For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேலும் 7,500 மினி பஸ்களை இயக்க திட்டம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: திமுக ஆட்சியில் போக்குவரத்து துறை நிர்வாகம் சீர்கெட்டு, போக்குவரத்துக் கழகங்கள் சீரழியும் நிலையில் உள்ளன என அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.

சட்டசபையில் போக்குவரத்துத்துறை மானியக் கோரிக்கைகள் மீது நடந்த விவாதம்:

எதிரொலி மணியன் (பா.ம.க.): போக்குவரத்துக் கழக அலுவலகங்கள் சுத்தமாக வைக்கப்படுவதில்லை. தனியார் பஸ்கள் இரண்டு ஆண்டுகளுக்கு பின்பும் புதிதாக இருக்கும். ஆனால், அரசு பஸ்கள் இரண்டு ஆண்டுகளில் மோசமடைந்து விடுகிறது.

தனியார் பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கு பஸ்சை சரியாக பராமரிக்க வேண்டும் என்ற பயம் இருக்கிறது. அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள், டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு பயமே இல்லை. அவர்களை பராமரிப்புக்கு பொறுப்பேற்கச் செய்ய வேண்டும்.

கிராமப் புறங்களில் 90 சதவீதம் ஓட்டை, உடைசல் பஸ்கள் தான் இயக்கப்படுகின்றன. பள்ளிக் குழந்தைகளுக்கு குறிப்பிட்ட பஸ்களில் மட்டும் இலவச பஸ் பாஸ் செல்லும் என உத்தரவிட்டிருப்பதால், நெரிசல் சமயங்களில் குழந்தைகள் சிரமப்படுகின்றனர்.

அவர்களை கண்டக்டர்கள் கேவலமாக பேசுகின்றனர். எனவே, பள்ளி ஆரம்பிக்கும் நேரம் மற்றும் முடியும் நேரத்தில் எந்த பஸ்சில் வேண்டுமானாலும் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்.

பஸ் டிக்கெட்டுகள் ஆங்கிலத்தில் தான் அச்சிடப்பட்டுள்ளன. எம்.எல்.ஏக்களுக்கு அரசு பஸ்களில் உரிய மரியாதை இல்லை.

ஏ.கே.போஸ் (அ.தி.மு.க.): அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் நிர்வாகம் சிறப்பாக இருந்தது. தற்போது நிர்வாகம் சீர்கெட்டு, போக்குவரத்துக் கழகங்கள் சீரழியும் நிலையில் உள்ளன. கடந்த ஆட்சியில் மாதத்தின் கடைசி நாளன்று, வங்கிகளின் ஏ.டி.எம். மூலம் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டது. இந்த ஆட்சியில் 1ம் தேதி ஆன பிறகும் சம்பளம் வழங்குவதில்லை.

ஹெல்மெட் அவசியம் என்று கூறி அதற்கான காலக்கெடு வைத்தீர்கள். எல்லாரும் அடித்துப் பிடித்து ஹெல்மெட் வாங்கினர். அதற்கு பிறகு, அவசியப்பட்டால் போட்டுக் கொள்ளலாம் என்று கூறி விட்டீர்கள். இந்த விஷயத்தில் உங்கள் நிலை என்ன? எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவரும் இரண்டு வழித்தடங்களை பரிந்துரைத்தால், உடனடியாக விடப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், அ.தி.மு.க. எம்எல்ஏக்கள் பலரும் பரிந்துரை செய்த வழித்தடத்தில் பஸ்கள் இயக்கவில்லை. பழி வாங்கும் விதத்தில் இந்த அரசு செயல்படுகிறது.

'ஏர் பஸ்' என்று போட்டு கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். ஆனால், பின்பகுதியில் மட்டும் தான் 'ஏர் சஸ்பென்ஷன்' உள்ளது. முன்பகுதியில் 'ஸ்பிரிங்' மட்டுமே உள்ளது. இவை ஆறு மாதங்களில் பழுதாகி விடும்.
ஒரு பஸ் சேசிஸ் ரூ.13 லட்சத்துக்கு வாங்கப்பட்டு, அதற்கு பாடி கட்ட ரூ. 5.94 லட்சம் செலவிடப்படுகிறது. மொத்தம் ரூ.19 லட்சம் செலவு செய்து தாழ் தள பஸ்கள் என்று டவுன் பஸ்களை இயக்குவது தேவையானதா?

