• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திமுக: இதயத்தில் இடமா? கூட்டணியில் இடமா?

By Staff
|

சென்னை:

வரும் சட்டசபைத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடப் பங்கீடு செய்வது திமுகவுக்கு பெரும் தலைவலியாக இருக்கும் என்றுதெரிகிறது.

தொகுதிப் பங்கீட்டில் தலையைப் பிய்த்துக் கொள்ளப் போகும் கூட்டணியாக திமுக கூட்டணி விளங்குகிறது. இதில் இடம்பெற்றுள்ள பாமக கடந்த தேர்தலை விட இந்த முறை அதிக இடங்களைக் கேட்க திட்டமிட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சி என்ற பிட்டைப் போட்டு கூடுதல் சீட்களைக் கேட்க ஆயத்தமாகி வருகிறது. கம்யூனிஸ்ட்கட்சிகளும் கூடுதல் சீட் கேட்கத் தயாராகி வருகின்றன.

மதிமுகவைப் பொருத்தவரை கொடுத்த சீட்டை வாங்கிக் கொள்வார்கள் என்றாலும் கூட இந்த முறை அவ்வளவு சீக்கிரம் வைகோவளைந்து கொடுக்க மாட்டார் என்கிறார்கள். மக்களவைத் தேர்தலில் கடந்த முறை தந்ததைவிட ஒரு சீட் குறைவாகக் தந்தது திமுக.அப்போது சட்டமன்றத் தேர்தலில் இந்தக் குறை, நிறை செய்யப்படும் வைகோவுக்கு உறுதி தரப்பட்டது.

இவர்கள் தவிர முஸ்லீம் லீக் உள்ளிட்ட பல குட்டிக் கட்சிகளும் உள்ளன. இந் நிலையில் திருமாவளவனின் விடுதலைச்சிறுத்தைகளை திமுக கூட்டணிக்குக் கொண்டு வர ராமதாஸ் தீவிரமாக முயன்று வருகிறார்.

அப்படி வந்தால் பாமகவுக்குத் தரப்படும் இடங்களில் வி.சிறுத்தைகளுக்கு ராமதாஸ் கொஞ்சம் சீட்களைப் பிரித்துத் தந்துகொள்ள வேண்டும் என திமுக கூறி வருகிறது.

இவ்வாறாக இதுவரை இல்லாத அளவுக்கு தொகுதிப் பங்கீட்டில் திமுகவுக்கு நெருக்குதல் அதிகமாகி வருகிறது.

மறுபக்கம் பங்கீடு என்ற பிரச்சினையே இல்லாமல் அதிமுக படு ஹாயாக உள்ளது. எவ்வளவோ முயற்சி செய்தும் கூட்டணி சேரஆளே கிடைக்காததால் தனித்துப் போட்டியிட்டாக வேண்டிய நிலைக்கு முதல்வர் ஜெயலலிதா தள்ளப்பட்டுள்ளார்.

வழக்கம்போல் சந்தானம் போன்ற பார்வர்ட் பிளாக் கட்சி, துக்கடா கட்சிகளுக்கு ஒன்று இரண்டு சீட்களைத் தந்துவிட்டு மிச்சமுள்ளஅனைத்திலும் மச்சமுள்ள அதிமுகவினருக்கு சீட் தரப்படும்.

இதில் என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு கட்சி முழி முழி என முழித்துக் கொண்டுள்ளது. அது பாஜக. ஜெயேந்திரர்விஷயத்தில் அதிமுகவுடன் வகையாக மோதியாகிவிட்டது. திமுக கூடச் சேர்க்காது என்ற நிலை.

இதனால் எப்படியாவது ஜெயலலிதாவிடம் சரணாகதி அடைந்து 5,6 சீட்களை வாங்கிக் கொள்ளும் எண்ணத்தில் இருக்கிறதுபாஜக. தனித்துப் போட்டி என்ற ரிஸ்க் எடுத்தால் இரண்டு பிரச்சனைகள்.

முதல் பிரச்சனை 234 தொகுதிகளுக்கு வேட்பாளர்களைத் தேடுவது. அடுத்தது அவர்களது டெபாசிட்டை காப்பாற்றுவது.

இதனால் விஜயகாந்தோடு அப்படியே ஒரு அட்டாச்மெண்ட் வைத்துக் கொண்டு வண்டியை ஓட்டும் நோக்கத்தில் அக் கட்சியில்சிலர் இருந்தாலும், பலரும் மீண்டும் அதிமுகவுடன் எப்படியாவது கூட்டணி போட்டுவிட வேண்டும் என்று விரும்புகிறார்ள்.

அத்வானி தலையிட்டால் அதிமுக கூட்டணி அமைந்துவிடும் என்கிறார்கள்.

இந் நிலையில் அதிமுகவுக்கு ஜால்ராவைத் தட்ட ஆரம்பித்துள்ளார் விஜய டி.ராஜேந்தர். அம்மா கானம் பாடி வரும் இவரதுலட்சிய திமுகவுக்கு ஒரே ஒரு சீட் கொடுத்தால் போதும், மாநிலம் முழுவதும் அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்ய ரெடி.

நான் தனியே தான் போட்டியிடுவேன் என்று கூறி வரும் விஜய்காந்தும் மறைமுகமாக அதிமுகவுடன் அண்டர்ஸ்டாண்டிங்குக்குவருவார் என்று தெரிகிறது.

வழக்கமாக முக்கிய கட்சிகளுக்கு கூட்டணியில் இடம் தந்துவிட்டு மற்றவர்களுக்கு இதயத்திலே இடம் தருவார் திமுக தலைவர்கருணாநிதி. இம்முறை அவரது இதயத்தைவிட கூட்டணியில் இடம் பிடிக்கவே ஆர்.எம்.வீரப்பனில் ஆரம்பித்து, சேதுராமன் வரைபல்வேறு குட்டிக் கட்சியிரும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதனால் இருக்கும் ரொட்டியை எல்லோருக்கும் பிய்த்துத் தரும் அரசியல் சர்க்கஸை கருணாநிதி இப்போதே ஆரம்பித்துவிட்டார்.தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிகாரப்பூர்வமற்ற முறையில் ராமதாஸ், வைகோ உள்பட அனைவருடனும் ஒரு ரவுண்டுப்பேச்சுவார்த்தையை கருணாநிதி முடித்து விட்டதாகக் கூட சொல்கிறார்கள்.

இச் சூழ்நிலையில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள உழவர் உழைப்பாளர் கட்சி, 5 தொகுதிகள் வேண்டும் என்று பேசத்தொடங்கியுள்ளது. இந்தக் கட்சியின் தலைவரான செல்லமுத்து திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

நாங்கள் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளோம். எங்களுக்கு 30 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளது. ஆனால் 5தொகுதிகளை மட்டும் கேட்போம். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகளின் நலனை முன்னிட்டு கள்ளுக் கடைகளை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நதிகள் இணைப்புத்திட்டத்தை வேகமாக நிறைவேற்ற வேண்டும் என்றார் செல்லமுத்து.

5 கேட்டால் ஒன்னாவது கிடைக்குமே என்பது தான் செல்லமுத்துவின் லாஜிக் என்கிறார்கள் அவரது கட்சியினர்.

செல்லமுத்துவுக்கு கூட்டணியில் கருணாநிதி இடம் தருவாரா அல்லது தனது இதயத்திலே பிளாஸ்டிக் சேர் போட்டு உட்காரவைப்பாரா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X