For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேரளாவின் குறுக்கு புத்தி-கோமதி நாயகம்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை: முல்லைப் பெரியாற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டாமல் தடுக்க தமிழகத்திலிருந்து மணல் கொண்டு செல்லாமல் தடுக்கப்பட வேண்டும். தமிழக மணல் இல்லாமல் கேரளாவால் அணை கட்டவே முடியாது என்று ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை சிறப்பு கண்காணிப்புப் பொறியாளர் கோமதி நாயகம் கூறியுள்ளார்.

மதுரை காந்தி அருங்காட்சியகத்தில், பெரியாறு அணை குறித்த சிறப்புப் புரிந்துணர்வு முகாம் நடத்தப்பட்டது.

இதில் கலந்து கொண்டு கோமதி நாயகம் பேசுகையில், பெரியாறு அணை தமிழகத்திற்கு சொந்தம்.

1977ல் பெரியாறு அணைக்கு போட்டியாக 70.50 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட இடுக்கி அணையை மின் உற்பத்திக்காக கேரளா கட்டியது. ஆனால், எதிர்பார்த்த அளவு தண்ணீர் சேரவில்லை. இதன் காரணமாக, பெரியாறு அணை உடைந்துவிடும் என 1979ல் செய்தி பரப்பபட்டது.

இதன்பிறகு அணையின் நீர்மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்தக்கூடாது என பல வழிகளில் கேரளா முட்டுக்கட்டை போட்டது.

2006ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி 142 அடி தண்ணீர் தேக்க தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தில் கேரளா வேண்டுமென்றே முட்டுக்கட்டை போடுவதாக கண்டித்தது.

இதையடுத்து கேரளா பாசன நீர் பாதுகாப்பு திருத்தச் சட்டத்தை கொண்டு வந்தது. இதன்படி பெரியாறு அணை கீழ் பகுதியில் 1300 அடியில் ரூ.126 கோடியில் புதிய அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

புதிய அணை கட்ட வேண்டுமானால் அதற்குத் தேவையான மணல் தமிழகத்திலிருந்துதான் கொண்டு செல்லப்பட வேண்டும். அதை தடுத்தாலே அவர்கள் அணை கட்டுவதை தடுத்து விட முடியும்.

பெரியாறு அணை பலவீனமாக உள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டால் உடைந்துவிடும் என கேரளா கூறுகிறது. 50 ஆண்டை கடந்த எந்த அணை உடைந்திருக்கிறது. நம்நாட்டில் உள்ள அணைகள் எல்லாம் ஆண்டுகள் பல கடந்தவை தான்.

152 அடி வரை தண்ணீர் இருக்கும்போது 5 ரிக்டர் அளவிற்கு நிலநடுக்கம் ஏற்பட்டாலும்கூட அணை உடையாது. கடந்த 113 ஆண்டுகளில் 30 முறை இங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு கீறல்கூட விழவில்லை.

தண்ணீர் கசிவதால் ஆபத்து என்று கேரளா கூறுகிறது. அணையில் நீர் கசிவது சகஜம்தான். எந்த அணையில் நீர் கசியவில்லை?.

1895ல் கட்டப்பட்ட பெரியாறு அணையில் நிமிடத்திற்கு 89 லிட்டர் தண்ணீர் கசிகிறது. கேரளா 1966ல் கட்டிய பம்பா அணையில் 96 லிட்டரும், 1972ல் கட்டிய குட்டியாடி அணையில் 249 லிட்டரும் நீர் கசிகிறது. அணைகளால் கேரளாவுக்கு ஆபத்து இல்லையா?
அணை நீர் கசிவை தடுத்தால் தான் ஆபத்து.

பெரியாறு படுகையில் கேரளா 17 அணைகளை கட்டியுள்ளது. தற்போது புதிய அணை கட்ட முயற்சிப்பதன் முக்கிய நோக்கம் மின் உற்பத்தி செய்வது தான். மொத்த மின் உற்பத்தியில் 20 சதவீதத்தை இங்கு உற்பத்தி செய்ய கேரளா திட்டமிட்டுள்ளது.

இதற்கு தமிழகம்-கேரளா இடையிலான 999 ஆண்டு ஒப்பந்தம் தடையாக இருக்கும் என்பதால், அதை செயலிழக்க செய்யும் வகையில் புதிய அணை கட்ட முயற்சிக்கிறது.

பெரியாறு அணையின் மேற்பகுதியில் நீர் குறையும். இதனால் தமிழக விவசாயிகளுக்கு வேலையே இல்லாமல் போய்விடும். அணை கட்டும் பணியை ஆண்டுக்கணக்கில் இழுத்தடிப்பார்கள்.

இதனால் தமிழகத்தில் விவசாய உற்பத்தி பாதிக்கப்படும் என்றார் கோமதி நாயகம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X