For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போலீஸை தாக்கிய தீட்சிதர்கள்: 11 பேர் கைது!

By Staff
Google Oneindia Tamil News

Chidambaram Natarajar Temple
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் தமிழில் தேவாரம் பாடுவது தொடர்பான பிரச்சனையில் போலீசாரைத் தாக்கிய 11 தீட்சிதர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதே போல தேவாரம் பாட வந்த 34 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழுக்கு தடை போட்ட தீ்ட்சிதர்கள்:

சிதம்பரம் நடராஜர் கோவில் திருச்சிற்றம்பல மேடையில் இருந்தபடி பக்தர்கள் தேவராம், திருமறை ஆகியவற்றைப் பாடுவார்கள். ஆனால் இதற்கு கோவில் தீ்ட்சிதர்கள் தடை போட்டு விட்டனர். சமஸ்கிருதத்தில் தான் மந்திரம் ஓத வேண்டும், தமிழ் கூடாது என தடுத்து வந்தனர்.

அரசு அதிரடி:

இந் நிலையில் திருச்சிற்றம்பல மேடையில் இருந்தபடி தேவாரம், திருமறை ஆகியவற்றைப் பாடலாம் என தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை ஆணையர் பிச்சாண்டி உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து தீ்ட்சிதர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தமிழக அரசு முடிவு எடுத்து அறிவிக்கலாம் என தீர்ப்பளித்தது.

இதையடுத்து ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை உறுதி செய்து அரசு மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்மூலம் சிதம்பரம் நடராஜர் கோவில் சித்சபை திருச்சிற்றம்பல மேடையில் இருந்து தமிழில் தேவாரம், திருவாசகம் பாட தமிழக அரசு அனுமதியளித்தது.

தேவாரம் பாட வந்த பக்தர்கள்:

இதைத் தொடர்ந்து ஆறுமுகசாமி தலைமையில் சிவனடியார்கள் நேற்று தமிழில் தேவாரம் பாட கோவிலுக்குள் நுழைந்தனர்.

ஆனால், அவரை தீட்சிதர்கள் தடுத்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசாருக்கும், தீட்சிதர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

போலீஸை தாக்கிய தீட்சிதர்கள்:

போலீசாருக்கும் தீட்சிதருக்கும் இடையே தள்ளுமுள்ளு உருவானது. ஒரு கட்டத்தில் எஸ்பி பிரதீப்குமாரை சட்டையை பிடித்து இழுத்து தீட்சிதர்கள் கீழே தள்ளினர்.

மேலும் கூடுதல் எஸ்பி செந்தில்வேலன் மீது தண்ணீர் பாக்கெட்டுகளை வீசினர். ஆனாலும் சம்பிராதாயப்படி சட்டையை கழற்றிவிட்டு சிவனடியார் ஆறுமுகசாமியை கோவிலுக்கள் அழைத்து சென்றனர் போலீசார்.

சுவாமியை மறைத்து நின்று...:

அங்கு ஆறுமுகசாமி தேவாரம் பாட தொடங்கினார். அப்போது நடராஜர் சிலையை மறைத்தபடி 40க்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் நின்றனர். இதனால் ஆறுமுகசாமியால் நடராஜரை பார்த்து தேவாரம் பாட முடியவில்லை.

இதையடுத்து திரும்பிச் சென்ற ஆறுமுகசாமி மாலை மீண்டும் தெற்கு வீதிக்கு வந்தார். ஆனால், அவர்களை போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை.

கல்வீச்சு, 34 பக்தர்கள் கைது:

இதைத் தொடர்ந்து போலீசாருக்கும் அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென போலீசார் மீது கல் வீசப்பட்டது. இதில் ஒரு போலீஸ்காரர் தலையில் காயம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

இந் நிலையில் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல், அசம்பாவிதம் ஏற்படுத்துதல், போலீஸ் மீது கல்வீசியது தொடர்பாக சிவனடியார் ஆறுமுகசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 38 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் 34 பேர் கைது செய்யப்பட்டனர். ஆறுமுகசாமி கைது செய்யப்படவில்லை.

தீட்சிதர்கள் மீது கொலை மிரட்டல் வழக்கு:

அதேபோல் அரசு உத்தரவை அமல்படுத்த முயன்ற போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தல், சிவனடியார் ஆறுமுகசாமியை பாடவிடாமல் தடுத்தது தொடர்பாக 12 தீட்சிதர்கள் மீது போலீசார் கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்தனர்.

அவர்களில் 8 பேர் நள்ளிரவில் 11 மணியளவில் கைது செய்யப்பட்டனர். 3 பேர் கோவிலுக்குள் பதுங்கி இருந்தனர். அவர்களை சாதாரண உடையில் சென்ற போலீசார் கைது செய்தனர். ஒருவர் தலைமறைவாகி விட்டார்.

இந்த விவகாரத்தால் சிதம்பரத்தில் பதற்றம் நிலவுகிறது. நடராஜர் கோவிலை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஆறுமுகசாமி கோரிக்கை:

இந் நிலையில் இன்று காலை சிவனடியார் ஆறுமுகசாமி சிதம்பரம் மாஜிஸ்திரேட் வசந்தி முன் ஆஜரானார். இந்த வழக்கில் என்னையும் கைது செய்ய வேண்டும் என்று கோரினார்.

இதற்கிடையில் தேவாரம் பாட வந்து கைது செய்யப்பட்ட 34 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்கள் போலீசாருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X