அடக்குமுறை இருளில் விடுதலைத் தீபம் ஏந்திய ஏடுகள்- அ. குமரேசன்
விடுதலையின் பவளவிழா ஆண்டை இந்தியா கொண்டாடுகிறபோது சுதந்திரத்தைப் பெறுவதற்காகப் போராடியதிலும், பின்னர் அதைப் பாதுகாப்பதற்காகப் போராடுவதிலும் ஊடகத்தின் பங்களிப்பு நினைவில் பதியத்தக்கது. சுதந்திரப் போராட்டத்தின் வரலாறு தொடங்குவதற்கும் முன்னதாகவே தொடங்கிவிட்டது பத்திரிகைகளின் செய்திச் சுதந்திரப் போராட்டம் என்றால் மிகையில்லை. 1780ம் ஆண்டில் கொல்கத்தாவில் வெளியான "விக்கி'ஸ் பெங்காலி கெஜட்" பத்திரிகைதான் இந்தியாவின் முதல் பத்திரிகை. இந்தியாவைப் போலவே பிரிட்டிஷ் அரசால் அன்று அடிமைப்படுத்தப்பட்டிருந்த அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவரான ஜேம்ஸ் அகஸ்டஸ் விக்கி அந்தப் பத்திரிகையைத் தொடங்கியிருந்தார். இந்தியப் பத்திரிகையுலகத் தந்தை என்று குறிப்பிடப்படுகிறவரான விக்கி, பத்திரிகையின் பெயருக்கு ஏற்ப அரசாங்கத் தரப்புச் செய்திகளுக்கு முக்கியத்துவம் அளித்து வந்தார் என்றாலும், அரசாங்கத்தைச் சுதந்திரமாக விமர்சிக்கவும் செய்தார். குறிப்பாக கவர்னர் ஜெனரல் வாரன் ஹேஸ்டிங்ஸ் நிர்வாகத்தில் ஊழல் மலிந்திருந்தது பற்றி எழுதினார். அடுத்த ஆண்டிலேயே பெரும் தடையைச் சந்தித்தது. அவர் மீது வழக்குப்போடப்பட்டது, 1781ல் பரபரப்பாக நடந்த 4 விசாரணைகளுக்குப் பிறகு, லண்டன் உச்சநீதிமன்றம் அவருக்கு சிறைத்தண்டனை விதித்தது. 1782ம் ஆணடில் பத்திரிகைப் படிகளும், உலோக எழுத்துகள் உள்ளிட்ட அச்சகப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னாளில் ஹேஸ்டிங்ஸ் பதவி விலகி, ஊழல் விசாரணைக்காகக் கூண்டில் நிறுத்தப்பட்டார். சிறையிலிருந்து வெளியே வந்தபின் கடும் வறுமையில் விழுந்த விக்கி, 1802ல் சீனாவுக்குப் படகில் செல்லும் வழியில் இறந்தார்.
பிறகு, லண்டன் உச்சநீதிமன்றம் அவருக்கு சிறைத்தண்டனை விதித்தது. 1782ம் ஆணடில் பத்திரிகைப் படிகளும், உலோக எழுத்துகள் உள்ளிட்ட அச்சகப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னாளில் ஹேஸ்டிங்ஸ் பதவி விலகி, ஊழல் விசாரணைக்காகக் கூண்டில் நிறுத்தப்பட்டார். சிறையிலிருந்து வெளியே வந்தபின் கடும் வறுமையில் விழுந்த விக்கி, 1802ல் சீனாவுக்குப் படகில் செல்லும் வழியில் இறந்தார்.
ஆம், இந்தியாவில் நாட்டின் விடுதலைக்கான போராட்ட வரலாற்றில் ஊடகச் சுதந்திரத்திரத்திற்கான போராட்ட அத்தியாயமும் இணைந்திருக்கிறது. ஹிக்கி அனுபவத்தைத் தொடர்ந்து தி இந்தியா கெஜெட், தி மெட்ராஸ் கூரியர், தி பாம்பே ஹெரால்ட், தி கல்கத்தா கெஜெட் உள்ளிட்ட ஆங்கில ஏடுகள் புறப்பட்டன. 1857ல் எழுந்த ராணுவ வீரர்கள் கிளர்ச்சிக்குப் பிறகு, இந்திய மொழிகளிலும் பத்திரிகைகள் முளைத்தன. அவற்றை முளையிலேயே கிள்ளியெறிவதற்கு பிரிட்டிஷ் அரசின் கண்காணிப்புகளும், கெடுபிடிகளும் பாய்ந்தன. இந்தியப் பத்திரிகைகளைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் புதிய புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. ஏகப்பட்ட தணிக்கைமுறைகளும் புகுத்தப்பட்டன. அப்போதே பெகாசஸ் இருந்திருந்தால் பிரிட்டிஷ் அரசுக்கு மிகத் தோதாக இருந்திருக்கும்!

