For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பண்ணையில் அரசு நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை-விஜய்காந்த்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை&மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே அரசு நிலம் எதையும் ஆக்கிரமிப்பு செய்யவில்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அப் பகுதியின் தாசில்தாருக்கு பதில் அனுப்பியுள்ளார்.

மதுராந்தகம் தாலுகாவில் உள்ள விளாகம், அருங்குணம், முள்ளி, முருக்கஞ்சேரி, தேவாதூர் ஆகிய கிராமங்களில், விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதாவுக்கு 403 ஏக்கர் நிலம் உள்ளது.

கேப்டன் பண்ணை என்ற பெயரில் உள்ள இந்த நிலத்தில் அரசு, கோவில் நிலங்களையும் சேர்த்து லபக்கி மின் வேலி போட்டுவிட்டார் விஜய்காந்த் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து தாசில்தார் நடராஜன் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள், பொதுப்பணித் துறையினர் அந்த நிலத்தை பார்வையிட்டனர்.

அதில், அரசுக்கு சொந்தமான 21 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.

இதையடுத்து மார்ச் 5ம் தேதிக்குள் அரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என கடந்த மாதம் 19ம் தேதி, விஜயகாந்துக்கு நோட்டீஸ் அனுப்பினார் தாசில்தார். அதே போல 10ம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளும் நோட்டீஸ் அனுப்பினர்.

அதே போல விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் வைத்துள்ள கூடுதல் நிலத்தை, நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ், ஏன் கைப்பற்றக்கூடாது என விளக்கம் கேட்டு, விழுப்புரம் நில சீர்திருத்த ஆணையரும் நோட்டீஸ் அனுப்பினார்.

மேலும் பண்ணை என்று ரிஜிஸ்டர் செய்துவிட்டு அங்கு விவசாயப் பணிகளே நடக்காததும் தெரியவந்ததால் அது குறித்தும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந் நிலையில் விஜயகாந்த்தின் வழக்கறிஞர் மதுராந்தகம் தாசில்தாருக்கு அனுப்பியுள்ள பதிலில், அந்த நிலத்தில் ஆக்கிரமிப்பு ஏதும் இல்லை என்று கூறியுள்ளார்.

இதையடுத்து உயர் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பின், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருணாநிதி நோட்டீஸ்-விஜய்காந்த் பல்டி:

இதற்கிடையே முதல்வர் கருணாநிதி அனுப்பிய நோட்டீசுக்கு பதிலளித்துள்ள விஜய்காந்த், முதல்வரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசி்ன் தலைமை செயலகம் மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

குமுதம் வார இதழில் முதல்வர் கருணாநிதியைப் பற்றி தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவதூறாக பேட்டி அளித்தது பற்றி, முதல்வர் சார்பில் வழக்கறிஞர் வில்சன், விஜயகாந்துக்கு கடந்த மாதம் 22ம் தேதி வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.

இதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வழக்கறிஞர் மார்ச் 1ம் தேதி பதில் அளித்துள்ளார்.

அந்த பதிலில் கூறியிருப்பதாவது:

வார இதழின் நிருபர் தானாகவே எனது கட்சிக்காரரின் (விஜய்காந்த்) அலுவலகத்திற்கு வந்து, அவரைத் தூண்டுவதைப்போல- உங்கள் கட்சிக்காரரால் பல நேரங்களில் என் கட்சிக்காரர் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளையெல்லாம் தொகுத்து பல கேள்விகளைக் கேட்டார்.

எந்த விதமான உள் நோக்கமும் இல்லாமல், எனது கட்சிக்காரர் கேட்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் பதிலளித்தார். எனது கட்சிக்காரரின் பதில்கள், அவர் கூறியவாறு அப்படியே வெளியிடப்படவில்லை.

டேப்பில் அந்த பேட்டி பதிவும் செய்யப்பட்டது. எனது கட்சிக்காரர் சில பகுதிகளை அவரது டேப்பில் அழித்து விடும்படி கூறிய பின்னரும், அந்த பகுதிகள் என்ன காரணத்தாலோ அந்த இதழிலே வெளியிடப்பட்டுள்ளது.

உங்கள் நோட்டீசிலே குறிப்பிட்டு இருப்பதைப் போல முதல்வர் கருணாநிதியின் பெயருக்கு களங்கம் ஏற்படும்படியாக ஏதுவும் கூறவில்லை என்பதை என் கட்சிக்காரர் (விஜய்காந்த்) தெரிவித்துக் கொள்கிறார்.

எனது கட்சிக்காரர், நிருபருக்கு பேட்டி அளித்த போது, உங்கள் கட்சிக்காரரை எப்போதும் தான் மதிக்கக்கூடியவர் என்றும், அவரை கலைஞர்' என்று தான் அழைப்பது வழக்கம் என்றும், கருணாநிதி' என்று கூட உச்சரிக்க மாட்டார் என்றும் கூறியதையெல்லாம் கூட வேண்டுமென்றே அந்த இதழ் வெளியிடாமல் தவிர்த்து விட்டது என்றும் விஜய்காந்த் தெரிவிக்கிறார்.

இவ்வாறு விஜய்காந்தின் வழக்கறிஞர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X