டுபாக்கூரா, உண்மையான அலையா?:

நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது என்ற பெரும் நம்பிக்கையில் கிட்டத்தட்ட ஜெயித்துவிட்ட மாதிரியே பேசவும் நடக்கவும் ஆரம்பித்துள்ளது பாஜக. 10 வருடத்துக்கு முன் India shining என்ற டுபாக்கூர் பிரச்சாரம் செய்து பாஜக மண்ணைக் கவ்விய மாதிரி தான் மோடி அலையும் என்ற கருத்தும் பரவலாகவே உள்ளது.

தமிழகத்தில்...

தமிழகத்தில்...

ஆனாலும் நான் தமிழகத்துக்குள் சுற்றி வந்த வகையில், மக்களுடன் பேசிய வகையில், தமிழகத்தில் பாஜகவுக்கு செல்வாக்கு அதிகரித்தே இருக்கிறது. ஆனால், இது ஓட்டாக மாறுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். வெறும் 2 சதவீதம் பேரின் ஆதரவு மட்டுமே கொண்ட கட்சியாக இருந்த பாஜகவுக்கு இப்போது ஆதரவு நிச்சயமாக அதிகரித்திருக்கிறது. இதற்கு எச்.ராஜா மாதிரியான ஆசாமிகளோ, சுப்பிரமணிய சாமி மாதிரியான வெத்து வேட்டுகளோ காரணம் அல்ல. 'மோடி அலை' என்ற மாயையோ உண்மையோ.. அது மட்டுமே காரணம்.

சுனாமியே வந்தாலும்...

சுனாமியே வந்தாலும்...

ஆனால், மக்களுடன் ஒட்டாத, மக்கள் ஆதரவே கொஞ்சம் கூட இல்லாத சு.சாமி, ராஜா, லதா குமாரமங்கலம் மாதிரியான ஆட்களை வேட்பாளராகப் போட்டால் மோடி அலை மட்டுமல்ல, சுனாமி அலையே வந்தாலும் பாஜகவை காப்பாற்ற முடியாது. ஆனால், மக்களுக்கு நெருக்கமான வேட்பாளர்கள் என்று பாஜகவில் யாரும் இருந்தால் சொல்லுங்களேன் வைகோ!.

இதோ வந்துவிட்டார் ராமதாஸ்.. அதோ வருகிறார் கேப்டன்...

இதோ வந்துவிட்டார் ராமதாஸ்.. அதோ வருகிறார் கேப்டன்...

''கூட்டணியில் வைகோ இருக்காக... ராமதாஸ் வரப் போறாக.. விஜய்காந்த் வரப் போறாக'' என்று இல.கணேசனும், பொன்.ராதாகிருஷ்ணனும் தூக்கத்தில் கூட பேசி வருவதாக தகவல். ராமதாசும் விஜய்காந்தும் கூட்டணிக்குள் வராவிட்டால் பாஜகவுக்கு சு.சாமிக்களும் ராஜாக்களும் மட்டுமே மிஞ்சுவார்கள். சீட் ஏதும் கிடைக்காது.

ஒருவேளை பாமக வந்தாலும் கூட, அதனால் பாஜகவுக்கு பெரும் லாபம் இருக்காது. பாமக மட்டுமே லாபம் அடையும். காரணம், அவர்கள் வெல்ல வாய்ப்புள்ள வன்னியர்கள் வசிக்கும் பகுதிகள் கொண்ட தொகுதிகளை தாங்களே எடுத்துக் கொள்வார்கள். பாஜகவுக்கு ஏதும் கிடைக்காது.

ஸாரி.. சார். டங் ஸ்லிப்:

ஸாரி.. சார். டங் ஸ்லிப்:

விஜய்காந்தைப் பொறுத்தவரை அவர் எந்தக் கூட்டணியில் சேருவார் என்று கேள்வியை விட, அவர் எந்தக் கூட்டணியில் சேர மாட்டார் என்ற கேள்விக்கே அதிக பதில்கள் உள்ளன. ஏனென்றால் அவர் தொடாத பாட்டிலே இல்லை.. ஸாரி, அவர் பேசாத கட்சியே இல்லை. அந்த அளவுக்கு அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சு நடத்தி இருக்கிறார்.

இது சூப்பர் ஐடியா:

இது சூப்பர் ஐடியா:

இதனால், விஜய்காந்த் புதிதாக ஒரு முயற்சியில் இறங்கலாம். யாரையும் ஏமாற்றாத நல்ல மனம் படைத்தவர் கேப்டன் என்பதால், பேசாமல் திமுகவுடன் 4 தொகுதிகளில் கூட்டணி, பாஜகவுடன் 4 தொகுதிகளில் கூட்டணி, காங்கிரசுடன் 4 தொகுதிகளில் கூட்டணி, 4 தொகுதிகளில் தனித்துப் போட்டி என்று ஒரு முடிவை எடுக்கலாம்.

இந்த முடிவை உளுந்தூர்பேட்டையில் மாநாடு நடத்தித் தான் அறிவிக்க வேண்டும் என்று இல்லை. வெறும் உளுந்த வடையை சாப்பிட்டுக் கொண்டே கூட அறிவிக்கலாம்!

English summary
As DMDK president Vijaylanth is keeping BJP and congress in guessing, we have come out with the best options available for him to face the parliament elections 2014
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X