தேசத்துரோகச் சட்டம்
இந்திய தண்டனைச் சட்டம் 1860ம் ஆண்டில் கொண்டுவரப்பட்டது. பிரிட்டிஷ் பேரரசின் இந்தியக் குடிகளைப் பல்வேறு குற்றச்செயல்களிலிருந்து பாதுகாப்பதற்காக என்று கொண்டுவரப்பட்ட அந்தச் சட்டத்தின் 121, 124 ஆகிய விதிகளுடன், 1870ம் ஆண்டில் 121-ஏ, 124-ஏ என்ற துணைவிதிகள் சேர்க்கப்பட்டன. 121-ஏ விதி, சுதந்திரப் போராளிகளை ஒடுக்குவதற்காகவென்றே சேர்க்கப்பட்டது. 124-ஏ விதிதான், தேசத்துரோகச் செயல்களுக்குத் தண்டனையளிப்பதற்காக - அதாவது இந்தியாவை அடக்கியாண்ட பிரிட்டிஷ் அரசை எதிர்க்கும் செயல்களைத் தேசத்துரோகம் என்று முத்திரை குத்திப் பழி தீர்ப்பதற்காகச் சேர்க்கப்பட்டிருக்கிறது. இப்போதும் அந்த 124-ஏ விதி தனது கோரப்பற்களுடன் சுற்றி வருகிறது, ஊடகவியலாளர்கள் உள்பட அரசாங்கத்திற்கு எதிரான கருத்துகளைக் கூறுவோர் மீது ஏவிவிடப்படுகிறது. பிரிட்டிஷ் அரசு தனக்காகக் கொண்டுவந்த ஒரு சட்டவிதி தொடர்வது சரிதானா என்று உச்சநீதிமன்றம் இப்போது கேட்டிருக்கிறது. ஒன்றிய அரசின் பதில் என்ன, நீதியின் தீர்ப்பு என்று நாடு எதிர்பார்த்திருக்கிறது.
1910 ஆண்டில் பத்திரிகைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அந்தச் சட்டத்தின் கீழ், கிட்டத்தட்ட 1,000 இந்தியப் பத்திரிகைள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 500க்கு மேற்பட்ட பத்திரிகைகள் தடை செய்யப்பட்டன. அந்தப் பத்திரிகைகளின் ஆசிரியர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள் - தேசத்துரோகச் சட்டவிதியின் கீழ்.
தொடக்கத்திலிருந்தே இந்தியப் பத்திரிகைகள் இப்படிப்பட்ட சட்டக்கட்டங்களிலிருந்து தப்பிக்கும் உத்திகளையும் உருவாக்கிச் செயல்படுத்தினார்கள்! கட்டுரைகளைப் முக்கியமான பிரிட்டிஷ் தலைவர்கள், புகழ்பெற்ற ஆங்கிலேய எழுத்தாளர்களின் மேற்கோள்களுடன் தொடங்குவார்கள்! அரசின் ஏதாவதொரு நடவடிக்கையை வரவேற்பது போல அல்ல, நேரடியாக எதிர்க்காத வகையில் அந்தக் கட்டுரைகளுக்குத் தலைப்புகளும் தரப்படும்! இந்த உத்திகள் கையாளப்பட்டது கைது வலைகளில் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக அல்ல, விடுதலைக் கருத்துகள் மக்களைச் சென்றடைவது தடைப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவும்தான்.
பேனா உயர்த்திய போராளிகள்
1917ல் காந்தி தொடங்கிய சத்தியாக்கிரகம், அடுத்தடுத்த பல விடுதலை இயக்கங்கள் விரிவான செய்திகளாக வெளியிடப்பட்டன. அன்றைய விடுதலை இயக்கத் தலைவர்கள் பலரும் பத்திரிகைகளில் போராட்டக் கனலை மூட்டும் கட்டுரைகளை எழுதினார்கள். காந்தி உள்பட அவர்களில் பலர் பத்திரிகையாளர்களாகவும் இருந்தார்கள். வங்காளத்திலும் பின்னர் ஆங்கிலத்திலும் 'அமிர்தபஜார் பத்திரிகா' ஏட்டைத் தொடங்கிய சிசில் குமார் கோஷ், மோதிலால் கோஷ், மராத்தியில் 'கேசரி' பத்திரிகையை நடத்திய பாலகங்காதர திலகர், சென்னையில் ஆங்கிலத்தில் 'தி இந்து' பத்திரிகையையும், தமிழில் 'சுதேசமித்திரன்' பத்திரிகையையும் தொடங்கிய ஜி. சுப்பிரமணியன், மலையாளத்தில் 'ஸ்வதேசாபிமானி' பத்திரிகையைக் கொண்டுவந்த கே. ராமகிருஷ்ணன், ஆங்கிலத்தில் 'தி லீடர்' பத்திரிகையை வெளியிட்ட மதன் மோகன் மாளவியா, மோதிலால் நேரு - என விடுதலை இயக்கத்தோடு பத்திரிகை எழுத்தோடும் இணைந்த தலைவர்கள் பலர்.
