For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டசபைத் தேர்தலில் கூட்டணிக்கு அதிமுக தயார்: ஜெ.

By Staff
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: அடுத்த சட்டசபைத் தேர்தலுக்கான கூட்டணிக்கான கதவுகள் திறந்தே உள்ளன. பிற கட்சிகளுடன் கூட்டணி வைக்க அதிமுக தயாராகவே இருக்கிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார் ஜெயலலிதா. அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் எதிர் வரும் சட்டசபைத் தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது. கூட்டணிக்கும் தயாராகவே உள்ளது. அதற்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன. பிற கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ளவும் அதிமுக தயாராகவே இருக்கிறது.

பாஜகவுடன் நாங்கள் நெருங்கி வருவதாக பத்திரிகைகள்தான் கூறுகின்றன. குஜராத் முதல்வர் நரேந்திர மோடி எனது நெருங்கிய நண்பர். அதனால்தான் குஜராத் தேர்தலில் அவர் வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானதற்காக வாழ்த்தினேன். அதற்காக அதிமுகவும், பாஜகவும் கூட்டணி வைக்கும் என்று அர்த்தம் இல்லை.

மோடியின் நல்லாட்சிக்காகவும், அவரது ஆட்சி மக்களுக்கு சிறந்ததையே செய்ததாலும்தான் குஜராத்தில் மீண்டும் மோடிக்கும், அவரது கட்சிக்கும் மக்கள் வாக்களித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் தளமாகும் தமிழகம்:

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுக்கான ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருகிறது. பல்வேறு அரசியல் கட்சிகளும் புலிகளுக்கு ஆதரவாக வெளிப்படையாகவே செயல்படத் தொடங்கியுள்ளன. விடுதலைப் புலிகளின் தளமாக தமிழகம் மாறி வருகிறது. தமிழகத்திற்குள் விடுதலைப் புலிகளை வரவேற்க அதிமுகவைத் தவிர பெரும்பாலான கட்சிகள் சிவப்புக் கம்பளம் விரிக்கக் காத்துள்ளன.

இலங்கையில் ராணுவத்தின் தொடர் தாக்குதலால் விடுதலைப் புலிகள் பலமிழந்து விட்டனர். எனவே தமிழகத்திற்குள் ஊடுறுவி நிலை கொள்ள அவர்கள் முயலுகிறார்கள். இதற்கு இங்குள்ள அரசும் சாதகமாக உள்ளது. எனவே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பலவீனமடைந்துள்ளது. அரசின் நிலையோ படு சோகமாக உள்ளது.

என்னைத் தவிர அனைத்து தலைவர்களும் விடுதலைப் புலிகளை இரு கரம் கூப்பி வரவேற்கத் தயாராக உள்ளனர்.

இது தமிழகத்தின் எதிர்காலத்திற்கு மிகவும் அபாயகரமானதாகும். விடுதலைப் புலிகளுக்கு மாநில அரசே ஆதரவு கொடுத்தால், பிறகு கடவுளால் மட்டுமே தமிழகத்தை காப்பாற்ற முடியும்.

விடுதலைப் புலிகள் விவகாரத்தில் மத்திய அரசும், தமிழக அரசும் நடந்து கொள்ளும் விதம் முரண்பாடாக உள்ளது. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு ஒரு பக்கம் எச்சரிக்கை செய்கிறது. மறுபக்கம், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்கள் நடத்தும் பேரணிகளுக்கு அனுமதி அளிக்கிறது.

விடுதலைப் புலிகளுக்கு பல்வேறு பொருட்களும், ஆயுதங்களும் கடத்தப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் விடுதலைப் புலிகள் நடமாட்டமே இல்லை என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் கூறியிருக்கிறார். இதுதான் தமிழகத்தின் துயர நிலை. உயர் பதவியில் இருக்கும் இப்படிப்பட்ட சிலரே, சட்டம் ஒழுங்கை மனதில் கொள்ளாமல் இவ்வாறு கூறுகிறார்கள்.

நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகரிப்பு:

தமிழகத்தில் சமீப காலமாக ஆந்திர நக்சலைட்டுகளும், மாவோயிஸ்ட் நக்சலைட்டுளும் அதிகரித்து விட்டனர். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில், மக்கள் போர்க்குழு மற்றும் சிபிஐ மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை தடை செய்தது. ஆனால் இப்போது நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகரித்து விட்டது. இதற்கு திமுக அரசின் நிர்வாக குளறுபடியே காரணம்.

இலவச டிவி திட்டத்தை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அதற்கு செலவிடும் தொகையை வெள்ள நிவாரணப் பணிகளுக்கு வழங்கிட வேண்டும்.

இலவச டிவி திட்டத்திற்காக மத்திய அரசிடம் தமிழக அரசு ரூ. 5,000 கோடி நிதியைக் கோரியுள்ளது. ஆனால் மழை வெள்ள நிவாரணத்திற்கு ரூ. 1,500 கோடிதான் தேவை என அரசே கூறியுள்ளது. எனவே கலர் டிவி திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதியை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிட வேண்டும்.

பெனாசிர் கொலை - துயரம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டிருப்பது மிகவும் துயரமானது, கொடூரமானது. நமது எல்லைக்கு அப்பாலும் தீவிரவாதம் மிகத் தீவிரமாக இருப்பதையே இது காட்டுகிறது என்றார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X