
தமிழகத்தில் இன்று
சிம்லா:
2011க்குள் அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் சுமார் 200 மில்லியனுக்கும்மேற்பட்ட குழந்தைகள் கல்வி இல்லாமல் தவிக்கிறார்கள் என்று மனித நல மேம்பாட்டு அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி கூறியுள்ளார்.
ஹிமாச்சலப்பிரதேச பல்கலைக்கழகத்தின் 13 வது மாநாட்டைத் தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:
தற்போது அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கல்வி என்பது மத்திய அரசின் முக்கிய குறிக்கோளில் ஒன்றாகும். 14 வயதிற்குட்ட அனைத்து பள்ளிமாணவர்களுக்கும் கல்வியளிப்பதே மத்திய அரசின் தற்போதைய திட்டமாகும்.
2011 க்குள் அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி என்பதில் மத்திய அரசு மிகவும் உறுதியாக இருக்கிறது. முதியோர் கல்வியிலும், பள்ளிக்குழந்தைகளுக்கான ஆரம்பக் கல்வியிலும் முழுக்கவனம் செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 15 வயது முதல் 35 வயதிற்குட்பட்டவர்களில் 75சதவீதம் பேருக்கு வரும் 2005 க்குள் கல்வியளிக்கவும் அரசு நினைக்கிறது.
கிராமப்புறங்களில் கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஆசிரியர்களும், கல்லூரிமாணவர்களும் ஈடுபடுத்தப்படுவார்கள்.
இவ்வாறு அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி கூறினார்.
யு.என்.ஐ.