India
  • search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கூட்டணி: 'யோசிச்சு சொல்லுங்க'...குழம்ப விட்ட விஜய்காந்த்!

By Staff
Google Oneindia Tamil News
Vijaykanth
திருச்சி: கூட்டணி வேண்டாம் என்று குரல் தந்த தெண்டர்களிடம் நன்றாக யோசித்து பதில் சொல்லுமாறு கூறி அவர்களை குழம்ப விட்டார் தேமுதிக தலைவர் விஜய்காந்த்.

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் ராஜ்யசபா எம்.பி தேர்தலுக்காக என்னென்னவோ அக்கப்போர் செய்கின்றன.அவர்களுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறினார்.

உலக மகளிர் தினத்தையொட்டி திருச்சியில் தேமுதிகவின் மிக பிரமாண்டமான மகளிர் பேரணி நடைபெற்றது. திருச்சி சாஸ்திரி ரோடு சந்திப்பு- கே.டி. தியேட்டர் அருகே இருந்து கிளம்பிய இந்தப் பேரணியை விஜயகாந்தின் மனைவி பிரேமலதா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

சாஸ்திரி ரோடு மேம்பாலம் அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையிலிருந்து பேரணியை விஜயகாந்த், அவரது மச்சான் சுதீஷ் உள்ளிட்டவர்கள் பார்வையிட்டனர்.

லட்சக்கணக்கான பெண்கள்:

இந்தப் பேரணியில் லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர்.

பேரணியின் நிறைவில் தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை திடலில் பொதுக் கூட்டம் நடந்தது. அதில் விஜய்காந்த் பேசுகையில்,

தேமுதிக தொடங்கப்பட்டு 3 வருடம் கூட ஆகவில்லை. ஆனால் திருச்சியில் திரண்டு வந்திருக்கும் தாய்மார்கள் கூட்டத்தை பார்த்தால் எனக்கு சந்தோசம் பெருகுகிறது. 3 மணியில் இருந்து, 8.20 மணி வரை பேரணி நடந்துள்ளது.

மேடையில் இருந்து பேரணியில் வந்த தாய்க்குலங்களை பார்த்த போது, அவர்கள் முகத்தில் தெரிந்த புன்னகை ஒன்றே போதும், இந்த பாசம் ஒன்றே போதும், வேறு எனக்கு எதுவும் தேவையில்லை. ஊழல் செய்து காசு கொடுத்து கூட்டிட்டு வரும் கட்சிகளுக்கு கூட இவ்வளவு கூட்டம் வராது. நீங்கள், என் மீது நம்பிக்கை வைத்து உங்கள் காசை செலவு செய்து வந்துள்ளீர்கள்.

உண்மையில் சொல்கிறேன். நமது மாநாட்டை விட இந்த பேரணி பொதுக் கூட்டம்தான் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இந்த கூட்டத்தை திருச்சிக்கு வெளியே போட்டிருந்தால் இன்னும் கூட்டம் வந்திருக்கும்.

கரண்ட் கட்..:

தேமுதிகவுக்கு மக்கள் ஆதரவு பெருவதை கண்டு சில பழைய கட்சி தலைவருக்கு பிடிக்கவில்லை. பேரணி வரும் வழியில் தெரு விளக்குகளை ஆப்' செய்து விட்டார்கள். என்னை விஜயகாந்த் கெட்டவன், குடிகாரன் என்று தினமும் கேவலப்படுத்துகிறார்கள். நான் அதற்கு எல்லாம் கவலைப்படவில்லை.

கல்யாண மண்டபத்தை இடித்தார்கள். வருமான வரிச் சோதனை என பயமுறுத்தினார்கள். இப்போது நில உச்சவரம்பு சட்டம் என மிரட்டுகிறார்கள். சொத்து என்னய்யா சொத்து. கடைசியில் போகும்போது என்ன கொண்டு போக போகிறோம். எனக்கு சிறிய நிலம், எனது மனைவிக்கு சிறிய நிலம், மகன்களுக்கு கொஞ்சம் நிலம் போதும். சொத்து போனால் போகிறது. இங்கு திரண்டு நிற்கிற தாய்மார்களின் வீடுகளுக்கு தினமும் சென்றால், வாழ்நாள் முழுவதும் எனக்கு சோறு போட மாட்டீர்களா.

