வைகோவை 'அலைய' விட்ட தலைவர்கள்!
சென்னை: போட்டி மதிமுக தலைவர் எல்.கணேசன், முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி ஆகியோரை விமானத்தில் பார்த்து விட்டதால் பெரும் தர்மசங்கடத்திற்குள்ளான மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அங்குமிங்கும் நடந்தபடி சமாளித்து தவிப்புக்குள்ளானார்.
நேற்று மாலை கோவை செல்லும் விமானத்தில் ஏறுவதற்காக வைகோ சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அங்கு எல்.கணேசன் தனது மனைவியுடன் டெல்லி செல்வதற்காக முக்கியப் பிரமுகர்கள் அமரும் அறையில் உட்கார்ந்திருந்தார்.
இதைப் பார்த்த வைகோ, சட்டென வேறு அறைக்குச் சென்றார். அப்போது மதுரை விமானத்திலிருந்து இறங்கி மு.க.அழகிரி உள்ளே நுழைந்தார். எப்படியும் சந்திக்க நேரிடும் என்பதால் டக்கென எழுந்த வைகோ, அருகில் இருந்த ஹிக்கின் பாதம்ஸ் புத்தக நிலையத்திற்குள் நுழைந்து 'வின்டோ ஷாப்பிங்' செய்தார்.
அப்போது திடீரென ஒரு குரல், ஹலோ வைகோ என்று. திடுக்கிட்டுத் திரும்பிய வைகோவிடம் வந்தவர் மத்திய அமைச்சர் மணிசங்கர அய்யர்.
அவருக்குப் பதில் ஹலோ போட்டார் வைகோ. வைகோவிடம் மரியாதையாக சில வார்த்தைகள் பேசி விட்டு கிளம்பினார் அய்யர்.
இப்படியாக பெரும் தர்மசங்கடத்திற்கு ஆளான வைகோ சரி, எல்லோரும் போயிருப்பார்கள் என்று எண்ணி மறுபடியும் முக்கியப் பிரமுகர்கள் அறைக்குச் சென்றார். ஆனால் எல்.ஜியார் அங்கும் இங்கும் நகராமல் அப்டியே உட்கார்ந்திருந்ததால் உள்ளே போகாமல் மறுபடியும் வெளியே நடை போடக் கிளம்பினார் வைகோ.
அரசியல்ல 'எம்புட்டு பிரச்சன'!