For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இடஒதுக்கீடு-மத்திய அரசுக்கு ஆதரவாகஉச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:ஐஐஎம், ஐஐடி உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 சகதவீத இடஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் சட்டத்திற்கு ஆதரவாக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த சட்டத்துக்கு முதலில் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து மத்திய அரசு தாக்கல் செய்த அப்பீலை விசாரித்த நீதிமன்றம் இந்த ஆண்டுக்கு மட்டும் இட ஒதுக்கீட்டுக்கு தடை விதித்தது.

இதை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு மனு மற்றும் பல ரிட் மனுக்கள் மீதான விசாரணை வரும் 8ம் தேதி நடக்கிறது.

இந் நிலையில் மத்திய அரசுக்கு ஆதரவாக தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில்,

மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதை விரிவாக்கும் வகையில் தான் தற்போது உயர்கல்வி நிறுவனங்களிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர் தேர்வுக்கான இடஒதுக்கீடு முறையை ஏற்கனவே உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ள நிலையில், அதே முறையை உயர்கல்வி நிறுவனங்கள் விஷயத்திலும் அமல்படுத்துவதற்கு தடை விதிக்க காரணம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

கடந்த 1931ம் ஆண்டுக்கு பின்னர் வகுப்பு வாரியாக கணக்கெடுப்பு மேற்கொள்ள வழியே இல்லாமல் போய்விட்டது. எனவே ஜாதி வாரியான அம்சங்களுடன் நம்முன் உள்ள ஒரே கணக்கு விவரமான 1931ம் ஆண்டு கணக்கெடுப்பின் அடிப்படையில், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற நிலையைத் தான் நாம் எடுக்க வேண்டியுள்ளது. இதனால் எந்தவித பாதகமும் இல்லை.

கடந்த 1980ம் ஆண்டு மண்டல் கமிஷன் அளித்த அறிக்கையில், நாட்டில் மொத்த மக்கள் தொகையில் 52 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்டவர்கள் தான் எனத் மதிப்பிடப்பட்டுள்ளது. எப்படி பார்த்தாலும் பிற்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 சதவீதத்திற்கு குறைவாக இருக்க வாய்பில்லை. எனவே 27 சதவீதம் இடஒதுக்கீடு என்ற மத்திய அரசின் திட்டம் மிகவும் உண்மையானது. உறுதிபடுத்தத்தக்கது.

மத்திய அரசு கட்டுபாட்டிலுள்ள மற்றும் நிதியுதவி பெறும் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கடந்த 2006ம் ஆண்டு மே மாதம் தமிழக சட்டசபையில் ஒரு மனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொழிற் கல்லூரிகளில் 69 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கல்வி நிறுவனங்களில் 69 சதவீதத்திற்கு பதிலாக, 50 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டால் எத்தனை மாணவர்களுக்கும் சேர்க்கை இடம் கிடைக்குமோ அத்தனை இடங்களை கூடுதலாக்குமாறு கல்வி நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் ஆண்டுதோறும் இடைக்கால உத்தரவுகள் பிறப்பித்து வந்துள்ளது.

இந்த நடமுறைகளை பின்பற்றி உயர்கல்வி நிறுவனங்களில் பொதுப்பிரிவு மாணவர்கள் பாதிக்காத வகையில் சேர்க்கை இடங்களை அதிகரிக்கும் அம்சங்களை மத்திய அரசு இடஒதுக்கீடு சட்டத்தில் இணைத்துள்ளது. எனவே மத்திய அரசின் இட ஒதுக்கீடு சட்டத்துக்கு அனுமதி தர வேண்டும்.

இவ்வாறு தமிழக அரசு தனது மனுவில் கூறியுள்ளது.

இட ஒதுக்கீடு விஷயத்தில் நாட்டிலேயே முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்குகிறது என்றும் அந்த மனுவில் குறிப்பிடத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசின் சார்பில் பிரபல மூத்த வழக்கறிஞர் பராசரன் ஆஜராக உள்ளார்.

இந்த மனுவும் 8ம் தேதியே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X