For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிப்ரவரி 2 முதல் பொதிகை எக்ஸ்பிரஸ் செங்கோட்டை வரை நீட்டிப்பு: வேலு

By Staff
Google Oneindia Tamil News


சென்னை: தற்போது சென்னையிலிருந்து தென்காசி வரை இயக்கப்பட்டுவரும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் பிப்ரவரி 2ம் தேதி முதல் செங்கோட்டை வரை இயக்கப்படும் என ரயில்வேத்துறை இணையமைச்சர் ஆர்.வேலு கூறியுள்ளார்.

சென்னை பேசின் பிரிட்ஜ் ரயில் பெட்டிகள் பராமரிப்பு பணிமனையை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,

பேசின் பிரிட்ஜ் பணிமனை 99 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு 24 ரயில் பெட்டிகளை 8 நிமிடத்தில் தானியங்கி முறையில் சுத்தம் செய்யும் இயந்திரம் ரூ.3 கோடியே 4 லட்சம் செலவில் வாங்கப்படவுள்ளது. ரயில் 5 முதல் 8 கி.மீ வேகத்தில் செல்லும்போதே மிக வேகமாக 2 பக்கமும் முழுமையாக சுத்தப்படுத்திவிடும்.

இந்தியாவிலேயே முதன் முறையாக இங்கு தான் இந்தக் கருவி அமைக்கப்படுகிறது. இதற்கு அதிக தண்ணீர் தேவைப்படும். இருப்பினும் பயன்படுத்திய தண்ணீரையே மறுசுழற்சி முறையில் மீண்டும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுள்ளது.

ஈரோடு ரயில் நிலையத்தை எந்த ரயில் கடந்து சென்றாலும், அதை முழுமையாக சுத்தப்படுத்துகிறோம். அங்கு தினமும் 15 ரயில்கள் சுத்தப்படுத்தப்படுகின்றன.

தூங்கும் வசதி ரயில் பெட்டிகளில் பக்கவாட்டில் கூடுதலாக படுக்கை வசதியை (சைடு மிடில் பெர்த்) அதிகரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதுவும் இனி புதிதாக செய்யப்படும் பெட்டிகளில் தான் இந்த வசதியை அமைப்பதாக இருந்தது. ஆனால் அந்த வசதியை தற்போதுள்ள பெட்டிகளிலேயே ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதன்படி ஒரு ஆண்டுக்குள் 355 மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டிகளிலும், 1,808 படுக்கை வசதி பெட்டிகளிலும் கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்தப்படும்.

இதை தவிர 1,673 பெட்டிகளில் சொகுசு இருக்கை வசதியும் செய்யப்படவுள்ளது. இதற்கு ரூ.56 கோடி செலவிடப்படும். இதன் மூலம் 1 பெட்டியில் கூடுதலாக 9 படுக்கை வசதிகள் உருவாகும். ஏற்கனவே உள்ள ரயில்களில் இந்த வசதியை செய்வதால் படுக்கைக்கு உயரம் குறைவாக உள்ளது. அதனால் அதற்கு கூடுதலாக இடம் ஒதுக்க கூறியிருக்கிறேன்.

மேலும் தற்போது செல்போன், லேப்டாப் சார்ஜ் செய்யும் வசதி 141 குளிர்சாதன பெட்டிகளிலும், 222 சாதாரண பெட்டிகளிலும் செய்துள்ளோம். அடுத்த 1 வருடத்திற்குள் அனைத்து பெட்டிகளிலும் இந்த வசதி ஏற்படுத்தப்படும். 171 ரயில் பெட்டிகளில் எமர்ஜென்சி விளக்கு பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ரயில் பட்ஜெட் மக்களுக்கு சாதகமாக இருக்கும். இன்னும் கூடுதலாக மக்களுக்கு பயனளிக்கும் விதத்தில் பட்ஜெட் அமையும். ரயில் பெட்டிகளில் இரண்டரை லட்சம் செலவில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் ஆன சமையலறைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தீ விபத்தை தடுப்பதுடன் மிகவும் சுத்தமாகவும் பராமரிக்க முடியும். முதலில் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் இது அறிமுகப்படுத்தப்படும்.

நெல்லை-திருச்செந்தூர் அகல ரயில் பாதை பணி முடிந்து சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டுவிட்டது. இனி பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு செய்து சான்றிதழ் கொடுக்க வேண்டும். இதையடுத்து விரைவில் அந்த பாதையில் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லிக்கு ஏழைகள் ரதம் சொகுசு ரயில் பிப்ரவரி 1ம் தேதி காலையில் தொடங்கப்பட உள்ளது. அன்றைய தினம் மாலை முதல் நாகர்கோவிலில் இருந்து கோவைக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரயிலும் இயக்கப்படும்.

தற்போது சென்னையில் இருந்து தென்காசி வரை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் பிப்ரவரி 2ம் தேதி முதல் செங்கோட்டை வரை நீட்டிக்கப்படும்.

பறக்கும் ரயில் நிலையமான சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்ட வணிக வளாகப் பகுதிகளை அப்பகுதியை சேர்ந்த சில சமூக விரோதிகள் ஆக்கிரமித்து அடைத்து வைத்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார் என்றார் வேலு.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X