
திமுக தேர்தலில் மோதல்: அடி-உதை, அலுவலகம் சூறை
தஞ்சாவூர்: தஞ்சாவூரை அடுத்த அம்மாபேட்டையில் திமுக கிளை கழக தேர்தலில் ஏற்பட்ட மோதலில் திமுக நிர்வாகிகளுக்கு அடி உதை விழுந்தது. அலுவலகம் சூறையாடப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் திமுக ஒன்றிய, நகர, கிளை கழகத்திற்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் கட்சி நிர்வகிகள் பலர் போட்டியிடுகின்றனர்.
அம்மாபேட்டை ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார் தலைமையில் ஒரு அணியும், அம்மாபேட்டை திமுக ஒன்றிய செயலாளர் தியாக சுரேஷ் தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகின்றனர்.
மாவட்ட கவுன்சிலர் சிவக்குமாரின் ஆதரவாளர் மாணிக்கம் என்பவர் ஒரு ஹோட்டலில் நேற்று இரவு சாப்பிட்டுக் கொண்டு இருந்த போது திமுக ஒன்றிய செயலாளர் தியாக சுரேஷ் அவரது ஆதரவாளர்களுடன் வந்து மாணிக்கத்திடம் தகராறு செய்து அவரை அடித்து உதைத்தனர்.
இதில் மாணிக்கம் படு காயம் அடைந்தார். பின்பு தியாக சுரேஷ் ஆதரவாளர்கள் தப்பி ஒடிவிட்டனர்.
இந் நிலையில் மாணிக்கம் மீது தாக்குதல் சம்பவம் கேள்விப்பட்ட ஒன்றிய கவுன்சிலர் சிவக்குமார் ஆதரவாளர்கள் விஜயகுமார், சரவணன், கோகுல கிருஷ்ணன், சதீஷ், விஜயகோபால் ஆகியோருடன் இரவோடு இரவாக அம்மா பேட்டை திமுக ஒன்றிய அலுவலகத்திற்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்தனர்.
மேலும் அலுவலகத்தில் இருந்த மூன்று பேரை உருட்டு கட்டைகளால் தாக்கியுள்ளனர். இதில் பிரகாஷ், முரளி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள ஒரு மருத்துவ மனையில் சேர்த்தனர்.
அம்மாபேட்டை காவல் நிலையத்தில் இரு தரப்பினரும் புகார் கொடுத்துள்ளனர். போலீஸார் அவற்றை வாங்கி விசாரணை நடத்தி வருகின்றனர்.