வரலாறு படைத்த தேமுதிக-விஜய்காந்த் பெருமிதம்
சென்னை: உலக மகளிர் தினத்தையொட்டி திருச்சியில் தேமுதிக நடத்திய மகளிர் அணிப் பேரணி-பொதுக் கூட்டம் புதிய வரலாறு படைத்துவிட்டதாக அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உலக மகளிர் தினத்தையொட்டி திருச்சியில் கடந்த 9ம் தேதி தேமுதிக நடத்திய மகளிர் அணி பொதுக் கூட்டம் ஒரு மாநாடாகவே காட்சி அளித்தது. தமிழ்நாட்டில் இது வரையில் எந்த அரசியல் கட்சியும் மகளிரை மட்டும் வைத்து இவ்வளவு சிறப்பாக மாநாடு போன்று நடத்திய வரலாறு கிடையாது.
பெண்கள் தங்களுடைய வீட்டு வேலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, எவ்வளவோ சிரமங்களுக்கிடையில் என்னுடைய அழைப்பை ஏற்று மாநாட்டில் பல லட்சக்கணக்கில் கலந்து கொண்டது என் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்ச்சி.
காலில் செருப்புக்கூட இல்லாமல் பேரணியில் தாய்மார்கள் நமது இயக்க கொடிகளையும், கழக கொள்கை விளக்க அட்டைகளையும் ஏந்தி நடந்து வந்தது இந்த நாட்டிற்கு தேமுதிக மூலம் விடிவு காலம் பிறந்து விட்டது என்பதையே காட்டுகிறது.
அந்த பேரணியில் என்னை அவர்கள் நேரில் கண்டு உணர்ச்சி பூர்வமாக முழுக்கமிட்டது, எத்தனை கோடி ரூபாய் செலவழித்தாலும், எந்த தலைவருக்கும் கிடைக்காத பாக்கியம் ஆகும்.
பேரணி முடிந்து மாநாடு போல் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் கடைசி வரை கலந்து கொண்டு கழக கருத்துக்களை கேட்டு அனைவரும் பயன்பெற்ற காட்சி எண்ணி எண்ணி பாராட்டதக்கதாகும்.
மாற்றார்களும் வியக்கும் வண்ணம், குறிப்பாக இந்தியாவே ஏறெடுத்து பார்க்கும் விதத்தில் மாபெரும் பேரணியும், பொதுக்கூட்டமும் நடந்தது மட்டுமல்ல, காவல் துறையின் உதவியின்றியே தாய் மார்களும், இளைஞர்களும் பல லட்சக்கணக்கில் கூடி எந்தவித அசம்பாதவிமும் இன்றி திரும்பியது, கழகத்தவர்களின் கண்ணியத்திற்கும், கட்டுப்பாட்டுக்கும் ஒரு இலக்கணம்.
தேமுதிக தொடங்கி 3 ஆண்டுகளிலேயே ஒரு உலக சாதனை நடத்த முடிந்தது என்றால் அது பல லட்சக்கணக்கான தொண்டர்களும், பல்லாயிரக்கணக்கான கழக நிர்வாகிகளும், கைம்மாறு கருதாமல் கலந்து கொண்டு சிறப்பித்த தாய்மார்களும், அன்பு சகோதர, சகோதரிகளும் ஆற்றிய பணியினால் தான்.
ஆகவே அந்த நல்ல உள்ளங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதே நேரத்தில் தமிழ் நாட்டு மக்கள் என் மீது வைத்துள்ள அளவு கடந்த நம்பிக்கைக்கும் நான் என்றும் கடமைப்பட்டவன் ஆவேன் என்று கூறியுள்ளார் விஜய்காந்த்.