நான் உழைக்கும் வர்க்கம். என்னால் வெறும் தரையில் கைகளை தலைக்கு அணை கொடுத்தபடி தூங்க முடியும்.

தளர மாட்டேன்:

ஒரு கட்சி அல்ல 2 கட்சி அல்ல. 14 கட்சிகள் என்னை தினமும் மாறி மாறி குத்து குத்தென குத்துகிறார்கள். மிரட்டுகிறார்கள். நான் எதற்கும் அடிபணிய மாட்டேன். சும்மா கூறவில்லை. தினமும் எனக்கு மிரட்டல் வருகிறது.

உள்ளாட்சி இடைத்தேர்தலில் தேமுதிக தோல்வி அடைந்து இறங்கி போய்விட்டது என்று விமர்சனம் செய்தார்கள். அவர்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன் தனித்தனியாக தேர்தலில் வந்து நின்று பாருங்கள்.

உங்களால் அப்படி நிற்க தைரியம் உண்டா? நான் மனம் தளரப் போவதில்லை. அசரவும் மாட்டேன்.

தேமுதிக திருச்சியில் மகளிர் தின பேரணி நடத்துகிறது என்றவுடன் ''தரணி எங்கும் மகளிர் தினம், தமிழ்நாட்டில், மகளிர் தினம், தினம்... தினம்''! என்று அறிவிப்பு வெளியிடுகிறார்கள். ஆனால் மகளிர் தினத்தன்று தான் பால் விலையை உயர்த்துகிறார்கள்.

சவலைப் பிள்ளைகளுக்கு தாய்மார்கள் பால் கொடுக்க முடியவில்ல. தங்கம் விலை எங்கேயோ போய் விட்டது.

பெண்களின் நிலையை உயர்த்த ஸ்ரீசக்தி மகளிர் சுயஉதவி குழுக்களை தொடங்க சொல்லி இருக்கிறேன். இதற்காக எனது சொந்த பணத்தில் இருந்து ரூ.50 லட்சத்தை வங்கியில் டெபாசிட் செய்ய இருக்கிறேன்.

கூட்டணி வேண்டுமா வேண்டாமா:

பணம் என்னங்க பணம். என்னால் இப்போதும் 10 படத்தில், நடித்து சம்பாதிக்க முடியும். ஆனால் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.நான் மக்களை நம்புகிறேன். மக்கள் எப்போது ஆட்சிக்கு வரவேண்டும் என்று நினைக்கிறீர்களோ அப்போது ஆட்சிக்கு வருவோம்.

தேர்தலில் கூட்டணி வைப்பீர்களா என்று என்னை பார்த்து திரும்ப திரும்ப கேட்கிறார்கள். நான் ஏற்கனவே சொன்ன அதே பதிலை தான் இப்போதும் சொல்கிறேன். நான் தெய்வத்தையும் மக்களையும் நம்பிதான் கட்சி ஆரம்பித்தேன். எனவே மக்களுடன் தான் எனது கூட்டணி என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

கூட்டணி வைத்தவர்கள் என்ன சாதித்தார்கள். நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைக்க வேண்டுமா?. நான் உங்களிடம் கேட்கிறேன். நான் கூட்டணி வைக்க வேண்டுமா? (அப்போது கூட்டத்தினர் வேண்டாம், வேண்டாம் என குரல் கொடுத்தனர்).

நல்லா யோசி்த்து சொல்லுங்க...:

நன்றாக யோசித்து சொல்லுங்கள். ஏனென்றால் வரப்போவது நாடாளுமன்றத் தேர்தல்.. நாடாளுமன்றம் என்றால் எம்.பி தேர்தல்..

