போலி இணையதளத்தின் மூலம் அரக்கோணம் இன்ஜினியர் 'சில்மிஷம்'
சென்னை: இன்டர்நெட்டில் ஆபாச தகவல்களை பரப்பி தன்னையும் குடும்பத்தாரையும் இழிவுபடுத்தும் மலேசிய வாழ் தமிழ் இன்ஜினியர் மீது விழுப்புரம் சாப்ட்வேர் ஊழியர் போலீசில் புகார் செய்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகேயுள்ள மணப்பூண்டி புதுநகரை சேர்ந்தவர் ரவீந்திரன். எம்.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ள இவர் பெங்களூரில் பணிபுரிகிறார். இவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் நாஞ்சில்குமரனை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில்,
இன்டர்நெட்டில் எனது பெயரில் 2 இணைய தளங்கள் தொடங்கி அதில் பொதுமக்களுக்கு பயன்படும் கருத்துக்களை சொல்லி வருகிறேன். கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் படித்துள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு தகவல்களையும் பரிமாறுகின்றேன்.
இந்த நிலையில், அரக்கோணத்தை சேர்ந்த ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர் எனது பெயரில் போலி இணையதளத்தை உருவாக்கி அதில் ஆபாசத் தகவல்களையும், எனது இணையதளத்துக்கு எதிர்மறையான தகவல்களையும் பரப்பி வருகிறார். மலேசியாவில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே இதுபோன்ற தவறுகளை அவர் செய்துவருகிறார்.
இதுமட்டுமல்லாமல், அவரது போலி இணையதளத்தில் என்னைப் பற்றியும், எனது மனைவி மற்றும் தாயார் பற்றியும் ஆபாச தகவல்களை அனுப்பி அவதூறு பரப்புகிறார். நான் சொல்வதுபோல செக்ஸ்' தகவல்களையும் அனுப்புகிறார்.
இதனால், எனது நல்ல கருத்துக்களை இணைய தளத்தில் பார்த்து வந்த ஏராளமானபேர், என்னைப்பற்றி தவறாக பேச ஆரம்பித்தனர்.
சமீபத்தில் ஒகேனக்கல் பிரச்சினையில் கர்நாடக மாநிலத்தில் தமிழர்களுக்கு எதிராக போராட்டம் நடந்தபோது ஆர்குட்' இணையதளத்தில் எனது பெயரில் கன்னடர்களை பற்றி நான் தவறாக சொன்னதுபோல தகவல் ஒன்றை வெளியிட்டார். எனது முகவரி-தொலைபேசி எண்களையும் வெளியிட்டார்.
இதை பார்த்த ஏராளமான கன்னடர்கள் பெங்களூரில் உள்ள எனது வீட்டுக்கு வந்து தகராறு செய்ய ஆரம்பித்துவிட்டனர். இதையும் மலேசிய என்ஜினீயர் தான் செய்துள்ளார்.
இதேபோல இணையதளத்தில் கருத்து சொல்லும் தமிழகத்தை சேர்ந்த சுமார் 25 பட்டதாரிகளை பற்றி, அந்த மலேசிய என்ஜினீயர் தவறான தகவல்களை இணையதளம் மூலம் சொல்லி அவதூறு பரப்பி வருகிறார். அவர்மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல, சரவணன் என்பவரும் குறிப்பிட்ட மலேசிய என்ஜினீயர் மீது புகார் மனு கொடுத்தார். இது தொடர்பாக விசாரணை நடத்தும்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர்கிரைம் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.