என்.எல்.சி. போராட்டம் தீவிரம்-மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்!
நெய்வேலி: நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் ஒப்பந்த தொழிலாளர்கள் மேற்கொண்டுள்ள போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதனால் மின் உற்பத்தி பெரும் பாதிப்பை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்
ளது.
நெய்வேலி அனல் மின் கழகத்தில் பணியாற்றி வரும் 12 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களும், பணி நிரந்தரம், நிரந்தர ஊழியர்களுக்கு வழங்கப்படுவதைப் போல தங்களுக்கும் 8.33 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
போராட்டம் தொடங்கி இன்று 3வது நாள் ஆகிறது. இதனால் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தொழிலாளர் சங்கங்களுக்கும், நிர்வாகத்திற்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதுகுறித்து ஏஐடியூசி தலைவர் குப்புசாமி கூறுகையில், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் நிர்வாகத்திற்கு இல்லை. ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் அவர்கள் பேசி வருகிறார்கள். பேச்சுவார்த்தை என்ற பெயரில் எங்களை மிரட்டுகிறார்கள். எனவேதான் பேச்சுவார்த்தையிலிருந்து நாங்கள் விலகி வந்து விட்டோம் என்றார்.
பேச்சுவார்த்தை தோல்வியடைந்து விட்டதைத் தொடர்ந்து உண்ணாவிரதம், சிறை நிரப்பும் போராட்டம், முதல் சுரங்கம் மற்றும் அணல் மின் நிலையம் முன்பு மறியல் செய்வது என்ற போராட்டங்களை தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.
இதனால் என்.எல்.சி. வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
போராட்டம் தீவிரமடைந்து வருவதால் மின் உற்பத்தி பெரும் பாதிப்பை சந்திக்கும் அபாயம் எழுந்துள்ளது.