For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒரு அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றாலும் பாஜக எம்.எல்.ஏ.வாக மாறிவிடுவார்... ஸ்டாலின் எச்சரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபை தேர்தலில் ஒரு அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றாலும் அவர் அதிமுக எம்.எல்.ஏ.வாக இல்லாமல் பாஜக எம்.எல்.ஏ.வாக மாறிவிடுவார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தின் போது பேசியதாவது;

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் சகோதரர் எபினேசர் அவர்களுக்கு நீங்களெல்லாம் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைத் தேடித் தரவேண்டும்.

இன்றைக்கு ஆளும் கட்சியின் சார்பில் எப்படிப்பட்ட நிலையில் பிரச்சாரத்தைச் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும்.

MK Stalin warns on AIADMK win in Assembly Election

கடந்த பத்து வருடங்களாக அ.தி.மு.க.தான் ஆட்சியில் இருக்கிறது. அவர்கள் நாங்கள் என்ன செய்திருக்கிறோம்? இந்தத் தமிழ்நாட்டு மக்களுக்கு, குறிப்பாக இந்த சென்னை மாநகர மக்களுக்கு என்னென்ன திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறோம்? எப்படிப்பட்ட சாதனைகளைச் செய்திருக்கிறோம்? என்பதைச் சொல்லி வாக்குக் கேட்க வேண்டும். அது அவர்களால் முடியவில்லை.

பிரதமராக இருக்கும் மோடியாக இருந்தாலும், முதலமைச்சராக இருக்கும் பழனிசாமியாக இருந்தாலும் நம்மைத் திட்டி விமர்சனம் செய்து பிரச்சாரத்தைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

மோடி அவர்கள் தாராபுரத்திற்கு வந்தார். அதற்குப் பிறகு மதுரைக்கு வந்தார். அவருக்கு, எய்ம்ஸ் கட்டி முடித்து விட்டோம் என்று சொல்லும் தகுதி இல்லை. தமிழ்நாட்டுக்கு இந்தந்தத் திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறோம் என்று சொல்லும் யோக்கியதை அவருக்கு இல்லை.

தி.மு.க. - காங்கிரஸ் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று பேசியிருக்கிறார். அவருக்கு தமிழ்நாட்டில் யார் ஆட்சி செய்கிறார் என்று தெரியவில்லை.

நாம் கடந்த 10 வருடங்களாக ஆட்சியில் இல்லை. அவ்வாறு ஆட்சியில் இருப்பது அவர்கள் கூட்டணிக் கட்சி அ.தி.மு.க. அதை மறந்துவிட்டுப் பேசுகிறார்.

பொள்ளாச்சியில் நடந்த சம்பவம், ஒரு பெண் எஸ்.பி.க்கு நடந்த சம்பவம், இதைப்பற்றி எல்லாம் அவர் பேசாமல் தி.மு.க.வும் - காங்கிரசும் தான் காரணம் என்று பேசினார்.

பிரதமர் மோடி அவர்களே... தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் என்கின்ற முறையில் நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, உங்களிடத்தில் சி.பி.ஐ. இருக்கிறது. புலனாய்வுத்துறை இருக்கிறது. அவர்களிடம் தயவு செய்து விசாரியுங்கள். அ.தி.மு.க. ஆட்சியில் என்னென்ன கொடுமைகள் நடந்திருக்கின்றது என்பதை விசாரியுங்கள். அதற்குப் பிறகு நீங்கள் பேசுங்கள். அதுதான் என்னுடைய வேண்டுகோள்.

பழனிசாமியை பொறுத்தவரையில் பக்கம் பக்கமாக விளம்பரங்கள், அதுவும் அரசாங்கத்தின் வரிப்பணத்தைப் பயன்படுத்திக் கொடுத்தார். இன்றைக்கு எல்லாப் பத்திரிகைகளிலும் பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுத்திருக்கிறார். நம்மைத் திட்டி விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் என்ன சாதனை செய்திருக்கிறார்கள் என்று விளம்பரம் செய்தால் பரவாயில்லை. நம்மை விமர்சனம் செய்து - அதாவது நில அபகரிப்புக்கு தி.மு.க.தான் காரணம். பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாததற்கு காரணம் தி.மு.க.தான். என்று விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால் கடந்த பத்து வருடங்களாக அவர்கள்தான் ஆட்சியில் இருக்கிறார்கள். நாம் தவறு செய்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். எங்கள் மீது வழக்குப் போட்டிருக்க வேண்டும். அவ்வாறு வழக்கு நிரூபிக்கப்பட்டு நம்மைச் சிறையில் தள்ளியிருக்க வேண்டும். அதைச் செய்தார்களா? இதிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

