மற்றொரு திமுக எம்.எல்.ஏ. சஸ்பெண்ட்: சட்டசபையில் திமுக வெளிநடப்பு
சென்னை:
தமிழக சட்டசபையிலிருந்து மேலும் ஒரு திமுக உறுப்பினர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக்கண்டித்து அக்கட்சி எம்.எல்.ஏக்கள் இன்று அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
சட்டசபையில் திமுக எம்.எல்.ஏவான ஜே. அன்பழகன் இன்று பேசும்போது அரசு ஊழியர்கள் மற்றும்ஆசிரியர்கள் பிரச்சனை குறித்துப் பேசினார்.
அவர் பாதி பேசிக் கொண்டிருக்கும்போதே அவருக்காக ஒதுக்கப்பட்டிருந்த நேரம் முடிந்துவிட்டதாகக் கூறிய சபாநாயகர் காளிமுத்து, அவரை உட்காருமாறு கூறினார்.
ஆனால் தான் பேசுவதற்கு மேலும் கால அவகாசம் வேண்டும் என்று அன்பழகன் கேட்டார். ஆனால்அதற்கு சபாநாயகர் மறுத்து விட்டு, அடுத்த உறுப்பினரைப் பேச அழைத்தார்.
இதையடுத்து கோபத்துடன் சபாநாயகர் இருக்கைக்கு அருகே சென்ற அன்பழகன், தன்னைப் பேசஅனுமதிக்குமாறு மீண்டும் கேட்டார். ஆனால் காளிமுத்து அவரைக் கண்டுகொள்ளவில்லை.
இதைத் தொடர்ந்து அன்பழகன் அதிமுக அரசுக்கு எதிராக கோஷம் போட ஆரம்பித்தார்.இதையடுத்து அவை முன்னவரும் நிதி அமைச்சருமான பொன்னையன் எழுந்து, அன்பழகனைஅவையிலிருந்து சஸ்பெண்ட் செய்வது தொடர்பான தீர்மானத்தை முன் மொழிந்தார்.
சபாநாயகர் இருக்கைக்கு அருகே வந்து சத்தம் போட்டதோடு நில்லாமல், கையில் வைத்திருந்தபுத்தகத்தையும் அன்பழகன் கிழித்து எறிந்தார் என்று அந்தத் தீர்மானத்தில் புகார் கூறப்பட்டது.
இதையடுத்து அன்பழகனை சட்டசபையிலிருந்து சஸ்பெண்ட் செய்த காளிமுத்து, அவரைவெளியேற்றுமாறு அவைக் காவலர்களுக்கும் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அன்பழகன்வெளியேற்றப்பட்டார்.
அன்பழகன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் அனைவரும்சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். வெளியே வந்த பின்னர் நிருபர்களிடம் சட்டசபைதிமுக துணைத் தலைவர் துரைமுருகன் கூறுகையில்,
திமுககாரனை எப்படியாவது அவையிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று இந்த அரசு கங்கணம்கட்டிக் கொண்டுள்ளது போலிருக்கிறது.
எனவேதான் அன்பழகன் சென்று சபாநாயகர் இருக்கை அருகே முறையிட்டுக் கொண்டிருந்தபோதுஏற்கனவே எழுதி வைத்திருந்த தீர்மானத்தை பொன்னையன் படித்துள்ளார்.
அவர்கள் சொல்வது போல் அன்பழகன் புத்தகத்தைக் கிழிக்கவே இல்லை. சபாநாயகரிடம்முறையிட்டுக் கொண்டிருந்தபோது அந்தப் புத்தகம் கீழே தவறி விழுந்தது. அதைக் கீழே குனிந்துஅவர் எடுத்தார். அவ்வளவுதான்.
அன்பழகனைத் திட்டம் தீட்டி வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றே அதிமுக அரசு செயல்பட்டுள்ளதுஎன்றார் துரைமுருகன்.
முன்னதாக சஸ்பெண்ட் உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என்று சட்டசபை காங்கிரஸ் தலைவர்எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் மற்றும் துரைமுருகன் ஆகியோர் சபாநாயகருக்குக் கோரிக்கைவிடுத்தனர். ஆனால் அவர்களுடைய கோரிக்கையை ஏற்க காளிமுத்து மறுத்து விட்டார்.
இதைத் தொடர்ந்துதான் திமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
இவ்வாண்டு தொடக்கத்தில் தமிழக சட்டசபை கூடியபோது அதிமுகவினரை நோக்கி அடிக்கப்பாய்ந்ததாகக் குற்றம் சாட்டி திமுக எம்.எல்.ஏவான பரிதி இளம்வழுதியை காளிமுத்து சஸ்பெண்ட்செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் பரிதி கைது செய்யப்பட்டார் என்பதும்நினைவிருக்கலாம்.


