For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பீர்பால் கதை சொல்லி கருணாநிதி மீது விஜய்காந்த் தாக்கு

By Staff
Google Oneindia Tamil News


சென்னை: இதுவரையில் 25 லட்சம் கலர் டிவி வழங்கியுள்ளதாக தம்பட்டம் அடித்துக் கொள்ளும் முதல்வர் எத்தனை லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு வேலை வழங்கியிருக்கிறார் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,

தேமுதிகவை துவக்கி 3 ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். கட்சி தொடங்கிய போது வாழ்த்து அனுப்பியதை காரணம் காட்டி முதல்வர் கருணாநிதி மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என அறிஞர் அண்ணா சொன்னதை குறிப்பிட்டுள்ளார்.

புதிய கட்சி என்றும், நடிகர் கட்சி என்றும் ஒரு சில கட்சிகள் என்றும் கழகத்தையும், புதிய கட்சித் தலைவர் என்று என்னையும் அவர் சொன்னதால் தான் தேமுதிகவை மதிக்கவில்லை என்று சொன்னேன். விதை ஊன்றிய போது வாழ்த்து அனுப்பியவர், அது முளைத்து, வளர்ந்து மணம் வீசும்போது கண்டுகொள்ளவில்லையே.

இலவச கலர் டிவி கொடுப்பதற்கு பதிலாக வீட்டுக்கு ஒருவருக்கு வேலை கொடுங்கள் என நான் பேசியதாக கருணாநிதி எழுதியுள்ளார். இலவச டிவி வழங்குவதை விட வேலை தருவது முக்கியம் என்றுதான் பேசினேன்.

இன்னும் சொல்லப் போனால் இலவச கலர் டிவிக்கும் இலவசமாக கேபிள் இணைப்பும் தர வேண்டும் என கேட்டுக் கொண்டேன். பசியால் அழும் குழந்தைக்கு பால் தருவது முக்கியமா, மிட்டாய் கொடுப்பது முக்கியமா.

வேலையற்றவர்களுக்கு திரைப்படங்களில் வேண்டுமானால் ஒரே நேரத்தில் வேலை தரலாம். ஆனால் ஆட்சியில் படிப்படியாகத்தான் செய்ய முடியும் என முதல்வர் பதில் அளித்துள்ளார். வேலை வாய்ப்பில் கலைஞர் முதல் படியைக்கூட எட்டவில்லை என்பதுதான் என்னுடைய கருத்தாகும். சுமார் 45 லட்சம் ஏழைக் குடும்பங்கள் உள்ளன.

கருணாநிதி அரசில் சுமார் 2 லட்சத்து 28 ஆயிரம் பேருக்கு வேலை தந்துள்ளதாக கணக்கு காட்டுகிறார். இது காலியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதே தவிர, புதிய வேலை வாய்ப்பில்லை. மேலும் புதிய தொழிற்சாலைகள் மூலம் புரிந்துணர்வு ஒப்பந்தம், போடப்பட்டு 1 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புக்கு வகை செய்யப்பட்டுள்ளதே தவிர இன்னும் உண்மையில் வழங்கப்படவில்லை.

இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழகத்தில் ஆண்டுதோறும் கூடுதலாக 6 லட்சம் பேர் வேலை தேடி வருகிறார்கள். வேலை பற்றாக்குறையை நினைக்கும் போது இது மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம்.

இதுவரையில் 25 லட்சம் கலர் டிவி வழங்கியுள்ளதாக தம்பட்டம் அடித்துக் கொள்ளும் முதல்வர் எத்தனை லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு வேலை வழங்கியிருக்கிறார் என்பதே என் கேள்வி.

நான் சொல்வது மொத்த வேலை வாய்ப்பை பற்றி கருணாநிதி, பதில் அளிப்பது அரசாங்கத்தில் வெற்றிடங்களை நிரப்பியது பற்றி எனக்கு பீர்பால் கதைதான் நினைவுக்கு வருகிறது.

இருட்டில் மோதிரத்தை தொலைத்துவிட்டு ஒருவன் தெருவிளக்கு அடியில் அதை தேடுகிறான்.
அவ்வழியே வந்த பீர்பால் விவரத்தை தெரிந்து கொண்டு அங்கே இருட்டில் தொலைத்துவிட்டு இங்கே வெளிச்சத்தில் தேடினால் எப்படி கிடைக்கும் என்று அவனைக் கேட்டார்.

அதற்கு அவன் அங்கே இருட்டாக இருக்கிறது. இங்கே தான் வெளிச்சமாக இருக்கிறது. அதனால் தான் இங்கே தேடுகிறேன் என்றானாம்.

அதுபோல நான் இருட்டை சுட்டிக் காட்டுகின்ற போது கருணாநிதி வெளிச்சத்தில் விவரங்களை தேடினால் நான் என்ன செய்வது.

சமச்சீர் கல்வி என்பது சென்னை மாநகரத்தில் எவ்வாறு உயர்தர தனியார் பள்ளியின் மூலம் பிள்ளைகளுக்கு படிப்பு கிடைக்கிறதோ, அதே வாய்ப்பு கிராமப்புற பிள்ளைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்பதுதான்.

10ம் வகுப்பு இறுதித் தேர்வில் அனைத்து பிரிவினரும் 500 மதிப்பெண்கள் தான் குறிப்பிடுவது மட்டுமல்ல. தமிழகத்தின் மூலை முடுக்குகளில் இருந்தாலும் எல்லா பிள்ளைகளுக்கும் கல்வியில் சமவாய்ப்பு கிடைக்குமா என்பதே என்னுடைய கேள்வி

பசிக் கொடுமை ராமாவரம் தோட்டத்துக்கு (எம்ஜிஆர்) தெரியும். ஆனால் கோபாலபுரத்துக்கு தெரியாது என்றும், கடந்த 30 ஆண்டுகளில் ஒரு தடவையாவது கருணாநிதி ஏழைகளுக்கு சோறு போட்டது உண்டா என்பதே எனது கேள்வி.

கருணாநிதி கோட்டையில் இருந்து மக்களின் வரிப்பணத்தில் ஏழைகளுக்கு நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியல் இடுகிறார்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும், நானும் எங்களது சொந்தப் பணத்தில் ஏழைகளுக்கு சோறு போட்டோம்.

கருணாநிதி சொந்தப் பணத்தில் இருந்து சோறு போட்டாரா என்றுதான் கேட்டேன். கோபாலபுரத்திற்கு பதிலாக கோட்டையிலிருந்து சோறு போட்டதை சொல்கிறார். கடைத் தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைத்த கதைதானே இது என்றார் விஜயகாந்த்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X