போக்குவரத்துத்துறை அமைச்சர் நேரு: எந்த எம்.எல்.ஏ., பரிந்துரை செய்தாலும், அந்த வழித் தடத்தில் இரண்டு மாதங்களுக்குள் நிச்சயமாக பஸ் விடப்படும். வயதானவர்கள் மற்றும் ஊனமுற்றோர் வசதிக்காக தாழ் தள பஸ்கள் விடப்படுகின்றன. இதற்கு, மக்களிடையே அதிக வரவேற்பு உள்ளது.

மேலும் 7,500 மினி பஸ்களை இயக்க திட்டம்:

மினி பஸ்களை பொறுத்தவரை மொத்தமே 200 முதல் 250 புதிய வழித்தடங்கள் தான் உள்ளதாகவும், அதற்கு ஆயிரம் பஸ்கள் தான் அதிகபட்சம் தேவை என்றும் மாவட்ட கலெக்டர்கள் தெரிவித்துள்ளனர். எனவே மேலும் 7,500 புதிய மினி பஸ்களை இயக்கும் வகையில் புதிய திட்டம் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. ஆட்சியின் இறுதியில், போக்குவரத்துக் கழகங்களில் மொத்தம் 17,104 பஸ்கள் இருந்தன. இந்த ஆட்சியில் மொத்தம் 19,388 பஸ்கள் உள்ளன.

இவற்றில், பழைய பஸ்களுக்கு பதிலாக 3,997 புதிய பஸ்கள் விடப்பட்டுள்ளன. போக்குவரத்துக் கழகங்களில் 1.31 லட்சம் பணியாளர்கள் உள்ளனர். அதாவது, ஒரு பஸ்சுக்கு ஆறு பேர் என்ற விகிதத்தில் உள்ளனர்.

அரசு பஸ்கள் நாள் ஒன்றுக்கு 85 லட்சம் கி.மீ. தூரத்திற்கு இயக்கப்படுகின்றன. இதில், 1.85 கோடி மக்கள் தினமும் பயணம் செய்கின்றனர்.

கடந்த ஆட்சியில் நாள் ஒன்றுக்கு 75 லட்சம் கி.மீ. தான் பஸ்கள் இயக்கப்பட்டன. இரண்டு ஆண்டுகளில் 1,124 புதிய வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

ஏற்கனவே உள்ள வழித்தடங்களில் ஓடும் கி.மீ. தூரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், மொத்தம் 34,215 டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆட்சியில் நாள் ஒன்றுக்கு ரூ.10.39 கோடி வசூலானது. தற்போது ரூ.11.30 கோடி வசூலாகிறது. இதற்கு காரணம், பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதல்ல. தினமும் 10 லட்சம் கி.மீ. அதிகமாக இயக்கியதும், 10 லட்சம் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதும் தான்.

கடந்த ஆட்சியில், சென்னையில் 1,800 பஸ்கள் தான் இயக்கப்பட்டன. தற்போது, 2,775 பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும் 45 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர்.

இந்தியாவிலேயே அதிக பஸ்களும், குறைந்த கட்டணமும் உள்ள மாநிலம் தமிழகம் தான். சென்னையில் 90 சதவீத பஸ்களையும் புதிதாக மாற்றுவதே எங்கள் குறிக்கோள்.

இந்த ஆண்டு ரூ.330 கோடி செலவி்ல் 3,500 புதிய பஸ்கள் வாங்கப்படும். தமிழகத்தில் உள்ள ஏழு போக்குவரத்துக் கழகங்களில் ஐந்து கழகங்கள் தன்னிறைவு பெற்று, தங்களை காப்பாற்றிக் கொள்ளும் நிலையில் உள்ளன. மீதமுள்ள இரண்டு கழகங்கள் தான் மோசமாக, நஷ்டத்தில் உள்ளன.
மதுரை மண்டலத்தில் இயக்கப்படும் பஸ்களில் 3,900 பஸ்கள் நகர பஸ்கள் தான். எனவே, ரூ.190 கோடி பின்னடைவு ஏற்பட்டுள்ளது. வருவாய்க்கும், செலவுக்கும் கட்டுப்படியாகவில்லை.

இதனால், இந்த ஆண்டில் அரசு பணத்தில் வாங்கப்படும் பஸ்களில் 1,000 பஸ்கள் மதுரை போக்குவரத்துக் கழகத்துக்கும், 1,000 பஸ்கள் சென்னை மாநகர கழகத்துக்கும், மீத பஸ்கள் மற்ற ஐந்து போக்குவரத்துக் கழகங்களுக்கும் பிரித்து வழங்கப்படும் என்றார் நேரு.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X