கருத்து வேறுபாடு நீங்கியது: மீண்டும் முருகன் நளினி சந்திப்பு
வேலூர்: பிரியங்கா சந்திப்பையடுத்து ஏற்பட்ட கருத்துவேறுபாடு நீங்கியதால் கணவர் முருகனை நளினி நேற்று சந்தித்து பேசினார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தூக்குதண்டனை பெற்ற முருகன், வேலூர் மத்திய சிறையில் ஆண்கள் பகுதியிலும், அவரது மனைவி நளினி பெண்கள் பகுதியிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
நளினியும் முருகனும் 15 நாட்களுக்கு ஒருமுறை சிறையில் சந்தித்து பேசிக் கொள்ள சிறைத்துறை அனுமதி வழங்கியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி ராஜிவ் மகள் பிரியங்கா, வேலூர் சிறைக்கு வந்து நளினியை சந்தித்து பேசினார்.
இதையடுத்து நளினிக்கும், முருகனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு முருகனை சந்திக்கும் வாய்ப்பு வந்தபோது நளினி மறுத்துவிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தநிலையில் நளினியின் தாய் நர்ஸ் பத்மா, சகோதரர் பாக்கியநாதன் ஆகியோர் நேற்று முன்தினம் வேலூர் சிறையில் நளினியை சந்தித்து சமாதானம் செய்ததாக தெரிகிறது. முருகனை சந்திப்பதை தவிர்க்க வேண்டாம் என்று நளினியை அவர்கள் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து முருகனை சந்திக்க ஒப்புக்கொண்டு மனு கொடுத்தார் நளினி.
இந்த சந்திப்புக்கு சிறை அதிகாரிகள் அனுமதி கொடுத்ததையடுத்து நேற்று காலை 9 மணியளவில் பலத்த பாதுகாப்புடன் பெண்கள் சிறைக்கு முருகனை அதிகாரிகள் அழைத்து வந்தனர். அதிகாரிகள் முன்னிலையில் முருகனும் நளினியும் அரைமணிநேரம் சந்தித்து பேசினர்.
அப்போது முருகனை பார்த்தவுடன் நளினி அழுதுள்ளார். அவரை முருகன் சமாதானப்படுத்தியுள்ளார். தங்கள் மகள் அரித்ராவின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டுதான் தன்னை பிரியங்கா சந்திக்க ஒப்புக்கொண்டதாகவும் நளினி கூறியதை முருகன் ஏற்றுக் கொண்டதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தனது விடுதலைக்காக வக்கீல் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பதாக முருகனிடம் நளினி தெரிவித்துள்ளார். இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது பல முறை உணர்ச்சிவசப்பட்டு அழுததாகவும், நேரமாகிவிட்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தபிறகே முருகன் வெளியே வந்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.