For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேசிய அளவில் 3வது அணி அமைவது உறுதி: காரத்

By Staff
Google Oneindia Tamil News

Prakash karat
கோவை: தேசிய அளவில் காங்கிரஸ், பாஜக இல்லாத 3வது அணி அமைப்பது உறுதி. அதில் இடதுசாரிகள் உறுதியாக உள்ளன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.

கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது காங்கிரஸ் நேற்று கோலாகலமாக தொடங்கியது. 6 நாட்களுக்கு இந்த காங்கிரஸ் நடைபெறவுள்ளது. இதனால் கோவை நகரம் முழுவதும் செங்கொடிகளால் நிறைந்துள்ளது.

மாநாட்டைத் தொடங்கி வைத்து பிரகாஷ் காரத் பேசுகையில், மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை இடதுசாரிகள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன. தனியார்மயமாக்கல், பொதுத் துறை பங்குகளை தனியாரிடம் விற்பது உள்ளிட்டவற்றை இடதுசாரிகள் ஒருபோதும் ஆதரித்ததில்லை.

சிறுவணிகப் பிரிவில், வெளிநாட்டு நேரடி முதலீடுகளை இடதுசாரிகள் ஏற்க மாட்டார்கள். உயர் கல்வித்துறை, ஓய்வூதிய நிதியம் உள்ளிட்டவற்றை சீர்குலைக்கவும் இடதுசாரிகள் ஒத்துழைக்க மாட்டார்கள்.

மதவாத சக்திகள் மத்தியில் ஆட்சிக்கு வந்து விடாமல் தடுக்கவே ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை இடதுசாரிகள் ஆதரிக்கின்றன. இருப்பினும், மக்களுக்கு உதவாத கொள்கைகளை, முடிவுகளை மத்திய கூட்டணி அரசு உருவாக்கினால் அதை நாங்கள் திட்டவட்டமாக எதிர்ப்போம்.

பெரும் பணக்காரர்களுக்கும், முதலாளித்துவவாதிகளுக்குமே பயன் தரும் பொருளாதார கொள்கைகளை மத்திய அரசு விரும்புகிறது, நம்புகிறது. இது வருத்தத்திற்குரியது, கண்டனத்துக்குரியது.

3வது அணி உறுதி:

தேசிய அளவில் 3வது அணியை உருவாக்குவதில் இடதுசாரிகள் உறுதியாக உள்ளனர். இந்த கூட்டணி தேர்தல் கூட்டணியாக மட்டும் இருக்காமல், கொள்கை அளவில், திட்டமிட்டப்பட்ட, வலுவான கூட்டணியாக அமைய வேண்டும் என்பதில் நாங்கள் நம்பிக்ைக கொண்டுள்ளோம்.

மக்களுக்கான பொருளாதாரக் கொள்கைகள், சமூக நீதிக்கான கொள்கைகள், சுதந்திரமான வெளிநாட்டுக் கொள்கைகளுடன் கூடியதாக 3வது அணி அமைய வேண்டும்.

அமெரிக்காவின் முதலாளித்துவ, ஆதிக்கப் போக்குடைய கொள்கைகளை மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது, ஆதரிக்கக் கூடாது. கடந்த ஐந்து ஆண்டுளாக ஈராக்கை ஆக்கிரமித்துள்ளது அமெரிக்கா. லட்சக்கணக்கான ஈராக்கியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அதிபர் புஷ் கூறும் பொய்களும், சால்ஜாப்புகளும், ஈராக்கின் எண்ணை வளம் மீது அவர் குறி வைத்துள்ளதும் அம்பலமாகியுள்ளன. ஈராக்கின் வளத்ைத சூறையாடுவதே அவரது முக்கிய நோக்கம் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

அன்று அமெரிக்க படைகளின் ஆக்கிரமிப்பை கண்டுகொள்ளாத உலக நாடுகள் இன்று அமெரிக்கா ஈராக்கை விட்டு வெளியேற வேண்டும் என கோரி வருகின்றன.

அதேபோல பாலஸ்தீனத்தைத் தொடர்ந்து இஸ்ரேல் தாக்கி வருவதை அமெரிக்கா ஆதரித்து வருகிறது. இது கடும் கண்டனத்துக்குரியது.

உலகப் பொருளாதாரம் இன்று பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது. இதை இந்தியா பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இனிமேலும் அமெரிக்க பொருளாதாரக் கொள்கைகள் பின்னால் போக அது நினைக்கக் கூடாது.

ஆனால், நாம் பெரிய வல்லரசாக அமெரிக்கா உதவும் என இந்தியா நினைப்பதுதான் பெரும் துரதிர்ஷ்டம். பாஜக கூட்டணி அரசு செய்து விட்டுப் போன தவறுகளைத் தொடர்ந்து செய்து வருகிறது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு.

அமெரிக்காவுடன் எந்த விதத்திலும் ராணுவ ரீதியிலான ஒத்துழைப்பை இந்தியா மேற்கொள்ளக் கூடாது. ராணு ரீதியிலான ஒப்பந்தங்களை முறித்துக் கொள்ள வேண்டும். இது இந்தியாவுக்கு மட்டுமல்ல தெற்காசியாவுக்கே பாதகமாக அமையும்.

அமெரிக்காவின் ஆதிக்க மனப்பான்மையைக் கண்டித்து இந்தியா மட்டுமல்லாது, வங்கதேசம், நேபாளம், இலங்கை ஆகிய அண்டை நாடுகளும் போராட வேண்டும் என்றார் காரத்.

முன்னதாக மறைந்த கட்சி முன்னோடிள் அனில் பிஸ்வாஸ், சித்தப்பிரதா மஜூம்தார், கொரடலா சத்யநாராயணா, டி.கே.ராமகிருஷ்ணன், பிப்ளாஸ் தாஸ் குப்தா, பகதூர் சிங் தக்கத் ஆகியோரின் மறைவுக்கு மாநாட்டில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X