For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓகேனக்கல்-மத்திய அரசு தலையிட கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம்

By Staff
Google Oneindia Tamil News

Assembly
சென்னை: தமிழ்நாடு எல்லைக்குள் ஓடிக் கொண்டிருக்கும் காவிரி நீரை எடுத்து தண்ணீருக்காக தவித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு வழங்கும் திட்டம் தான் ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம். இதனால் கர்நாடகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை.

எனவே இத் திட்டத்துக்கு எதிராக செயல்படும் கர்நாடகத்தை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் உள்ளாட்சி்த்துறை அமைச்சர் ஸ்டாலின் ஒகேனக்கல் குடிநீர் திட்டம் குறித்து ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அதில்,

தமிழகத்தின் வறண்ட பகுதிகளான, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள மக்களின் குடிநீர்த் தேவையை நிறைவு செய் திடும் நோக்கத்துடனும், அந்த மாவட்டங்களில் நிலத்தடியிலே உள்ள குடிநீர் ஆதாரங்களில் அதிக அளவில் கலந்திருக்கும் புளோரைடு நச்சுத்தன்மையால் பெருமளவிற்கு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டும், ஒகேனக்கல் பகுதியில் காவேரி நீரை ஆதாரமாகக் கொண்டு தரமான, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் நீண்ட நெடுங்காலமாகவே பரிசீலனையில் இருந்து வந்துள்ளது.

தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் இத்திட்டத்தின் அத்தியாவசியம் காரணமாக முழு ஆதரவினை அளித்து வந்துள்ளன. மத்திய அரசும், இத்திட்டத்தினைச் செயல்படுத்துவதற்குத் தேவையான நிதி ஆதாரங்களை வெளிநாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்றுத் தருவதில் தமிழகத்திற்கு உறுதுணையாக இருந்து வருகிறது.

1997ம் ஆண்டில் அன்றைய பிரதமர் வாஜ்பாய் தலைமையில் அமைந்திருந்த தேசிய ஜனநாயக முன்னணி அரசும், அதற்கு முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசுகளும், தற்போது டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலும், சோனியா காந்தி வழிகாட்டுதலிலும் நடைபெற்று வரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும், இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்குத் தொடர்ந்து ஆதரவு நல்கி வந்துள்ள நிலையில், கர்நாடக மாநிலத்தில் இத்திட்டத்திற்கு அரசியல் நோக்கத்தோடு திடீரென எதிர்ப்பு தெரிவித்து வருவது நமக்கு அதிர்ச்சியையும், ஆழ்ந்த வேதனையையும் அளிக்கக் கூடியதாக உள்ளது.

இக்கூட்டுக் குடிநீர்த் திட்டம் தமிழ்நாடு மாநில எல்லைக்குள் ஓடிக் கொண்டிருக்கும் காவிரி நீரை எடுத்து வந்து தண்ணீர்த் தேவையினால் தவித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு வழங்குவதற்கான திட்டமேயாகும். இத்திட்டத்தால், கர்நாடக மாநிலத்திற்கு எவ்விதமான குந்தகமோ, பாதிப்போ இல்லை.

மேலும், காவிரி ஆற்றைக் குடிநீர் ஆதாரமாகக் கொண்டு, மாநிலத் தலைநகரான பெங்களூரு குடிநீர்த் திட்டத்தைப் பல்வேறு கட்டமாகக் கர்நாடக அரசு செயல்படுத்தி வருகிறது.

அடிப்படையான குடிநீர்த் தேவைகளை நிறைவு செய்து கடுமையான நோயிலிருந்து மக்களைக் காப்பாற்ற இயற்றப்பட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்குக் கர்நாடகம் எதிர்ப்பு தெரிவிப்பது, இந்தியாவின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும் எதிரானது.

மத்திய அரசின் சுற்றுப்புறச் சூழல் மற்றும் வனத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நீர்வள ஆதாரத்துறை ஆகிய துறைகளின் அனுமதியை 1998ம் ஆண்டிலேயே பெற்று, சர்வதேச கூட்டுறவுக்கான ஜப்பான் நாட்டு வங்கியின் நிதி உதவியுடன், ரூ. 1,334 கோடி செலவில் தமிழக அரசால் நிறைவேற்றப்படவுள்ள ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு கர்நாடகம் எதிர்ப்பு தெரிவிப்பதைப்பற்றி பிரதமர் மன்மோகன்சிங்க்கு முதலமைச்சர் கருணாநிதி அனுப்பியுள்ள கடிதத்தில்,

உண்மை நிலைகளை விளக்கி ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு கர்நாடக அரசு எவ்விதத் தடையும் ஏற்படுத்தாதிருக்க அறிவுறுத்தும்படி, கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழகம் எப்போதுமே தனது அண்டை மாநிலங்களுடனும், அந்த மாநிலங்களின் மக்களுடனும் நட்பையும், நல்லுறவையும் பேணி வளர்த்து வருகிறது.

எனவே, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த்திட்டம் குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற மத்திய அரசு முழு ஒத்துழைப்பையும், உதவியையும் தமிழக அரசிற்கு வழங்க வேண்டும்.

கர்நாடகம் கடைப் பிடித்து வரும் எதிர்ப்புப் போக்கினை தடுத்து நிறுத்திட ஆவன செய்திட வேண்டுமென்றும் இந்தப் பேரவை மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

பின்னர் இந்தத் தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X