For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் விஷ வாயு கசிவு- மக்கள் மயக்கம், பீதி

By Staff
Google Oneindia Tamil News

Gas

சென்னை: வட சென்னையின் பல பகுதிகளில் நேற்றும், இன்றும் காற்றில் பரவிய விஷத்தன்மை கொண்ட வாயுவால் மக்கள் பெரும் பீதியடைந்தனர். இருப்பினும் இதனால் எந்த ஆபத்தும் இல்லை என்று மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

நேற்று பிற்பகல் 3 மணி வாக்கில், வட சென்னையில் உள்ள ராயபுரம், கொளத்தூர், கொடுங்கையூர், மகாகவி பாரதி நகர், மாதவரம், கொருக்குப்பேட்டை, கொரட்டூர், திரு.வி.க. நகர், கல் மண்டபம், அண்ணாநகர் உள்ளிட்ட சில பகுதிகளில் மர்ம வாயு பரவியது. இந்த வாயு மிகுந்த துர்நாற்றத்துடன் இருந்தது. இதனால் சிலருக்கு மயக்கம் ஏற்பட்டது. பலருக்கு வாந்தியும் ஏற்பட்டது.

வாகனங்களில் சென்றவர்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டு வண்டிகளை ஓட்ட முடியாமல் சாலையோரம் நிறுத்தி விட்டனர். இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் பறந்தது.

விரைந்து வந்த அவர்கள் வட சென்னையில் உள்ள ஏதாவது ஒரு வேதித் தொழிற்சாலையிலிருந்துதான் இந்த நச்சு வாயு பரவியிருக்கும் என்று சந்தேகித்து அப்பகுதியில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கும் சென்று சோதனை நடத்தினர்.

மாதவரம், பெரம்பூர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது கொளத்தூர் அருகே உள்ள ஒரு நிறுவனத்திலிருந்துதான் வாயு பரவியிருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்பட்டது. இதையடுத்து அந்த நிறுவனத்தில் வாயு கசிவு இருக்கிறதா என்று சோதனை செய்யப்பட்டு சரி செய்யப்பட்டது.

இரவு 7 மணிக்கு மேல் வாயுக் கசிவு ஏதும் இல்லை. இதனால் மக்கள் நிம்மதியடைந்தனர்.

இன்றும் ..

ஆனால் இன்று காலை 11-00 மணியளவில் வியாசர்பாடி, ஆர்.வி.நகர், கண்ணதாசன் நகர், தண்டையார்பேட்டை, புரசைவாக்கம், கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம், தி.நகர், அண்ணாநகர், வில்லிவாக்கம், கொளத்தூர் என சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் விஷவாயு பரவியது.

இதனால் குழந்தைகளுக்கு கண் எரிச்சல், மயக்கம், வாந்தி ஆகியவை ஏற்பட்டுள்ளது.

கொடுங்கையூர் சோலைவயலில் உள்ள ஒரு கல்லூரியில் இன்று காலையில் மர்ம வாயு தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் கல்லூரிக்கு வந்த மாணவ-மாணவிகள் வாந்தி எடுக்க துவங்கினர். இதனையடுத்து அந்தக் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது.

விஷ வாயுக் கசிவு தொடருவதால் மக்கள் பெரும் பீதியடைந்தனர். மணலியில் உள்ள சென்னை பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்திலிருந்துதான் வாயு கசிவு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

உடனடியாக இந்த விஷ வாயுக் கசிவை நிறுத்தி மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புறநகர்ப் பகுதிகளான அம்பத்தூர், முகப்பேர் உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த துர்நாற்ற வாயு இன்று நுகரப்பட்டது.

மேலும் சென்னை நகரின் மையப் பகுதிகளான தி.நகர், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களிலும் கூட இன்று மக்கள் இந்த துர்நாற்ற வாயுவை நுகர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பள்ளிகள் மூடல்:

வட சென்னைப் பகுதியில் நேற்று முதல் தொடர்ந்து துர்நாற்ற வாயு பரவி வருவதால் பீதியடைந்த மக்கள் தங்களது பிள்ளைகள் படித்து வரும் பள்ளிகளை முற்றுகையிட்டு குழந்தைகளைத் திருப்பி அனுப்புமாறு கோரினர். இதனால் சில பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.

பயப்படத் தேவையில்லை - மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்:

இதற்கிடையே, வட சென்னையில் பரவியுள்ளது நச்சுத்தன்மை கொண்ட வாயு அல்ல, ஆர்கானிக் வாயுதான், எனவே மக்கள் பீதியடைய வேண்டாம். வாயுக் கசிவு குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் சரி செய்யப்பட்டு விடும் என்று தமிழ்நாடு அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் விளக்கியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X