வாளை விடவும் கூர்மையான பேனா முனையின் ஆற்றலை அறிந்த பிரிட்டிஷ் அரசு, 1931ம் ஆண்டில், 'பிரெஸ் எமர்ஜென்சி ஆக்ட்' என்ற, பத்திரிகைகளுக்கான அவசரச் சட்டம் ஒன்றையே கொண்டுவந்தது. மறுபடியும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இதழ்கள் மீதும், இதழாசிரியர்கள் மீதும் நடவடிக்கைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. 1939ல் இந்திய மக்களைக் கேட்காமலே இந்தியாவை இரண்டாம் உலகப்போரில் பிரிட்டிஷ் அரசு இறக்கிவிட்டது, அதை எதிர்த்து எழுதிய பத்திரிகையாளர்கள் அடக்கப்பட்டார்கள். அதே ஆண்டில், இந்தியச் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தவர்கள் காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கியபோது, அந்தச் செய்தியை வெளியிடக்கூடாது என்று கட்டளையிடப்பட்டது.
தமிழகத்தில் பத்திரிகையில் அரசைத் தாக்கியும் விடுதலையை வலியுறுத்தியும் 'இந்தியா' பத்திரிகையில் எழுதியதற்காக வேட்டையாடிய பிரிட்டிஷ் அரசின் போலீசிடமிருந்து தப்பித்து பிரெஞ்சு அரசின் நிர்வாகமாக இருந்த புதுச்சேரிக்குப் புலம் பெயர்ந்த பாரதியார், இங்கேயும் அப்படிப்பட்ட பத்திரிகையாளர்களுக்கான ஒரு முன்னுதாரணம் படைத்திருக்கிறார். சுப்பிரமணிய சிவா நடத்திய 'ஞானபானு' இதழ், ஒருபக்கம் தமிழுணர்வையும் இன்னொரு பக்கம் விடுதலையுணர்வையும் ஊட்டியது.
ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கான அரசியலை முன்வைத்து அயோத்தி தாசர் தொடங்கிய 'ஒரு பைசா தமிழன்', திரு.வி.க. பொறுப்பேற்ற 'நவசக்தி', விடுதலையின் லட்சியம் சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கு முடிவுகட்டுவதோடும் இணைய விரும்பி ஜே.எஸ். கண்ணப்பர் நடத்திய 'திராவிடன்', டாக்டர் வரதராஜுலு நாயுடு நடத்திய 'பிரபஞ்ச மித்திரன்', 'தமிழ்நாடு', டி.எஸ். சொக்கலிங்கம் தொடங்கிய 'தினமணி', அன்றைய 'ஆனந்தவிகடன்' ஏட்டில் சுதந்திரச் சிந்தனைகளை எழுதிய தேசிக வினாயகம், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம், 'கல்கி' கிருஷ்ணமூர்த்தி, தேவன், பி.ஸ்ரீ., மிகக்குறைந்த விலையில் எளிய மக்களிடையே சென்ற 'சுதந்திரச் சங்கு' ஏட்டின் ஆசிரியர் 'சங்கு' சுப்பிரமணியன், 'தேசபந்து' என்ற பத்திரிகையை நடத்திய பாவலர் கிருஷ்ணசாமி, "நமது நாடு அரசியல், பொருளியல், சமூகவியல், ஒழுக்கவியல் முதலிய எல்லாத் துறைகளிலும் மேன்மையுற்று விளங்கச் செய்ய வேண்டும்" என்ற அறிவிப்புடன் பெரியார் தொடங்கிய 'குடியரசு', பொதுவுடைமை லட்சியத்தோடு விடுதலைக் கனவை இணைத்து ஜீவா தொடங்கிய 'ஜனசக்தி' .... இன்னும் இங்கே குறிப்பிடப்படுவதற்கு எத்தனை பேர்! எத்தனை ஏடுகள்!
