• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நான் ஒரு தமிழ் தீவிரவாதி என்கிறான் வீரப்பன்: கோபால் பேட்டி

By Staff
|

சென்னை:

வீரப்பன் மேலும் சில கோரிக்கைளை அரசின் முன் வைத்திருக்கிறான் என வீரப்பனை சந்திக்க அரசு தூதராக காட்டிற்கு சென்று திரும்பிய நக்கீரன்கோபால் கூறினார்.

வெள்ளிக்கிழமை இரவில் சென்னையில் நிருபர்களை சந்தித்தார் கோபால். அவர் கூறியதாவது:

நெடிய பயணத்திற்குப்பிறகு, வீரப்பன் , ராஜ்குமாரை சந்தித்தேன். தமிழகம் மற்றும் கர்நாகடக அரசு மிகப்பெய பொறுப்புகளை கொடுத்திருந்தன.ராஜ்குமாரை மீட்டு வரவேண்டும் என்று தூது அனுப்பினார்கள்.

என்னுடன் சிவசுப்பிரமணியன், சுப்பு, பாலு, ஒட்டுனர்கள் மோகன், வெங்கடேஷ் ஆகியோர் வந்திருந்தனர்.ஒரு கடுமையான முயற்சிக்குப் பின்பேராஜ்குமாரையும், வீரப்பனையும் சந்தித்தேன்.

இரு மாநில அரசின் தூதுவராக காட்டிற்குள் சென்றதில் இருபத்தைந்து சதவீதம் தான் சாதித்திருக்கிறோம். ராஜ்குமார் எப்படி இருக்கிறார் என்பதைபடம் பிடித்துக் காட்டிவிட்டோம். ராஜ்குமார் நன்றாக இருக்கிறார்.

ராஜ்குமாரை காப்பாற்றும் பொறுப்பு நம் எல்லோருக்கும் இருக்கிறது. நான் இந்த பணியை எடுத்துக் கொள்வதற்கு காரணமே , கர்நாடகாவில்உள்ள தமிழர்கள் மீது வன்முறை வெடித்துவிடக்கூடாது என்பதற்காகத்தான்.

ராஜ்குமார் என்று காட்டிலிருந்து விடுவிக்கப்படுகிறாரோ அன்று தான் நமக்கு முழுவெற்றி என்றார்.

அவரிடம் நிருபர்கள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பினார்கள்.

வீரப்பனுடன் தீவிரவாத கும்பல் இருப்பதாகச்சொல்கிறார்களே?

வீரப்பனே..நான் ஒரு தமிழ் தீவிரவாதி என்று தான் என்னிடம் சொன்னான். காட்டிற்குள் நான் இருந்த பொழுது என்னை அழைத்துப்போக ஒரு நபர் வந்தார்.அவர் எந்த இயக்கத்தைச்சேர்ந்தவர் என்பது எனக்குத் தெரியாது.

வீரப்பன் இப்பொழுது கொடுத்தனுப்பிய கேஸட்டுகளில் என்ன சொல்லியிருக்கிறான்?

முதலில் வீரப்பன் கொடுத்த கேஸட்டுகளில் இருந்த கோரிக்கைகளுக்கு அரசாங்கம் கொடுத்த பதில்களை வீரப்பனிடம் ஒப்படைத்துவிட்டேன். அதற்கு சிலவிளக்கங்களும், சில நிபந்தனைகளும் விதித்து கேஸட் அனுப்பியிருக்கிறான். சில கோரிக்கைகளும் இருக்கின்றன. அது என்ன என்பது பற்றி அரசு தான்வெளியே சொல்ல வேண்டும்.

அரசு தூதுவனாக சென்றேன்.என் பணியை நான் முடித்துவிட்டேன். இனி அரசு தான் நடவடிக்கை எடுக்கவேண்டும். புதிய நிபந்தனைகள் என்ன, வேறுஎன்னென்ன கேஸட்டில் இருக்கிறது என்பதை அரசு தான் சொல்ல வேண்டும்.

வீரப்பனுடன் எத்தனை பேர் இருக்கிறார்கள்? வீரப்பனுடைய அணுகுமுறைகளில் மாற்றங்கள் இருக்கிறதா?

எனக்குத் தெரிந்து ஒன்பது பேர் இருக்கிறார்கள். முன்பை விட இப்பொழுது வீரப்பன் நிறையவே மாறியிருக்கிறான். கேப்டன் மாதிரி தான் நடந்துகொள்கிறான். இந்த முறை என்னை வரவேற்றது, என்னை திருப்பி அனுப்பியது எல்லாமே வித்தியாசமாகவே இருந்தது.

வீரப்பனை யார் வழி நடத்துகிறார்கள் அங்கே என்ன நடக்கிறது என்பது எனக்குத் தெரியாது. தூதுவனாக சென்ற என் பணி முடிந்து விட்டது. அரசுமறுபடியும் செல்ல வேண்டும் என்றால் சென்றுவருவேன். வீரப்பனே ஒரு தீவிரமாதிரித் தான் நடந்து கொண்டான்.

ராஜ்குமாரை எளிதாக சந்திக்கமுடிந்ததா?

வீரப்பனை சந்தித்தவுடன், ராஜ்குமாரை சந்திக்கமுடியாது. எந்த தீவிரவாதியும் கடத்திய நபரை காட்டமாட்டான் என்று தான் முதலில் சொன்னான்வீரப்பன். ராஜ்குமார் எப்படியிருக்கிறார் என்பதை முதலில் மக்களுக்குச்சொல்லவேண்டும் என்று பேசியபிறகே சந்திக்க அனுமதித்தான்.

நீங்கள் சந்திப்பதற்கு ஏன் இவ்வளவு காலதாமதம் ஆனது? வேறு என்னென்ன வீரப்பன் கேட்டிருக்கிறான்?

கன மழை. வீரப்பன் பொதுமன்னிப்போ, பணமோ கேட்கவில்லை. அரசிடம் இன்னும் சில கோரிக்கைகளும், விளக்கங்களும் கேட்டிருக்கிறான்.இன்னும் எட்டு நாட்கள் கெடு விதித்திருக்கிறான். இதுவரை பணம், பொதுமன்னிப்பும் கேட்டுவந்த வீரப்பன் தீடீரென்று காவிரி நதி நீர் அது இது என்றுமக்கள் பிரச்சனை பற்றி கோரிக்கை விடுத்தது எனக்கே ஆச்சரியமாக இருந்தது.

நானும் அவனிடம் கேட்டேன். அதற்கு ஆறு கோடி தமிழ் மக்களுக்காக போராடுகின்றேன். தமிழ் தீவிரவாதி நான் என்கிறான்.வேறு ஏதாவதுகேட்டால் எங்கள் ஆய்வுக் குழு முடிவு செய்யும். விவாதித்துச் சொல்கிறோம் என்று புதிதாகச் சொல்கிறான்.

காட்டிற்குள் ராஜ்குமார் எப்படியிருக்கிறார்?

நலமாகவே இருக்கிறார். நூறு அடி தூரத்தில் அவரை சந்தித்தவுடனேயே நடந்து எதிரில் வந்து வரவேற்றார். காட்டிற்குள் 25 கிலோமீட்டர் தூரம்வரை நடத்தி சென்றிருக்கிறான். நான் அவர்களை சந்தித்துவிட்டு திரும்பும் பொழது, இங்கிருந்து உடனே கிளம்பிவிடுவோம் என்று சொன்னான் வீரப்பன்.

காட்டிற்குள் அடிக்கடி இடத்தை மாற்றிக் கொண்டிருக்கிறான். ராஜ்குமாருடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன்.77 வயது இளைஞர் அவர். நானாவது,கம்பளி, குல்லா என்று போட்டுக் கொண்டிருந்தேன். ராஜ்குமார் மிக எளிதாக வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை அணிந்து கொண்டு தலையில் ஒரு துண்டைமட்டும் போர்த்திக் கொண்டு இருந்தார்.

முதலில் பங்களாவில் என் அறையில் ராஜ்குமார் எங்கே என்று விசாரித்தார்கள். முதலில் புரியவில்லை. காக்கி சட்டை பேண்டுடன் வந்ததைப் பார்த்துஇன்கம்டாக்ஸில் இருந்து வருகிறார்களோ என்று நினைத்தேன்.

பிறகு வீரப்பனைப் பார்த்ததும் தான் ஆ! வீரப்பா என்றேன். கடத்தறோமுன்னாங்க. மனைவி பயந்தாங்க. ஆறுதல் சொல்லிவிட்டு வந்தேன். முதலில்கொஞ்சதூரம் நடந்ததும் மூட்டுவலி வந்தது. வலிக்கிறது என்றேன்.

உடனே மையில் தைலம் ஒன்றைக் கொடுத்தார்கள். தடவியவுடன் சரியாகிவிட்டது. இப்பொழுது ஒன்றும் இல்லை என்றார் ராஜ்குமார். அவரைநன்றாக வைத்திருக்கிறார்கள். எல்லா உணவும் கொடுக்கிறார்கள்.

ராஜ்குமார் நலமாக இருக்கிறார்.உங்களது மனைவிக்கு, மகன்களுக்கு , ரசிகர்களுக்கு பேசுங்கள் என்று அவரை பேசச் சொல்லி கேஸட்டில் பதிவுசெய்து கொண்டு வந்து கொடுத்திருக்கிறேன்.

ராஜ்குமாரை கடத்தியதால் கர்நாடகாவில் உள்ள தமிழர்களுக்கு பாதிப்பு என்பதை உணர்ந்திருக்கிறானா?

வீரப்பன் அவனுடை விஷயத்தில் உறுதியாக இருக்கிறான். அவ்வளவுதான்.

இவ்வாறு நக்கீரன் கோபால் கூறினார்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X