(விஜயகாந்த் இப்படி மீண்டும் கேட்டதும் கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டது. ஒரு பகுதியினர் கூட்டணி வேண்டும் என்றும் இன்னொரு பகுதியினர் வேண்டாம் என்றும் குரல் தந்தனர், இன்னொரு பகுதியினர் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்தனர்)

அமைதியாக இருக்கீங்களே:

(முன்பகுதி கூட்டத்தினரை பார்த்து) நீங்கள் கூட்டணி வேண்டாம் என்கிறீர்கள். ஆனால் பின்னால் இருப்பவர்கள் அமைதியாக இருக்கிறார்களே..

எப்படியோ, எனக்கு இந்த மக்கள் ஆதரவு போதும். தைரியம் இருந்தால் அவர்கள் தனித்து நின்று என்னை எதிர்க்க தயாரா?

தேமுதிக ஒருநாள் ஆட்சியைப் பிடிக்கும். என்னால் முடியும். உடனே விஜயகாந்த் ஆணவமாக பேசுகிறான் என்கிறார்கள். இது ஆணவம் இல்லை. தன்னம்பிக்கை.

ராஜ்யசபா எம்.பி தேர்தலுக்காக என்னென்னவோ அக்கப்போர் செய்கிறார்கள். தோல்வி பயம் வந்துவிட்டது அதனால் தான் தினமும் ஒரு அறிக்கை மாறி மாறி விடுகிறார்கள்.

ஆனால் எனக்கு எந்த பயமும் இல்லை. நீங்கள் ஓட்டுப்போடும்போது நான் ஜெயித்து ஆட்சியை பிடிப்பேன். முடியாது என்ற வார்த்தை முட்டாளுக்கு சொந்தம். முடியும் என்ற வார்த்தை புத்திசாலிக்கு சொந்தம். எனது அகராதியில் முடியாது என்ற வார்த்தையே கிடையாது.

ஒரு லட்சியத்தை அடையவேண்டும் என்றால் அடைந்தே தீருவேன். மக்கள் மனதில் நிச்சயம் ஒரு மாற்றம் வரும். அப்போது தேமுதிக ஆட்சிக்கு வரும்.

மேடை அருகே கடுகடுத்த போலீஸ்:

போலீசார் மீது நான் எவ்வளவோ மதிப்பு வைத் திருந்தேன். ஆனால் காவல் துறை இன்று காவலாளி துறை ஆகிவிட்டது. பெண்கள் போலீஸ் நிலையத்துக்கு செல்ல முடியவில்லை. புகார் கொடுக்க சென்றால், ரூ.50 கொடு என்கிறார்கள். பிறகு 2 கட்டு பீடி வாங்கிவா என்கிறார்கள். (அப்போது மேடை அருகே நின்றிருந்த ஒரு போலீஸ்காரர் விஜய காந்ததை பார்த்து ஏதோ முணுமுணுக்க பரபரப்பு ஏற்பட்டது)

தேமுதிகவினர் பேனர் வைக்ககூடாது என்கிறார்கள். இதுவா போலீஸ் வேலை. நாட்டில் கொலை, கற்பழிப்பு நடப்பதை தடுக்காமல் பேனர் வைக்காதே என்கிறார்கள். தேமுதிகவினர் மீது கொலை முயற்சி வழக்கு போடுகிறார்கள்.

முதல்வர் கருணாநிதியின் வயதுக்கு நான் மரியாதை கொடுப்பேன். அதற்காக அவர் சொல்வதை எல்லாம் கைகட்டி கேட்டுக்கொண்டு இருக்க முடியாது. கூட்டணி கட்சிகள் வேண்டும் என்றால் உங்களை பாராட்டலாம். பெரியவர் செய்தால் பெருமாள் செய்தது மாதிரி என்று என்னால் சும்மா இருக்க முடியாது.

