அஜ்மீர் எதிரொலி: தமிழக கோவில்கள், தர்ஹா, மசூதிகளுக்கு தீவிர பாதுகாப்பு
மதுரை:
ஆஜ்மீர் தர்ஹாவில் நடந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து தமிழகத்தில் முக்கிய வழிபாட்டு தலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ரம்ஜான், தசரா, தீபாவளி பண்டிகை நாட்களில் வழிபாட்டுத் தலங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத்துறை அனைத்து மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்தது.
இந் நிலையில் நேற்று பலத்த பாதுகாப்பையும் மீறி ஆஜ்மீர் தர்ஹாவில் டிபன் பாக்ஸ் குண்டு வெடித்ததால் 3 பேர் கொல்லப்பட்டனர். 20க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து நாடு முழுவதும் முக்கிய வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு பல மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முக்கிய கோவில்கள், மசூதிகள், தர்ஹாக்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டப்படுவதையொட்டி மசூதிகளில் சிறப்பு தொழுகை நடக்க இருப்பதால் மசூதிகள் அருகே சந்தேகப்படும் வகையில் யார் நடமாடினாலும் உடனடியாக போலீசார் தகவல் தருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஜ்மீர் குண்டுவெடிப்பை தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில், பழனி தண்டாயுதபாணி முருகன் கோவில் மற்றும் ராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோவில் ஆகியவற்றில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பக்தர்களின் நடவடிக்கைகள் வீடியோ கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வெடிகுண்டு நிபுணர்கள் அடிக்கடி சோதனை செய்து வருகின்றனர். கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனையிடப்படுகின்றனர்.
மீனாட்சி அம்மன் கோவிலில், வெடிகுண்டை செயலிழக்க வைக்கும் நிபுணர்கள் முகாமிட்டு சோதனை நடத்தி வருகின்றனர். கோவிலுக்குள் செல்போன்களுடன் வரும் பக்தர்களை தடுக்க முடியாது என்பதால், செல்போன்களை செயலிழக்க வைக்கும் ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் செல்போன் மூலம் குண்டு வெடிப்புகள் நடத்துவதை தடுக்க முடியும்.
எப்போதும் இல்லாத அளவு மீனாட்சி அம்மன் கோவிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது அங்கு பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
குமரி மாவட்டத்தில்...:
குமரி மாவட்டத்தில் மசூதிகள், இந்து ஆலயங்களில் நேற்று இரவு முதல் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
நாகர்கோவில் ரயில் நிலையத்திற்கு வந்த அனைத்து ரயில்களிலும் போலீசார் சோதனை நடத்தினர்.
இடலாக்குடி, இளங்கடை, திட்டுவிளை, மாதவலாயம், பெருவிளை, வடசேரி, மேட்டுக்கடை, தக்கலை, அழகிய மண்டபம், மார்த்தாண்டம் உள்பட 32 இடங்களில் உள்ள மசூதிகள், தர்கா ஆலயங்களில் போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர்.
நேற்று இரவு முதல் தீவிர வாகன சோதனையும் நடந்து வருகிறது. சோதனை சாவடியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!