For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அட.. வந்தேவிட்டது அரசு கேபிள் டிவி-ஜூன் முதல் ஒளிபரப்பு துவக்கம்

By Staff
Google Oneindia Tamil News

Antenna
சென்னை: தமிழக அரசின் சார்பில் கேபிள் டிவி ஒளிபரப்பு வரும் ஜூன் மாதம் முதல் துவங்கவுள்ளது.

அழகிரி-தயாநிதி, சன் டிவி-திமுக இடையிலான மோதலையடுத்து உருவானது கலைஞர் டிவி. இதையொட்டி உருவாக்க முடிவு செய்யப்பட்டது தான் தமிழ்நாடு கேபிள் டிவி கார்பரேசன். இதன் மூலம் கிட்டத்தட்ட 80 சதவீத கேபிள் நெட்வோர்க்கை (கேபிள் டிவி ஆபரேட்டர்கள் நெட்வோர்க்) கையில் வைத்திருக்கும் சன் டிவியின் துணை நிறுவனமான சுமங்கலி கேபிள் விஷனை (எஸ்.சி.வி.) அடக்கி வைக்க திட்டமிடப்பட்டது.

இந் நிலையில் கேபிள் டிவி ஆபரேட்டர்களின் உதவியில்லாமல் நேரடியாக வீடுகளுக்கு டிஷ் ஆன்டெனா மூலம் தனது சேவையை வழங்கும் சன் டைரக்ட் என்ற டி.டி.எச் சேவையை துவக்கியது சன் டிவி. குறைந்த விலையில் டிஷ் தருவதாக அறிவித்தது.

இதற்கிடையே படு வேகமாக துவங்கப்பட்ட தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் தொடர்பான பணிகள் சுனங்கின. இதனால் சன் டிவிக்கும் அழகிரி தரப்புக்கும் இடையே ஏதோ அன்டர்ஸ்டான்டிங் ஏற்பட்டுவிட்டதாகக் கருதப்பட்டது.

இந் நிலையில் தான், எஸ்சிவியின் கீழ் வரும் கேபிள் டிவி ஆபரேட்டர்களை போலீஸார் கைது செய்ய ஆரம்பித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் புகார் கூறினார். அழகிரியின் தூண்டுதலால் இது நடப்பதாகவும், எஸ்.சி.விக்கு போட்டி நிறுவனமான ஹாத்வேக்கு மாறும்படி கேபிள் டிவி ஆபரேட்டர்களை போலீசார் மிரட்டுவதாகவும் கூறப்பட்டது.

இதெல்லாம் முதல்வர் கருணாநிதிக்குத் தெரியாமல் நடப்பதாகவும் கூறினார் தயாநிதி.

இந் நிலையில் தான் அரசு கேபிள் கார்பரேசன் தொடர்பான பணிகள் திடீரென முடுக்கிவிடப்பட்டன. இது தொடர்பான கேபிள் டிவி ஆபரேட்டர்கள்-அரசு அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் திடீரென நேற்று கூட்டப்பட்டது.

தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடந்த இக் கூட்டத்தில் அரசின் தரப்பில் அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் பிரிஜேஷ்வர் சிங், உள்துறைச் செயலாளர் மாலதி, செய்தி-மக்கள் தொடர்பு துறை இயக்குனர் மோகன்தாஸ், நிதித்துறை செயலாளர் ஞானதேசிகன், தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் சந்திரமவுலி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தரப்பில், தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொதுநலச் சங்கம் (டிசிஓஏ), தமிழ்நாடு கேபிள் டி.வி. உரிமையாளர்கள் சங்கம் (டிஏஎன்சியூஎஸ்) ஆகியவற்றின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் மூலமாக முதல் கட்டமாக கோவை, நெல்லை, திருவண்ணாமலை மற்றும் தஞ்சாவூரில் கட்டுப்பாட்டு அறைகள் (எம்.எஸ்.ஓ.) தொடங்கப்படும். இவற்றை அமைப்பதற்கான உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகளைப் பெறுவதற்கு வரும் மார்ச் 12ம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்படுகிறது.

வரும் ஜூன் மாதத்தில் கேபிள் டி.வி. சேவைகள் தொடங்கப்படும். குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு தரமான சேவையை வழங்க அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் உறுதி பூண்டுள்ளது. படிப்படியாக மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இந்தச் சேவைகளை விரிவுபடுத்தப்படும்.

