தமிழகத்தில் இன்று
விமானக் கடத்தல்காரர்களைப் பிடிக்க இன்டர்போல் உதவியை நாடியது சி.பி.ஐ.
டெல்லி:
காத்மாண்டுவிலிருந்து ஆப்கானிஸ்தானுக்குக் கடத்தப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமான கடத்தல்காரர்கள் குறித்து பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்டபல நாடுகளில் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடுமாறு இன்டர்போல் போலீஸுக்கு, சி.பி.ஐ கோரிக்கை வைத்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி டெல்லி வந்து கொண்டிருந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஆப்கானிஸ்தானுக்குக் கடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில்ஒரு பயணி கொல்லப்பட்டார். ஐ.நா. பிரதிநிதிகள் தலையீட்டின் பேரில் பயணிகள் விடுவிக்கப்பட்டனர். இதற்கு மாற்றாக மூன்று தீவிரவாதிகளைஇந்தியா விடுவித்தது. 31-ம் தேதி ஹைஜாக் டிராமா முடிவுக்கு வந்தது.
இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. நேபாளம், இந்தியாவில் தற்போது விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் விமானக்கடத்தல்காரர்களைப் பிடிப்பதற்காக தற்போது இன்டர்போல் போலீஸை சி.பி.ஐ. அணுகியுள்ளது.
இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை இன்டர்போலுக்கு முறையான கோரிக்கை அனுப்பப்பட்டது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்துஆகிய நாடுகளில் உள்ள இன்டர்போல் போலீஸ் மூலம் கடத்தல்காரர்களைப் பிடிக்க உதவ வேண்டும் என்று அதில் கோரப்பட்டுள்ளது.
பல்வேறு நாடுகளிலும் இதுதொடர்பாக எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடுமாறும் இன்டர்போலுக்கு, சி.பி.ஐ. வேண்டுகோள் விடுத்துள்ளது.
கடத்தில் சம்பந்தப்பட்ட ஐந்து கடத்தல்காரர்களும் பாகிஸ்தானில் ஒளிந்திருப்பதாக சந்தேகம் உள்ளது. இப்பினும் இன்டர்போல் மூலம் முறையாக இதைஅணுக சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு பாட்டியாலா சிறப்பு சி.பி.ஐ நீதிமன்றத்தில் கடத்தல்காரர்கள், இப்ராகிம் அக்தர், சன்னி அகமது குவாசி, ஷாகூர் இப்ராகிம்,ஷாஹித் அக்தர் சையத் மற்றும் ஷகீர் ஆகியோரைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பக்கப்பட்டது. இதையடுத்து இன்டர்போல் உதவியை நாட சி.பி.ஐ. முடிவுசெய்ததது.
யு.என்.ஐ.