For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கைதாகிறார் ராஜ் தாக்கரே?-கலவர பீதியில் மும்பை

By Staff
Google Oneindia Tamil News

Raj Thackeray
மும்பை: மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே மீது மும்பை போலீஸார் 2வது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். மேலும் அவரைக் கைது செய்யவும் போலீஸார் தீர்மானித்துள்ளனர். இதனால் மும்பையில் பரபரப்பு நிலவுகிறது.

வட இந்தியர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய ராஜ் தாக்கரேவால் மும்பையில் பெரும் வன்முறை வெடித்தது. வட இந்தியர்களுக்கு எதிராக ராஜ் தாக்கரேவின் கட்சியினர் வன்முறையில் குதித்தனர்.

இதையடுத்து ராஜ் தாக்கரே மீது நடவடிக்கை எடுக்க கோரி சமாஜ்வாடிக் கட்சி பொதுச் செயலாளர் அமர்சிங் சிவாஜி நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸார் ராஜ் தாக்கரே மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். ஆனால் அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில் மீண்டும், மீண்டும் வட இந்தியர்கள் குறித்தக் காட்டமாக பேசி வருகிறார் ராஜ் தாக்கரே. அதேபோல ராஜ் தாக்கரே கட்சியினர் தாக்கினால் திருப்பித் தாக்கி உ.பியிலிருந்து 20 ஆயிரம் பேரை தடிகளுடன் வரவழைப்போம் என மாநில சமாஜ்வாடி கட்சித் தலைவர் அபு ஆஸிம் அஸ்மியும் கூறியுள்ளார்.

இந்த நிலையில், விக்ரோலி காவல் நிலையத்தில் நேற்று ராஜ் தாக்கரே மீது 2வது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. ஆஸ்மி மீதும் அப்போது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்படவுள்ளனர்.

இதுகுறித்து மும்பை மாநகர இணை ஆணையர் கே.எல்.பிரசாத் கூறுகையில், அவர்களது பேச்சுக்கள் குற்றச் செயல்களாகும். ஜாமீனில் வெளி வர முடியாத பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்றோ, நாளையோ அல்லது விரைவாகவோ அவர்கள் கைது செய்யப்படுவார்கள்.

கைது நடவடிக்கை கட்டாயமானது. ஆனால் அது எப்போது என்பதை சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் முடிவு செய்வார்கள். ராஜ் தாக்கரே மீதும் ஆஸ்மி மீதும் வழக்குப் பதிவு செய்ய தேவையான காரணங்கள், ஆதாரங்கள் உள்ளன.

இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்கக் கூடாது, கூட்டங்கள் நடத்தக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதை அவர்கள் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் பிரசாத்.

ராஜ் தாக்கரே மீது போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது காவல்துறைக்கு பெரும் அவப்பெயரையும், கண்டனத்தையும் சம்பாதித்துக் கொடுத்துள்ளது. இதையடுத்தே ராஜ் தாக்கரேவைக் கைது செய்யும் முடிவுக்கு காவல்துறை வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜ் தாக்கரே மீது கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசுதல், பிறப்பு, குடியிருப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இரு பிரிவினருக்கிடையே மோதலை உருவாக்குதல், தேசிய ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே பிரிவிகளின் கீழ் ஆஸ்மி மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராஜ் தாக்கரே எந்த நேரத்திலும் கைது செய்யப்படக் கூடும் என்பதால் மும்பையில் கலவர பீதி நிலவுகிறது. பதட்டம் காணப்படுகிறது.

ராஜ்‌தாக்ரேவுக்கு அத்வானி கண்டனம்:

இந் நிலையில் ராஜ் தாக்ரேவுக்கு பாஜக தலைவர் அத்வானி கடும் கண்டணம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ராஜ் தாக்ரேயின் பேச்சு இந்திய ஒருமைப்பாட்டுக்கு பாதகம் ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசியல் சட்டமைப்புக்கு எதிரானது. இவ்வாறு பேசுவது அரசியல் நாகரிகம் அல்ல என்றார்.

வட இந்தியர்கள் மீது மீண்டும் தாக்குதல்:

இந் நிலையில் இன்றும் வட இந்தியர்கள் மீது மீண்டும் ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா கட்சியினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாசிக் நகரில் அப்பாவி பழ வியாபாரிகளை அவர்கள் தாக்கியுள்ளனர்.

நாசிக்கின் சாலிமார் செளக் பகுதியில் தள்ளு வண்டிகள், நடை பாதைகளில் பழ வியாபாரம் செய்யும் வட இந்தியர்கள் மீது ராஜ் தாக்கரே கட்சித் தொண்டர்கள் வெறித்தனமாக தாக்கி அடித்தனர்.

இதனால் நாசிக்கில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. மிருகங்கள் போல நடந்து கொண்ட ராஜ் தாக்கரே கட்சியினர், பழ வியாபாரிகளை சரமாரியாக அடித்தும், அவர்களின் கை வண்டிகளை உடைத்தும் சேதப்படுத்தினர்.

இந்த தாக்குதலில் சில வியாபாரிகள் காயமடைந்தனர். அவர்கள் அரசு மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

தாக்குதலில் சிக்கியவர்கள் உ.பி. மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். பிழைப்புக்காக நீண்ட காலமாக நாசிக்கில் தங்கியுள்ளவர்கள்.

நேற்று இரவு உ.பி., பீகார் மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் தாக்குதலுக்கு ஆளாகினர்.

இந்த சம்பவம் காரணமாக நாசிக் சாலையில் கடைகள் அடைக்கப்பட்டன. அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X