For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராமர் பாலத்தை இடிக்க வேண்டும் என்றால் சேதுவே வேண்டாம்: சுவாமி

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: ராமர் பாலத்தை இடித்துத்தான் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றும் என்றால் அந்தத் திட்டத்தையே கைவிட்டு விட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி வாதிட்டார்.

ராமர் பாலத்தை பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க வேண்டும், பாலத்தை இடித்து விட்டு சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று கோரி ஜெயலலிதா, சுப்ரமணியம் சுவாமி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த மனுக்கள் மீதான இறுதி விசாரணை உச்சநீதிமன்றத்தில் கடந்த 2 நாட்களாக நடந்து வருகிறது. முதலில் ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வேணுகோபால ராவ் வாதிட்டார். பின்னர் பிற மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் பராசரன், சோலி சொரப்ஜி ஆகியோர் வாதிட்டனர்.

நேற்று சுப்ரமணியம் சுவாமி நேரில் ஆஜராகி அவரே வாதிட்டார். அவர் வாதிடுகையில், ராமர் பாலம் தொடர்பாக மத்திய அரசும், தமிழக அரசும் இரட்டை நிலையை கடைப்பிடிக்கின்றன. புகழ் பெற்ற ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டபோது, அதனால் தமிழர்களின் மனம் புண்படும், தமிழ் மக்கள் மிகவும் வேதனைப்படுவார்கள். எனவே அந்தத் தடையை நீக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டது.

அதேபோலத்தான் ராமர் பாலத்தை இடித்தால் கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வுகள் புண்படும், மனம் வேதனைப்படும். இதை மத்திய அரசும், தமிழக அரசும் உணர வேண்டும். எனவே ராமர் பாலத்தை இடிக்க உச்சநீதிமன்றம் அனுமதிக்கக் கூடாது.

சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றினால் நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பு, சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்குப் பாதிப்பு ஏற்படும். விடுதலைப் புலிகள் தங்களது நடவடிக்கையை இந்தியாவில் மேற்கொள்ள ஏதுவாகி விடும் என்று இந்திய கடற்படைத் தளபதியும், கடலோரக் காவல் படை இயக்குநரும் எச்சரித்துள்ளனர்.

சேது கால்வாய் அமைந்தால் கொச்சியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு மிக எளிதாக அவர்களால் செல்ல முடியும்.

மேலும் தற்போது திட்டமிட்டுள்ளபடி சேது கால்வாய் அமைக்கப்பட்டால் பெரிய கப்பல்கள் செல்வதற்கு வசதியாக இருக்காது என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சேது சமுத்திரத் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றுமானால், அது அரசியல் சட்டத்தின் 25வது பிரிவின்படி, 80 கோடி இந்துக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை மத சுதந்திரத்தை மீறியதாக அமையும்.

ராமர் பாலத்தை இடித்துத்தான் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றால் சேது சமுத்திரத் திட்டத்தையே மத்திய அரசு கைவிட்டு விட வேண்டும்.

ராமர் பாலம் மனிதர்களால் உருவாக்கப்பட்ட பாலம்தான் என்பதற்குப் போதிய ஆதாரங்கள், சான்றுகள் உள்ளன. இது இயற்கையான மணல் குன்றுகளால் உருவான அமைப்பு என்று மத்திய அரசு கூறுவது தவறு என்றார் சுவாமி.

இந்து முன்னணி இயக்கத்தின் சார்பில் வழக்கறிஞர் வைத்தியநாதன் வாதாடினார்.

இன்றும் சேது சமுத்திரத் திட்ட வழக்கில் விவாதம் தொடருகிறது. மத்திய அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் வாதிடுகிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X