• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரவுடி வெள்ளை ரவிக்கு சென்னை போலீஸ் குறி!

By Staff
|

சென்னைரூ. 2 கோடி கேட்டு தொழிலதிபரின் மகனைக் கடத்திச் சென்ற பிரபல ரவுடி வெள்ளை ரவியை சுட்டுக் கொல்ல போலீஸாருக்கு சென்னை காவல்துறை தலைமை உத்தரவிட்டுள்ளது.

சென்னை நகரைக் கலக்கி வரும் பிரபல ரவுடிகளில் ஒருவர்தான் வெள்ளை ரவி. கடந்த 20 வருடமாக சென்னை மக்களை பீதிக்குள்ளாக்கி வருபவன் ரவி. இவன் மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், அடிதடி என பல வழக்குகள் உள்ளன. ஆனால் ஒரு வழக்கிலும் இவன் தண்டனை பெற்றதில்லை.

அரசியல், காவல்துறையில் உள்ள சிலரின் துணையோடு சுதந்திரமாக நகர் வலம் வந்தவன் வெள்ளை ரவி. கர்நாடக மாநிலம் பெல்காமைச் சேர்ந்த ஒரு காங்கிரஸ் கட்சிப் பிரமுகரின் மகளைத்தான் ரவி கல்யாணம் செய்துள்ளான். அங்குதான் ரவியின் மனைவியும், குழந்தைகளும் வசித்து வருகின்றனர்.

முன்பு ஒருமுறை சிறையில் அடைக்கப்பட்டபோது அங்கிருந்தபடியே தனது தாதா சாம்ராஜ்யத்தை நடத்தி வந்தவன் வெள்ளை ரவி. கடந்த சட்டசபைத் தேர்தலின்போது சென்னை நகருக்குள் ரவி நுழைய போலீஸார் தடை விதித்திருந்தனர்.

சில காலமாக அடங்கியிருந்த வெள்ளை ரவி தற்போது மீண்டும் தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளான். இந்த நிலையில்தான் தொழிலதிபர் ஒருவரின் மகனைக் கடத்தி ரூ. 2 கோடி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் சிக்கியுள்ளான் ரவி.

செங்குன்றத்தை அடுத்த பாடி பகுதியைச் சேர்ந்தவர் வீரய்யா. இவரது மகன் ராஜ்குமார். வீரய்யா தொழிலதிபர் ஆவார். 25 வயதாகும் ராஜ்குமார் கடந்த 22ம் தேதி வீட்டில் இருந்தபோது சிலர் அங்கு வந்தனர்.

வருமான வரி அதிகாரிகள் என்று கூறிக் கொண்ட அவர்கள் வீட்டை சோதனை போட வேண்டும் என்று கூறினர். ராஜ்குமாரும் அதற்கு அனுமதித்தார். சோதனை போடுவது போல நாடகமாடிய அக்கும்பல் பின்னர் ராஜ்குமாரை காரில் அழைத்துச் சென்றனர்.

பிறகுதான் தான் கடத்தப்பட்டதும், அவர்கள் வருமான வரி அதிகாரிகள் இல்லை என்பதும் ராஜ்குமாருக்குத் தெரிய வந்தது. கடத்தப்பட்ட ராஜ்குமாரை பெரியமேட்டில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்த அக்கும்பல், வீரய்யாவுக்கு போன் செய்து ரூ. 2 கோடி பணம் தர வேண்டும். இல்லாவிட்டால் ராஜ்குமாரை உயிருடன் பார்க்க முடியாது என மிரட்டினர்.

இதையடுத்து தானே பணத்தைத் தந்து விடுவதாக ராஜ்குமார் கூறவே முதல் கட்டமாக ரூ. 60 லட்சம் பணத்தை அக்கும்பல் பெற்றுக் கொண்டது. மீதப் பணத்தை வெளியில் சென்று ஏற்பாடு செய்து தருவதாக ராஜ்குமார் கூறவே அவரை அக்கும்பல் வெளியில் விட்டது.

தப்பி வந்த ராஜ்குமார் போலீஸில் புகார் செய்தார். இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு கடத்தல்காரர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கடத்தல் கும்பல் எப்படியும் ராஜ்குமார் வீட்டுக்கு வரும் என்பதை ஊகித்த போலீஸார் அவரது வீட்டைச் சுற்றிலும் மாறு வேடத்தில் போலீஸாரை நிறுத்தி வைத்தனர்.

இந்த நிலையில் சென்னை கொளத்தூரில் உள்ள ஒரு இடத்திற்கு ராஜ்குமாரை மீதப் பணத்துடன் வருமாறு கூறியது அந்த கடத்தல் கும்பல். போலீஸார் சம்பவ இடத்தை மாறு வேடத்தில் முற்றுகையிட்டனர். ஒரு சூட்கேஸுடன் ராஜ்குமாரை அந்த இடத்திற்கு அனுப்பினர்.

அப்போது இருவர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். அவர்களைப் பார்த்த போலீஸார் அப்படியே சுற்றி வளைத்தனர். இதையடுத்து இருவரும் தப்பி ஓட முயன்றனர். ஆனால் போலீஸார் துப்பாக்கிகளுடன் சுற்றி வளைத்து தப்பித்தால் சுட்டு விடுவோம் என எச்சரித்தனர். இதையடுத்து இருவரும் ஓடாமல் சரணடைந்தனர்.

இருவரையும் பிடித்த போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில், இருவரும் வெள்ளை ரவியின் கும்பலைச் சேர்ந்த சிவக்குமார், ராஜ்குமார் எனத் தெரிய வந்தது. இருவரும் வியாசர்பாடியைச் சேர்ந்த ரவுடிகள்.

ரவி சொல்லித்தான் ராஜ்குமாரைக் கடத்தியதும் தெரிய வந்தது. முதல் கட்டப் பணமான ரூ. 60 லட்சத்தை ரவிதான் வாங்கியுள்ளான். மீதப் பணத்தை வாங்க இந்த இருவரும் வந்தபோது கூடவே ரவியும் காரில் வந்தான். போலீஸாரைப் பார்த்ததும் அவர் தனது ஆட்களுடன் தப்பி விட்டான்.

ஆந்திராவுக்கு ரவியும் அவனது கும்பலும் தப்பி ஓடி விட்டனர். அவர்களைப் பிடிக்க தனிப்படை போலீஸார் விரைந்துள்ளனர். ரவியைக் கண்டதும் சுடவும் தனிப்படை போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

எனவே கூடிய விரைவில் ரவி என்கவுண்டரை எதிர்பார்க்கலாம் என சென்னை காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X