அது மட்டுமல்ல, அவர்கள் கடந்த பத்து வருடங்களில் இந்த ஆட்சியைப் பயன்படுத்திக் கொள்ளைதான் அடித்திருக்கிறார்கள். லஞ்சம், ஊழல், கரப்ஷன் - கமிஷன் - கலெக்சன் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

என்னதான் மோடி வந்தாலும், அமித்ஷா வந்தாலும், அது ஜீரோ தான். நாம் தான் ஹீரோ... மு.க.ஸ்டாலின்என்னதான் மோடி வந்தாலும், அமித்ஷா வந்தாலும், அது ஜீரோ தான். நாம் தான் ஹீரோ... மு.க.ஸ்டாலின்

தி.மு.க.வின் சார்பில் ஒரு பெரிய ஊழல் பட்டியலைத் தயாரித்து பழனிசாமி முதல், ஓ.பன்னீர்செல்வம் முதல், அங்கிருக்கும் எல்லா அமைச்சர்களும் என்னென்ன ஊழல் செய்திருக்கிறார்கள் என்பதை ஆதாரத்தோடு புள்ளி விவரங்களோடு சேகரித்து ஆளுநரிடத்தில் கொடுத்திருக்கிறோம். ஏற்கனவே சில பிரச்சினைகள் நீதிமன்றத்தில் இருக்கிறது. அதற்கு இதுவரையில் பழனிசாமி பதில் சொல்லவில்லை.

ஆனால் இன்றைக்கு நம்மை விமர்சனம் செய்து பத்திரிகைகளில் விளம்பரம் செய்கிறார்கள்.

நாங்கள் குற்றம் செய்யவில்லை, ஊழல் செய்யவில்லை என்பதை ஆதாரத்தோடு அவர்கள் விளம்பரம் செய்து இருந்தால் உள்ளபடியே நாம் பாராட்டி இருக்கலாம். அதை விட்டுவிட்டு, இன்றைக்கு நம்மை விமர்சனம் செய்வதற்காகவே அவர்கள் விளம்பரம் செய்திருக்கிறார்கள். அது மக்களிடத்தில் எடுபடப் போவதில்லை. அதற்குச் சரியான பாடத்தை வரும் 6ஆம் தேதி அவர்களுக்கு வழங்கிட வேண்டும். இதுதான் என்னுடைய அன்பான வேண்டுகோள்.

பெரம்பூரில் ஸ்டாலின் பேசியதாவது: வருகின்ற 6 ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்றப் பொதுத்தேர்தலில் நீங்கள் எல்லாம் உதயசூரியனுக்கு வாக்களித்து, நம்முடைய வேட்பாளர் ஆர்.டி.சேகர் அவர்களை இந்தப் பெரம்பூர் தொகுதியில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். அதற்காகத்தான் உங்களைத் தேடி, நாடி வந்திருக்கிறேன்.

ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஜீரோ கொடுத்தீர்கள். அதேபோல இந்தச் சட்டமன்றத்தில் பா.ஜ.க.வுக்கு மட்டுமல்ல, அ.தி.மு.க.விற்கும் நீங்கள் ஜீரோதான் கொடுக்க வேண்டும். இரண்டு பேருக்கும் நீங்கள் ஜீரோ கொடுத்தால், நாம் ஹீரோவாகி விடுவோம். 234 இடங்களிலும் தி.மு.க. அணிதான் வெற்றி பெறப்போகிறது. அதனால்தான் நாம் ஆட்சிக்கு வந்தவுடன், என்னென்ன செய்யப் போகிறோம் என்பதை வாக்குறுதிகளாக, உறுதிமொழிகளாகக் கொடுத்திருக்கிறோம். மொத்தம் 505 வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கிறோம்.