2. சென்னையைப் பொறுத்தவரை எம்.எஸ்.ஓ. அமைக்க மத்திய அரசின் அனுமதி கோரி அரசு கேபிள் டி.வி. நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. சென்னையில் கன்டிசனல் ஆக்சஸ் சிஸ்டம்' நடைமுறையில் இருப்பதால், இந்த அனுமதியைப் பெறுவது அவசியமாகிறது.

மத்திய அரசின் அனுமதி கிடைத்த பின் சென்னையிலும் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவை தொடங்கப்படும். கேபிள் டி.வி. உரிமையாளர்கள் தங்களின் முழு ஒத்துழைப்பையும் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு வழங்க வேண்டும்.

3. கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு வரிச்சுமையை குறைப்பது குறித்து அரசு பரிசீலித்து தகுந்த முடிவுகள் எடுக்கும்.

4. கேபிள் டி.வி. ஆபரேட்டர்களின் கேபிள்களைத் துண்டிப்பது மற்றும் அவர்களை அச்சுறுத்துவது தொடர்பான புகார்கள் மீது சட்டப்படி பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த தீர்மானங்கள் குறித்து பேட்டியளித்த கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்க நிர்வாகிகள் காயல் இளவரசு, சகிலன் ஆகியோர் கூறுகையில்,

ஜூன் 2வது வாரத்தில் அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பைத் தொடங்கும் என்றனர்.

கோவை, நெல்லை, தஞ்சாவூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் தமிழக அரசு கேபிள் டி.வி. நிறுவனம், சென்ட்ரல் கண்ட்ரோல் ரூம்கள் என்ற கட்டுப்பாட்டு அறைகளைத் தொடங்குகிறது. இது அனைத்து சேனல்களையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும்.

இந்த கட்டுப்பாடு அறைகளில் இருந்து 100 முதல் 150 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள எம்.எஸ்.ஓக்களுக்கு கேபிள் மூலம் இணைப்பு வழங்கப்படும். அந்த எம்.எஸ்.ஓக்கள், தங்கள் பகுதியில் உள்ள கேபிள் ஆபரேட்டர்களுக்கு இணைப்பு வழங்குவார்கள்.

அந்த கேபிள் ஆபரேட்டர்கள், தங்கள் பகுதியில் உள்ள வீடுகளுக்கு இணைப்புகளை தருவார்கள்.

எனவே, கோவை, நெல்லை, தஞ்சை, திருவண்ணாமலை ஆகிய இடங்களில் அமைக்கப்படும் கட்டுப்பாடு அறைகள் மூலம் சென்னை தவிர தமிழகம் முழுவதும் உள்ள வீடுகளுக்கு அனைத்து சேனல்களையும் வழங்க முடியும்.

அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் தரும் சேனல்களை வீடுகளுக்கு கொண்டு வருவதற்கு தனியார் எம்.எஸ்.ஓக்களுக்கு தனி கேபிள் இணைப்புகள் தரப்படும். எஸ்.சி.வி, ஹாத்வே போன்ற எம்எஸ்ஓக்கல் மூலம் இணைப்புகள் தரப்படாதாம்.

சென்னையைப் பொறுத்தவரை அங்கு அமைக்கப்படும் கட்டுப்பாட்டு அறை மூலம், வாடிக்கையாளர்கள் செட்-ஆப் பாக்ஸ்' வழியாக அரசு கேபிள் இணைப்பை பெறலாம்.

மேலும் அரசு கேபிள் நிறுவனம் தனது கட்டணத்தை மிகக் குறைவாக நிர்ணயிக்க முடிவு செய்துள்ளது. இப்போது ரூ. 100 முதல் ரூ. 350 வரை கேபிள்வாலாக்களுக்கு அழுது வருகின்றனர் மக்கள்.

அரசு கேபிள் டிவி நிறுவனம் வந்துவிட்டால் கட்டணம் ரூ. 75க்குள் இருக்கும் என்கிறார்கள். மேலும் குறைந்தபட்சம் 75 சேனல்கள் கிடைக்குமாம்.

உங்க கேபிள்ல சன் டிவி ஒழுங்கா தெரியுமா?

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X