கோபால் ஜாமீனை ரத்து செய்ய கோரும் அரசின் மனு மீது இன்று விசாரணை
டெல்லி & ஈரோடு:
நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடக்கிறது.
நேற்று இந்த மனுவை தமிழக அரசு தாக்கல் செய்தது. இதன் மீது நேற்றே விசாரணை நடப்பதாக இருந்தது.ஆனால், பின்னர் விசாரணை இன்றைக்கு மாற்றப்பட்டது.
அதே நேரத்தில் இந்த மேல்முறையீட்டு மனு மீது அடுத்த உத்தரவு வரும் வரை கோபால் விஷயத்தில் முந்தையநிலையே நீடிக்கும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துவிட்டது. இதனால் ஜாமீன் கிடைத்தும் கூட கோபால் விடுதலைஆக முடியாத நிலை உள்ளது.
சென்னை சிறை தான்..
இதற்கிடையே, கோபால் சென்னை மத்திய சிறையில் தான் அடைக்கப்பட வேண்டும். அவரை வேறு எந்தசிறைக்கும் கொண்டு செல்லக் கூடாது என்று சத்தியமங்கலம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போலீஸ் உளவாளி ராஜாமணி என்பவர் வீரப்பன் கும்பலால் கொலை செய்யப்பட்ட வழக்கில் கோபாலின்பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் கோபால்ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது நீதிபதி தேவநாதனிடம், கோபாலின் வக்கீல் மோகன் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில்,கோபாலுக்கு பொடா வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அரசு அப்பீல் செய்துள்ளது.
எனவே, கோபாலை சென்னை மத்திய சிறையில் மட்டுமே அடைக்க வேண்டும், வேறு எங்கும் கொண்டு செல்லக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட அவர் கோயிருந்தார்.
இதை ஏற்ற நீதிபதி தேவநிாதன், கோபால் சென்னை மத்திய சிறையில் மட்டுமே அடைக்கப்பட வேண்டும். வேறுஎங்கும் அழைத்துச் செல்லப்படக் கூடாது என்று உத்தரவிட்டார்.
கோபாலை ஈரோடு சிறைக்கு மாற்ற தமிழக அரசு திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு இப்போது தடைவாங்கிவிட்டார் கோபால்.

