பஸ் எரிப்பு வழக்கு: அரசுக்கு எதிரான மனு தள்ளுபடி
சென்னை:
தர்மபுரியில் பஸ்ஸோடு மாணவிகள் எரிக்கப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு எதிராக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கைசென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அரசு வழக்கறிஞரை நியமிக்காதது, வழக்கு விசாரணையை தாமதப்படுத்தியதுஆகியவற்றைக் கண்டித்து தமிழக அரசு மீது பலியான மாணவிகளில் ஒருவரான கோகிலவாணியின் தந்தை வீராசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
பஸ்ஸை எரித்த அதிமுகவினரைக் காப்பாற்ற அரசும் காவல்துறையும் கைகோர்த்துக் கொண்டு செயல்பட்டு வரும் நிலையில், வீராசாமியின்மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி கனகராஜ் சாட்டையை சுழற்றியதையடுத்து பஸ் எரிப்பு வழக்குக்காக நியமிக்கப்பட்ட அரசுவழக்கறிஞருக்கு அப்பாயின்மெண்ட் ஆர்டரை அவசரமாக வழங்கியது தமிழக அரசு.
மேலும் வழக்கு தாமதமானவதற்குக் காரணத்தைக் கேட்டு முன்னாள் மற்றும் இன்னாள் உள்துறைச் செயலாளர்களுக்கு நோட்டீஸ்அனுப்பினார் நீதிபதி. இதையடுத்து அவர்கள் நொண்டிச் சாக்குடன் கூடிய அறிக்கை தாக்கல் செய்ய, அதையும் கண்டித்தார் நீதிபதி.
வழக்கு தாமதமானதற்காக 2 முன்னாள் உள்துறைச் செயலாளர்களும், இப்போதைய உள்துறைச் செயலாளரும் நீதிமன்றத்திடம் வருத்தம்தெரிவித்தனர்.
எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக, தர்மபுரி பஸ் எரிப்பு தொடர்பான ஆவணக் கட்டுகளைக் காணவில்லை என தமிழக காவல் துறை ஒருபோடு போட்டது. சிபிஐயை விட்டு தேடச் சொல்லவா என நீதிபதி, சாட்டையை எடுக்க, ஒரே நாளில் கேஸ் கட்டுகளைக் கண்டுபிடித்து உலகசாதனை படைத்தது தமிழக அரசும், காவல்துறையும்.
நீதிபதி கனகராஜ் இந்த அவமதிப்பு வழக்கு மனுவை விசாரித்த கடந்த ஒரு வாரத்திலேயே தமிழக அரசு மற்றும் காவல்துறையின்செயல்பாடுகளில் நிறைய மாற்றங்கள் தெரிய ஆரம்பிவிட்டன.
இதையடுத்து அரசுக்கு எதிராக மாணவி கோகிலவாணியின் தந்தை வீராசாமி தாக்கல் செய்த அவமதிப்பு வழக்கை நீதிபதி கனகராஜ்தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும், பஸ் எரிப்பு வழக்கை ஆரம்பத்தில் இருந்து மீண்டும் முழுமையாக முறையாக விசாரிக்கவும் சேலம் கோர்ட்டுக்கு உத்தரவிட்டார்.
அதே நேரத்தில், பஸ் எரிப்பு வழக்குத் தொடர்பாக கடந்த 2003ம் ஆண்டு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் அரசுக்கு எதிராக இடம்பெற்றிருந்த வாசகங்களை நீக்குமாறு அரசுத் தரப்பு கோரியதை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார்.


