For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மத வெறியை தூண்டிவிட முயற்சி-கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News


சென்னை

மத வெறியைத் தூண்டிவிட்டு சேது சமுத்திரத் திட்டத்தை முடக்க சதி நடப்பதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:

இந்து மதப் பாதுகாப்பு என்ற போர்வையில் மத வெறியர்கள் இந்த நாட்டின் வளர்ச்சிக்கும் மக்களின் வளமிகு வாழ்வுக்கும் இருள்திரை போடக் கூடிய பொய்யுரைகளைப் புனைந்து, தங்களின் பழைய ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொள்ள எத்தனை பெரிய சூழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது தெளிவாகப் புரிந்த ஒன்றாக இருக்கும் நிலையில், அவர்களின் சூது வலையில் அரசியல் கட்சிகளும், அப்பாவி மக்களும் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதைச் சிந்தித்துப் பார்த்து, அத்தகையோர் செயல்பட வேண்டிய விதம் பற்றிய கருத்துக்களை வெளியிடுவதே இந்த அறிக்கையின் நோக்கமாகும்.

குறிப்பாக தமிழர்களின் நூறாண்டு காலத்திற்கு மேற்பட்ட கனவாக இருந்து வருகின்ற சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு பலமுறை, பல வல்லுநர்களால், பல்வேறுபட்ட அரசுகளால் முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு- இடையில் தடங்கல்கள் ஏற்பட்ட போதெல்லாம் அனைத்தையும் சமாளித்து- திட்டத்தை நிறைவேற்றக்கூடிய திட மனது கொண்ட ஓர் அரசு மத்தியிலே உருவாகும் வரையில் காத்திருக்க வேண்டியதாயிற்று.

இடையில் வாஜ்பாய் தலைமையில் அமைந்த பாஜக அரசு சேது சமுத்திரத் திட்டத்தை தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இதே வழியிலேயே செயற்படுத்த முதல் ஆணை பிறப்பித்தது என்றாலும்கூட, அதற்கான கோப்புகளில் பாஜக அமைச்சர்களே கையெழுத் திட்டிருந்தாலும் கூட, பிறகு அந்தத் திட்டத்தை அவர்கள் தொடர்ந்து நிறைவேற்றவில்லை.

இப்போது மீண்டும் அந்த திட்டம் நிறைவேற்றப்பட்டே ஆக வேண்டுமென்ற முழக்கம் நாடெங்கும் ஒலித்ததின் காரணமாக, சோனியாகாந்தியின் வழி காட்டுதலோடு நடைபெறும் மத்திய அரசு இந்தத் திட்டத்தை நிறைவேற்றப் போவதாக அறிவித்து, அதன் தொடக்க விழாவினை பிரதமர் மன்மோகன் சிங்கும், சோனியா காந்தியும் வந்திருந்து நமது தோழமைக் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் 2005ஆம் ஆண்டு மதுரை மாநகரத்திலே நடத்தி மகிழ்ந்தோம்.

பின்னர் சேது சமுத்திரத் திட்டப் பணிகளை நிறைவேற்றத் தொடங்கி நடைபெற்று வரும் சூழலில்- திட்டம் விரைவில் நிறைவேறி விடும் என்றும், அப்படி நிறைவேறினால் அதன் பயன்களை பொருளாதார ரீதியாகவும், வாணிப ரீதியாகவும் பெறலாமென்றும் தென்னக மக்கள் பெரிதும் நம்பிக் கொண்டிருக்கும் வேளையில், இந்தத் திட்டம் நிறைவேறினால் அதன் காரணமாக திமுகழக அரசுக்கும், அதன் தோழமை கட்சிகளுக்கும், மத்திய அரசுக்கும் பெரும் புகழ் வந்து சேரும் என்பதை நினைத்து, இத்திட்டத்தைத் தடுத்து நிறுத்துகின்ற தந்திர முயற்சியாக அதற்கு எந்தப் பெயரைப் பயன்படுத்தலாம் என்பதை ஆலோசித்து தற்போது திடீரென மதரீதியான எதிர்ப்பைக் கிளப்பி, இந்தத் திட்டத்தையே கிடப்பிலே போட்டுவிடலாமா என்ற கெட்ட நோக்கம் கொண்டவர்கள், தங்களுக்குத் துணையாக வன்முறையாளர்களையும் இணைத்துக் கொண்டு செயல்பட முனைந்துள்ளார்கள்.