மக்கள் பிரச்சினை பற்றி கேள்வி கேட்டுக்கொண்டே தான் இருப்பேன். அதிமுகவை விமர்சிக்க மாட்டீர்களா என்று கேட்கிறார்கள். ஆட்சியில் இருந்தால் அவர்களிடமும் மக்களுக்காக கேள்விகள் கேட்கத்தான் செய்வேன். மக்கள் ஆதரவு இருக்கும்போது என்னை யாரும் அசைக்க முடியாது என்றார் விஜய்காந்த்.

கூட்டணி-விஜய்காந்த் நிலையில் மாற்றம்:

வழக்கமாக எல்லா கூட்டங்களிலும் கூட்டணி வேண்டுமா என்று விஜய்காந்த் கேட்பார், வேண்டாம் என கூட்டத்தில் இருந்து பதில் வரும். உடனே யாருடனும் கூட்டணி இல்லை என்பார் விஜய்காந்த்.

ஆனால், இம் முறை நன்றாக யோசித்து சொல்லுங்கள்.. கூட்டணி வேண்டாமா என்று கேட்டு தொண்டர்களை குழம்ப விட்டார் விஜய்காந்த்.

இதன்மூலம் அவர் கூட்டணிக்குத் தயாராகி வருவது மீண்டும் தெளிவாகியுள்ளது. காங்கிரஸ் தரப்பை அவர் வளைக்க முயன்று வருவது தெரிந்தது தான் என்றாலும் இதுவரை காங்கிரஸ் தலைமை திமுக கூட்டணியை தொடர்வதிலேயே குறியாக உள்ளது.

பொருளாதார நெருக்கடி:

ஆனாலும் கூட்டணி தான் ஒரே வழி என்ற நிலைக்கு விஜயகாந்த் போய்க் கொண்டிருப்பதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது பொருளாதார நெருக்கடி தான் என்கின்றனர்.

கட்சியை ஆரம்பித்ததில் இருந்து பல கோடிகளை இழந்துவிட்டார் விஜய்காந்த். ஆனாலும் தேமுதிக இன்னும் மூன்றாம் இடத்திலேயே இருப்பதால் தனித்து போட்டியிட்டால் திமுக, அதிமுகவை மிரட்டத்தான் முடியுமே தவிர வெல்வது கஷ்டம் என்பதை அவர் தெளிவாகவே உணர்ந்துவிட்டார்.

சட்டமன்றத் தேர்தலில் 8 சதவீத வாக்குகளை பெற்ற விஜய்காந்தால் அதை உள்ளாட்சித் தேர்தலில் அதிகரிக்க முடியாமல் போய்விட்டது. மேலும் உள்ளாட்சி இடைத் தேர்தலில் கட்சிக்கு பெரும் சறுக்கலும் ஏற்பட்டுவிட்டது. போட்டியிட்ட பெரும்பாலானவர்களுக்கு டெபாசிட் பறிபோய்விட்டது. இதற்கு முக்கிய காரணம் ஓசி டிவி செய்யும் மாயாஜாலம் என்கிறார்கள் தேமுதிக.

ஒரு பக்கம் பொருளாதார நெருக்கடி, மறுபுறம் எதிர்பார்த்த அளவுக்கு கட்சியின் வளர்ச்சி வேகம் பிடிக்காதது ஆகிய காரணங்களால் கூட்டணிக்கு விஜய்காந்த் தயாராகி வருகிறார்.

தனித்து போட்டியிட்டு தேமுதிக மீண்டும் தோற்றால் மதிமுகவின் நிலைமை வந்துவிடும் என்று விஜய்காந்த் கருதுவதாக நிர்வாகிகள் கூறுகின்றனர்.

இதனால் தான் கூட்டணி வேண்டாம் என்று குரல் தந்த கூட்டத்தினரை, கூட்டணி வேண்டும் என்று மாற்றி குரல் தர வைத்தார் என்கிறார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X