இவ்வாறு பத்திரிகையாளர்களாகவும் பணியாற்றி, வழக்குகளையும் ஒடுக்குமுறைகளையும் எதிர்கொண்ட தலைவர்களின் உழைப்பு - சுதந்திரமடைந்த இந்தியா கருத்துச் சுதந்திர தீபத்தையும் உயர்த்திப் பிடிக்கிற நாடாகத் திகழ வேண்டும் என்பதற்காகத்தான். சமுதாய விடுதலையாகவும் பரிணமிப்பதில்தான் அரசியல் விடுதலை முழுமையடையும் என்ற இலக்கோடு நாட்டின் விடுதலைக்குப் பிறகு தொடங்கப்பட்ட பல பத்திரிகைகளும் பிற ஊடகங்களும் பயணிக்கின்றன.
இருண்ட கால வெள்ளைப் பக்கங்கள்
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் தடித்த எழுத்துகளில் இடம்பெற்றுவிட்ட, 1975-77 அவசர நிலை ஆட்சியில், பத்திரிகைகள் உள்ளூர் அதிகாரியால் அனுமதிக்கப்பட்ட செய்திகளைத்தான் வெளியிட வேண்டும் என்கிற அளவுக்குத் தணிக்கைக் கொடுமை கொண்டுவரப்பட்டது. தடைசெய்யப்பட்ட செய்தி அச்சிடப்பட்டிருக்க வேண்டிய இடத்தை வெள்ளையாக விட்டுப் பல ஏடுகள் வெளியாகின. அந்த வெள்ளைப் பக்கங்களைப் பார்க்கிற வாசகர்கள் ஆட்சியாளர்களுக்கு இடைஞ்சலான ஏதோவொரு செய்தி நீக்கப்பட்டிருக்கிறது என்று புரிந்துகொள்வார்கள். இதையெல்லாம் அனுபவித்த தலைமுறையினர் மறந்துவிட மாட்டார்கள், நேரடியாக இதைக் காணாத தலைமுறைகளுக்குச் சொல்லத் தவறவும் மாட்டார்கள்.
இதுவாவது "சட்டப்பூர்வமாக" அறிவிக்கப்பட்ட அவசரநிலை ஆட்சி. இப்படிப்பட்ட கருத்துச்சுதந்திர ஒடுக்குமுறைகள், அவசரநிலை விலக்கிக்கொள்ளப்பட்ட பிறகாவது நின்றுவிடும் என்ற எதிர்பார்ப்பு அப்போது குடிமக்களுக்கு இருந்தது. இன்றோ, அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமலே அவசரநிலை ஆட்சி போல நடக்கிறது என்று ஜனநாயக சக்திகளாலும், ஊடகங்களாலும் ஆற்றாமை ஆவேசத்தோடு கேட்கப்படுகிறது. அறிவிக்கப்படாத அவசரநிலை என்றால் அது விலக்கிக்கொள்ளப்படும் என்று குடிமக்கள் எப்படி எதிர்பார்ப்பது?
விடுதலைப் போராட்டக் காலத்தில் அச்சு ஊடகங்கள் மட்டுமே ஆளுமையாக இருந்தன. அப்போது பிரிட்டிஷ் அரசின் சங்கிலிகள் சட்டவடிவில் இறுக்கப்பட்டன. கால வளர்ச்சியில், வானொலி, தொலைக்காட்சி, இணையத்தளங்கள் என்று ஊடகங்கள் நவீனத்தடங்களுக்கு வந்துவிட்டன. இன்று சமூக ஊடகங்கள் தனி முக்கியத்துவம் பெற்றுவிட்டன. ஊடக வடிவத்தில் எப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்பட்டாலும், மக்களுக்கான குரல்களாக ஒலிப்பதில், அரசின் நடவடிக்கைகளை விமர்சிப்பதில் சுதந்திர ஊடகங்களின் செயல்பாடு மாற்றமின்றித் தொடர்கிறது. அவற்றைப் பின்வாங்க வைப்பதற்கென்றே, புதிய தொழில்நுட்ப வருகையோடு புதிய கெடுபிடி விதிகளும் தொற்றிக்கொள்கின்றன.
ஒருபுறம் பத்திரிகைகளுக்கும் இதர ஊடகங்களுக்கும். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிகள் மிகப்பெரும் சவால்களாக எழுந்துள்ளன. அந்தச் சவால்களை எதிர்கொள்வதற்கான வழிகளையும் ஊடகவியலாளர்கள் கண்டுபிடிக்கிறார்கள். தொழில்நுட்பச் சவால்களைச் சந்தித்துச் சமாளித்துவிடலாம். ஆனால், நேருக்கு நேர் வராமல் அரசியலாகவும் ஆதிக்கமாகவும் அடக்க முயல்கிற சவால்களைச் சந்திப்பது எப்படி? இந்திய விடுதலைப் பவளவிழாவின் உள்ளார்ந்த உணர்வு, இந்தக் கேள்விக்குத் திட்டவட்டமான பதிலளிக்கட்டும்.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications