ராமநாதபுரத்தில் ரூ.6.5 கோடி போதை பொருட்கள் பறிமுதல்
ராமநாதபுரம்:
ராமநாதபுரத்தில் மதுரைக்குச் சென்று கொண்டிருந்த பஸ்சில் ரூ.6.5 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களைப் போலீசார் கண்டுபிடித்து அவற்றைப் பறிமுதல் செய்தனர்.
ராமேஸ்வரத்திலிருந்து மதுரைக்கு பஸ்சில் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக ராமநாதபுரம்போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து ராமேஸ்வரத்திலிருந்து மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு பஸ்சை மடக்கிபோலீசார் சோதனையிட்டனர்.
அப்போது அந்த பஸ்சிலிருந்த ஒரு பையில் ரூ.6.5 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள்இருப்பதைப் போலீசார் கண்டுபிடித்தனர். ஆனால் பஸ்சிலிருந்த அனைத்து பயணிகளுமே அதுதங்களுடைய பையில்லை என்று கூறிவிட்டனர்.
இதையடுத்து அந்த போதைப் பொருட்களைக் கைப்பற்றிய போலீசார், அவற்றைக் கடத்தியவர்கள்குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
ஈரோட்டில் 700 மது பாட்டில்கள் பறிமுதல்:
இதற்கிடையே ஈரோட்டில் காரில் கடத்தப்பட்டுக் கொண்டிருந்த 700 மது பாட்டில்களைப் போலீசார்கைப்பற்றினர்.
மது பாட்டில்கள் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து, ஈரோடு-காங்கேயம் சாலையில் போலீசார்வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்திச் சோதனை போட்டதில், அதில் 700 மதுபாட்டில்கள் கடத்தப்பட்டுக் கொண்டிருப்பது தெரிய வந்தது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.4.5லட்சம் ஆகும்.
அவற்றையும் காரையும் பறிமுதல் செய்த போலீசார், 3 கடத்தல் காரர்களையும் கைது செய்தனர்.அவர்களுக்குச் சொந்தமான ஒரு மதுக் கடையையும் பின்னர் போலீசார் சீல் வைத்துப் பூட்டினர்.


