For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பதவி விலக மாட்டேன்-மலேசிய பிரதமர் படாவி

By Staff
Google Oneindia Tamil News

கோலாலம்பூர்: பிரதமர் பதவியிலிருந்து விலகப் போவதாக வெளியாகியுள்ள செய்திகளில் உண்மை இல்லை. அந்தத் திட்டம் என்னிடம் இல்லை என்று மலேசியப் பிரதமர் அப்துல்லா அகமது படாவி கூறியுள்ளார்.

மலேசியாவில் நடந்த பொதுத் தேர்தலில் படாவி தலைமையிலான பாரிசன் தேசியக் கூட்டணிக்கு பெருத்த சரிவு ஏற்பட்டது. வரலாறு காணாத வகையில் அடி விழுந்தது. 222 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 140 இடங்களில் மட்டுமே படாவி கட்சி வெற்றி பெற்றது. மாறாக எதிர்க்கட்சிகள் 82 இடங்களில் வெற்றி பெற்றது.

இதையடுத்து படாவி மீண்டும் பிரதமராக பதவியேற்கக் கூடாது என்று ஆளும் கூட்டணிக்குள் குரல்கள் எழுந்தன. குறிப்பாக முன்னாள் பிரதமர் மகாதிர் முகமது உள்ளிட்டோர் படாவிக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர்.

ஆனால் அனைத்து எதிர்ப்புகளையும் மீறி மீண்டும் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார் படாவி. சமீபத்தில் அமைச்சரவையையும் அறிவித்தார்.

இறுப்பினும் தேர்தலுக்குப் பின்னர் படாவி வெளி நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்து கொள்ளாமல் இருந்து வருகிறார். இதனால் அவர் பதவி விலகக் கூடும் என்ற பரபரப்பு மலேசியாவில் ஏற்பட்டது.

ஆனால் தான் பதவி விலகும் திட்டம் இல்லை என்று படாவி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் எங்கும் போகவில்லை. இங்கேதான் இருக்கிறேன். நான் ராஜினாமா செய்து விட்டதாக சிலர் வதந்தி பரப்புகிறார்கள். நான் எதற்கு ராஜினாமா செய்ய வேண்டும்.

அறுதிப் பெரும்பான்மை இல்லாவிட்டாலும் கூட பெரும்பான்மை பலத்துடன்தான் எனது அரசு உள்ளது. மக்களின் ஆதரவும் எங்களுக்கு உள்ளது. பிறகு ஏன் எனது பொறுப்பை புறக்கணித்து விட்டு நான் விலக வேண்டும் என்றார் அவர்.

ஓரணியில் எதிர்க்கட்சிகள்-படாவிக்கு புது சிக்கல்:

இந்த நிலையில், மலேசியாவில் தனித் தனியாக செயல்பட்டு வரும் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டுள்ளன. இதனால் படாவி அரசுக்கு புதுத் தலைவலி உருவாகியுள்ளது.

முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் இப்ராகிம் தலைமையிலான மலேசிய இஸ்லாமிய கட்சி, சீன வம்சாவளியினரின் கட்சியான ஜனநாயக நடவடிக்கைக் கட்சி (இக்கட்சியின் சார்பில்தான் ஹின்ட்ராப் அமைப்பின் மனோகரன் எம்.எல்.ஏ ஆகியுள்ளார்) மற்றும் நீதிக் கட்சி ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட தீர்மானித்துள்ளன.

இந்தக் கட்சிகள் 1999ம் ஆண்டே இணைந்திருக்க வேண்டியவை. ஆனால் மலேசியாவை முஸ்லீம் நாடாக்கப் போவதாக அன்வர் இப்ராகிம் கூறி வந்ததால் கூட்டணி ஏற்படவில்லை. ஆனால் தற்போது இவர்கள் மூன்று பேரும் சேர்ந்துள்ளனர். இதனால் படாவி அரசுக்கு நாடாளுமன்றத்தில் பெரும் சவால் ஏற்படும் எனக் கருதப்படுகிறது.

டத்தோ மீது வேதமூர்த்தி பாய்ச்சல்:

இந்த நிலையில் முன்னாள் அமைச்சரும், தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளவரும், மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவருமான டத்தோ சாமிவேலு, ஐந்து ஹின்ட்ராப் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என ஹின்ட்ராப் அமைப்பின் தலைவர் வேதமூர்த்தி கோரியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹின்ட்ராப் தலைவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று டத்தோ சாமிவேலு கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் ஹின்ட்ராப் அமைப்பு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்த விடாமல் ஜனநாயக குரல் வளையை நெரித்ததில் டத்தோ சாமிவேலுவுக்கும் பங்கு உண்டு.

மலேசிய பிரதமர் தனது தவறுகளை ஒப்பு கொண்டு அவற்றை சரி செய்ய உறுதி அளித்துள்ளார். ஆனால் டத்தோ சாமிவேலு வழக்கம் போல இந்த பிரச்சனையில் அரசியல் நாடகம் ஆடுகிறார்.

ஹின்ட்ராப் தலைவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்ட போது எதிர்ப்பு தெரிவிக்காததற்கும் ஹின்ட்ராப் அமைப்பு தேச பாதுகாப்புக்கு எதிரானது என்றும், அதற்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக கூறியதற்கும், ஹின்ட்ராப் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்கும் முதலில் டத்தோ சாமிவேலு கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

டத்தோ சாமிவேலுவின் கருணையால் விடுதலை ஆவதை உதயகுமார் ஒருபோதும் விரும்ப மாட்டார். ஹின்ட்ராபின் போராட்டம் நியாயமானது என்றும், அவர்களது போராட்டம் தேசப் பாதுகாப்புக்கு எதிரானதல்ல என்று ஒப்பு கொள்வதுமே உண்மையான விடுதலையாகும் என்று அவர் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X