மத வெறியைத் தூண்டி விட்டு, சட்டம் ஒழுங்கு குழப்பம் விளைவித்து, வன்முறைச் செயல்களை நடைபெறச் செய்து அதற்கு யார் மீது பழி போடலாம் என்று திட்டம் தீட்டுகிறார்கள்.

எனவே நம்முடைய தோழமைக் கட்சியினரும், தொண்டர்களும் அவர்களுடைய எண்ணத்தைப் புரிந்து கொண்டு எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஏனென்றால் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிப் பொறுப்பிலே இருப்பது நம்முடைய அணியைச் சேர்ந்தவர்கள் என்பதால், எந்த விதத்திலாவது அவப்பெயரை உண்டாக்கி, அதற்குக் காரணம் ஆட்சியிலே இருப்போர் தான் என்று பழியை அரசின் மீது போடுவதற்கான முயற்சிகளிலே ஈடுபட்டுள்ளார்கள்.

அந்த முயற்சியின் ஒரு கட்டம் தான் என்னுடைய தலையை வெட்டுபவர்களுக்கும், நாக்கை அறுப்பவர்களுக்கும் எடைக்கு எடை தங்கம் தருவதாகப் பேசியதாகும். அதற்கு நாடு முழுவதும் ஏற்பட்ட எதிர்ப்பினைக் கண்டும், கண்டனங்களைக் கேட்டும் அந்தப் பேச்சைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவிக்கப்பட்ட போதிலும், அது என் ஒருவனைப் பற்றி மட்டும் பேசிய தகவல் என்ற ரீதியில் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று தோழமைக் கட்சிகளைச் சேர்ந்தவர்களை எல்லாம் கேட்டுக் கொள்கிறேன்.

அமைதிக்குப் பங்கம் வராமல் அனைவரும் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்தப் பிரச்சினையைப் பெரிதாக எடுத்துக் கொண்டோமானால், தமிழகத்திற்கு வந்து சேர வேண்டிய முக்கியமான திட்டமாம் சேது சமுத்திரத் திட்டத்திற்கு ஊனம் வந்து விடக்கூடும். எனவே அனைவரும் கவனமாக இருந்து, மத வெறியர்களின் சூழ்ச்சி திட்டம் என்ன என்பதைப் பற்றி பொது மக்களுக்கு விளக்கிடும் பணியிலே ஈடுபட்டாக வேண்டும்.

எந்தவொரு குழப்பம்- எந்த நிலையில் உருவாக்கப்பட்டாலும், அவற்றில் சமூக விரோதிகளும், தீவிரவாதத் தீயோரும் புகுந்து கொண்டு தாங்கள் விரும்புவதைச் செய்து விட்டு வீண் பழிக்கு எவரையும் ஆளாக்கித் தாங்கள் தப்பித்துக் கொள்ள வழி தேடுவார்கள். அந்த வன்முறையாளர்களின் வஞ்சக எண்ணம் ஈடேறவோ; நாடு காடாகவோ துளியும் காரண கர்த்தாக்களாக நமது தோழமைக் கட்சியினர் இருந்திடலாகாது.

அவர்களுக்கு இடமளித்தலும் கூடாது என்பதை நெஞ்சில் நிறுத்தி, நீதி, நேர்மை, நியாயம் இவை தழைத்தோங்கி நிம்மதி எங்கணும் நிலைத்திட துணை நிற்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X