For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சேது திட்டத்தை எதிர்ப்பவர்கள் தேச துரோகிகள்: கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் தேச துரோகிகள் என்று முதல்வர் கருணாநிதி காட்டமாக கூறியுள்ளார்.

சென்னை அமைந்தகரை பகுதியில் நேற்று சேது சமுத்திரத் திட்டமும், ராமர் பாலமும் என்ற தலைப்பில் பொதுக் கூட்டம் நடந்தது. இதில் முதல்வர் கருணாநிதி பங்கேற்றுப் பேசினார்.

கருணாநிதி பேசுகையில், நான் முதல் முறையாக குளித்தலை தொகுதியில் நான் போட்டியிட்டேன். அப்போது பிரசாரத்திற்கு அங்கு போனபோது, அந்த ஊரைச் சேர்ந்தவர்கள், அந்த ஊர் நாட்டாண்மைகாரர்கள், செல்வாக்கு பெற்றவர்கள் என்னை வந்து சந்தித்தனர்.

நீங்கள் வெற்றி பெற்றால், குளித்தலை, முசிறிக்கு இடையே பாலம் கட்டித் தருவீர்களா என்று கேட்டனர். இரு ஊர்களுக்கும் இடையே காவிரி பெருக்கெடுத்து ஓடுகிறது. இரு ஊர்களில் ஒரு ஊருக்கு செல்வதாக இருந்தாலும் திருச்சியைச் சுற்றிக் கெண்டு, கிட்டத்தட்ட 65 கிலேமீட்டர் தொலைவு சென்றுதான் போக முடியும்.

ஆனால் இரு ஊர்களுக்கும் இடையிலான தொலைவு ஒரு மைல் தொலைவுதான். இந்தப் பாலத்தைக் கட்டினால் ஒன்று அல்லது ஒன்றரை கிலோ மீட்டர் பயணத்தில் ஊருக்குப் போய் விடலாம். இந்தக் கோரிக்கையை கேட்ட நான், இப்போதுதான் நான் வந்துள்ளேன். எனது கட்சி ஆட்சிக்கு வந்தால் செய்து தருகிறேன் என்றேன். அந்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு வரவில்லை.

1967ல் திமுக ஆட்சிக்கு வந்தது. அண்ணா முதல்வர் ஆனார். நான் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆனேன். முதல் வேலையாக அந்தப் பாலத்தைக் கட்டிக் கொடுத்தேன். இப்போது அந்தப் பாலம் இரு ஊர் மக்களுக்கும் சேவை செய்து கொண்டுள்ளது. நானும் பலமுறை அந்தப் பாலம் வழியாக பயணித்துள்ளேன்.

குளித்தலை-முசிறி பாலம் ஒரு சாதாரண விஷயம்தான். இதைப் பெருக்கிப் பார்த்தால்தான் சேது சமுத்திரத் திட்டம் என்பது எவ்வளவு பெரிய விஷயம் என்பது தெரிய வரும்.

இந்தத் திட்டம் நிறைவேறாமல் இப்போதைய நிலை நீடிக்குமானால், தமிழகத்தின் வழியாகச் செல்லும் கப்பல்கள், இலங்கையைச் சுற்றிக் கொண்டு ஏறத்தாழ 1000 கிலோமீட்டர் அதிக நேர பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

இந்தத் திட்டத்தை சிலர் எதிர்க்கிறார்கள். கடவுளைக் காட்டி, மதத்தைக் காட்டி, புராணத்தைக் காட்டி எதிர்க்கிறார்கள்.

ஆயுதத்தை, படையைத் திரட்டி அவர்கள் எதிர்க்கவில்லை. அப்படி எதிர்த்தால் அவர்களை சமாளித்து விடலாம். ஆனால் புராணத்தைக் காட்டி, கடவுள் பெயரைச் சொல்லி நம்மை அச்சுறுத்தி அந்தப் பாலத்தை இடித்தால் நாட்டுக்கே ஆபத்து, இந்தியாவுக்கே ஆபத்து வந்து விடும் என சொல்லி பிரசாரம் செய்கின்றனர்.

அதை முறியடிக்க வேண்டும் என்பதற்காக இந்த பொதுக் கூட்டத்தைக் கூட்டி உங்களின் அறிவு ஆயுதத்தைதக் கூர் தீட்ட வேண்டும். சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் இதுபோன்ற கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.

கருணாநிதி, வீரமணி, ராமதாஸுக்கு, கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு ராமரைப் பிடிக்காது, அதனால்தான் பாலத்தை இடிக்கப் பார்க்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.

கடவுள் பெயரால் இருக்கிற கட்டடங்களை நீங்கள் இடிக்கவில்லையா?கடந்த 100 ஆண்டுகளில் ஸ்ரீரங்கம் கோபுரம் எத்தனை முறை பழுதுபார்ப்பதற்காக இடிக்கப்பட்டிருக்கிறது. அதை இல்லை என்று சொல்ல முடியுமா?

சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரியாருக்கு சென்னை கிண்டியில் திமுக ஆட்சியில்தான் நினைவு மண்டபம் கட்டப்பட்டது. ராஜாஜிக்கு ராமர் பிடிக்கும் என்பதால் நினைவு மண்டபத்தின் முகப்பில் ராமர் கிரீடம் வைக்கப்பட்டது.

ராமர் பெயரால் எதுவும் இருக்கக் கூடாது என்று நான் கூறவில்லை. ராமர் பாலமே இல்லை என்கிறபோது அதை எப்படி இடிக்க முடியும் என்றுதான் நாங்கள் கேட்கிறோம்.

இந்தியா வல்லரசாக மாற இந்தத் திட்டம் பயன்படும். 100 கோடி மக்கள் இந்தியாவில் உள்ளனர்.

பாகிஸ்தான், பர்மா, இலங்கை இல்லாமல் 100 கோடியை மக்கள் தொகை தாண்டி விட்டது. குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை மத்திய அரசு தீவிரப்படுத்த வேண்டும்.

குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் ஒருபுறம், சேது சமுத்திரத் திட்டம் மறுபுறம் என இவை நிறைவேற வேண்டுமானால், குறுக்கே வரும் பெருச்சாளிகளுக்கும், குருட்டுத் தனங்களுக்கும் இடம் தராதீர்கள்.

இவர்களது புலம்பல்களுக்கும், இதிகாசத்தின் பெயரால், இலக்கியத்தின் பெயரால், வரலாற்றின் பெயரால், நம் நாட்டு வளத்தை தடுப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் நாட்டின் விரோதிகள், தேச துரோகிகள் என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X