For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காங். எம்.எல்.ஏக்கள் திடீர் போர்க்கொடி ஏன்?

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: திமுக அமைச்சரைவயில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படவுள்ளதாக கூறப்படும் அமைச்சர் பதவியை வாசன் ஆரவாளர்கள் கைப்பற்றி விடக் கூடாது என்பதற்காகத்தான் அனைத்து கோஷ்டிகளும் இணைந்து வாசன் தரப்புக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் என்றாலே கோஷ்டி பூசல் என்ற நிலை தமிழகத்தில் உள்ளது. ஜி.கே.வாசன், ஈவிகேஎஸ். இளங்கோவன், கிருஷ்ணசாமி, அன்பரசு, தங்கபாலு ஆகியோர் தலைமையில் பல்வேறு கோஷ்டிகள் செயல்பட்டு வருகின்றன.

இருப்பினும் வாசன் கைதான் காங்கிரஸில் ஓங்கியுள்ளது. கட்சி பதவிகளில் வாசன் ஆதரவாளர்கள் அதிக அளவில் இடம்பிடித்திருப்பதால் புகைச்சல் ஏற்பட்டுள்ளது.

வாசன் ஆதரவாளர்களைக் கட்டுப்படுத்த கிருஷ்ணசாமி ஆதரவாளர்கள் முயன்று வருகின்றனர். கிருஷ்ணசாமியின் மறைமுக ஆதரவின் பேரில்தான் வாசன் எதிர்ப்பு எம்.எல்.ஏக்கள் இருமுறை ரகசியமாக கூடி ஆலோசனை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

முதல் ரகசியக் கூட்டத்திற்கு இளங்கோவன் ஆதரவு தரவில்லை. ஆனால் அடுத்த கூட்டத்திற்கு அவரே தலைமை தாங்கினார். மொத்தம் உள்ள 34 எம்.எல்.ஏக்களில் 17 பேர் வாசன் ஆதரவாளர்கள்.

சட்டசபை காங்கிரஸ் தலைவர், கொறடா, காங்கிரஸ் பொருளாளர் ஆகிய பதவிகளில் வாசன் ஆதரவாளர்கள்தான் உள்ளனர்.

சட்டசபை காங்கிரஸ் தலைவரும், வாசனின் தீவிர ஆதரவாளருமான சுதர்சனம் சட்டசபையில் வாசன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு மட்டுமே பேசுவதற்கு வாய்ப்பளிப்பதாக மற்றவர்கள் புகார் கூறுகின்றனர். இதனால் வாசன் கோஷ்டிக்கு எதிராக அனைத்து கோஷ்டிகளும் இணைந்து களம் இறங்கியுள்ளனர். இவர்களை சமாதானப்படுத்த முயன்ற சுதர்சனத்தின் நடவடிக்கை கைகொடுக்கவில்லை.

இந்த நிலையில்தான் தீவிர வாசன் எதிர்ப்பாளரான போளூர் வரதன் எம்எல்ஏ வீட்டில் திடீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் மத்திய அமைச்சர் இளங்கோவன், கார்த்தி சிதம்பரம், சட்டசபை காங்கிரஸ் துணை தலைவர் யசோதா, கிருஷ்ணசாமியின் மகன் டாக்டர் விஷ்ணுபிரசாத், அருள் அன்பரசு உள்ளிட்ட 12 பேர் கலந்து கொண்டனர்.

நாம்தான் உண்மையான காங்கிரஸ், ஆனால் தமாகாவிலிருந்து வந்த வாசன் ஆதரவாளர்கள் மூன்றில் இரண்டு பதவிகளை வாங்கிவிடுகின்றனர். இதை அனுமதிக்க முடியாது. சுதர்சனம் சட்டசபை தலைவர் பதவி, கட்சி பொருளாளர் பதவி ஆகிய 2 பதவிகளை வகிக்க கூடாது. காமராஜ் அறக்கட்டளை கணக்கு விவரங்களை வெளியிட வேண்டும் என்ற பல கோரிக்கைகளை இவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து சோனியா காந்தியை சந்தித்து புகார் செய்ய முடிவு செய்து எம்.எல்.ஏக்களிடம் கையெழுத்து வாங்கி வருகின்றனர். சோனியாவைச் சந்திக்க 5 அல்லது 7 ஆகிய தேதிகளில் ஒன்றில் அனுமதிக்குமாறு கோரி பேக்ஸ் மூலம் கடிதம் அனுப்பியுள்ளனர்.

ஆனால் அனுமதி கிடைப்பதில்தான் சந்தேகம் நிலவுகிறது. சோனியா காந்தி உ.பி. தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக உள்ளார். மேலும் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரான வீரப்ப மொய்லியை ஓரம் கட்டி விட்டு சோனியாவை வாசன் எதிர்ப்பாளர்கள் பார்க்க முடியுமா என்பது இன்னொரு சந்தேகம்.

வாசன் எதிர்ப்பாளர்களின் எதிர்ப்பு இந்த முறை தீவிரமாக இருப்பதற்கு இன்னொரு காரணமும் கூறப்படுகிறது. அதாவது திமுக அமைச்சரவையில் காங்கிரஸுக்கு இடம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 4 அமைச்சர் பதவி வரை காங்கிரஸுக்குத் தரப்படக் கூடுமாம்.

இவற்றில் 3 பதவிகளை வாசன் தரப்பு வாங்க முயற்சி மேற்கொண்டுள்ளது. வாசன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் திமுக தரப்புடன் மிக நெருக்கமாக, நட்போடு இருப்பதால் இது சாத்தியம் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் வாசன் குழுவினர் 3 அமைச்சர் பதவிகளை வாங்கி விட்டால் நமது கதை அவ்வளவுதான் என்பதால்தான் வாசன் எதிர்ப்பாளர்கள் இம்முறை கடும் கொந்தளிப்பை வெளிக்காட்டியுள்ளனர்.

வெறுமனே எதிர்ப்புக் குரல் கொடுத்தால் சரியாக இருக்காது என்பதால்தான் எம்.எல்.ஏக்கள் மூலம் போர்க்கொடி உயர்த்தியுள்ளனராம்.

ஒருவேளை டெல்லி சென்று சோனியாவை சந்திக்க முடியாவிட்டாலும் கூட 11ம் தேதி கருணாநிதி பொன்விழாவுக்கு சென்னைக்கு வரும்போது சந்தித்து விட வேண்டும் என்றும் தீவிரமாக இருக்கிறார்களாம் வாசன் எதிர்ப்பாளர்கள்.

காந்தி அன்றே சொன்னார், யாரும் கேட்கலியே ...

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X