அதையெல்லாம் நிறைவேற்றுவதற்கு தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும். அவ்வாறு ஆட்சிக்கு வருவதற்கு நீங்களெல்லாம் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து ஆ.டி.சேகர் அவர்களை வெற்றி பெற வைக்க வேண்டும்.

நான் அவருக்கு மட்டும் இங்கு வாக்கு கேட்க வரவில்லை. நான் எனக்கும் உங்களிடத்தில் வாக்கு கேட்கதான் வந்திருக்கிறேன். ஆர்.டி.சேகர் வெற்றி பெற்றால்தான் நான் முதலமைச்சர். எனவே உதயசூரியனுக்கு ஆதரவு தந்து ஆர்.டி.சேகர் அவர்களை வெற்றி பெற வையுங்கள் என்று கேட்டு விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.

மாதவரத்தில் ஸ்டாலின் பேசியதாவது: சட்டமன்றப் பொதுத்தேர்தலில் இந்த மாதவரம் தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பளர் சுதர்சனம் அவர்களுக்கு நீங்களெல்லாம் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தரவேண்டும் என்று கேட்க வந்திருக்கிறேன்.

தமிழ்நாடு கடந்த பத்து ஆண்டுகளில் அதலபாதாளத்திற்குச் சென்று விட்டது. அவ்வாறு ஐம்பது ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றிருக்கும் சூழ்நிலையில் நாம் இந்தத் தேர்தலைச் சந்திக்கிறோம்.

குறிப்பாக கடந்த நான்கு வருடங்களில் பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த அ.தி.மு.க. ஆட்சி, துரோகம் செய்து, அடிமையாக இருந்து, உரிமைகளை இழந்து இருக்கிறது. அப்படிப்பட்ட அந்த ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்பதற்காக நடக்கின்ற தேர்தல்தான்.

ரெய்டு ஆபீசர்ஸ் டிவி பார்த்துட்டு பிரியாணி சாப்பிட்டாங்க-வெறும் கையோடு போய்ட்டாங்க.. ஸ்டாலின் கலகலரெய்டு ஆபீசர்ஸ் டிவி பார்த்துட்டு பிரியாணி சாப்பிட்டாங்க-வெறும் கையோடு போய்ட்டாங்க.. ஸ்டாலின் கலகல

இதில், 234 தொகுதிகளில் பாஜக-வைப் பொறுத்தவரையில் ஜீரோதான். அதேபோல அ.தி.மு.க.வும் ஜீரோ தான். தி.மு.க. தான் ஹீரோ.

பாஜக நிச்சயமாக ஜீரோதான். அதை கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே பார்த்து விட்டோம். ஆனால் அ.தி.மு.க.வையும் ஏன் ஜீரோவாக்க வேண்டும் என்று சொல்கிறேன் என்றால், தப்பித்தவறி ஒரு அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றால் அவர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக அல்லாமல் பாஜக எம்.எல்.ஏ.வாக மாறிவிடுவார்.

அதற்கு உதாரணம், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே ஒரு இடத்தில் அ.தி.மு.க.வின் சார்பில் வெற்றி பெற்ற ஓ.பி.எஸ். மகன், தற்போது பாஜக எம்.பி.யாகச் செயல்பட்டு வருவதுதான்.

தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக ஐந்து முறை ஆட்சியில் இருந்தபோது பெண்களுக்காகப் பல அற்புதமான திட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறார். அதே வழியில் அவருடைய மகன் ஸ்டாலினும் தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி உள்ளேன்.

குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகையாக மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும், மகளிருக்கான செலவைக் குறைக்க உள்ளூர் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்பது உட்பட பல்வேறு சிறந்த வாக்குறுதிகளை வழங்கி உள்ளோம்.

இந்தத் திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டுமென்றால், நாம் ஆட்சிக்கு வரவேண்டும். நாம் ஆட்சிக்கு வரவேண்டுமென்றால் சுதர்சனம் அவர்கள் வெற்றி பெற வேண்டும். அவர் வெற்றி பெற உதயசூரியனுக்கு ஆதரவு தர வேண்டும் என்று கேட்டு விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

English summary
DMK President MK Stalin has warned on AIADMK's netx move after the Assembly Election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X