கர்நாடகம்: பாஜகவுக்கு வெற்றி, காங்கிரசுக்கு சரிவு- எக்ஸிட் போல்
பெங்களூர்: கர்நாடக சட்டமன்றத்திற்கு நடந்து முடிந்த முதல் கட்டத் தேர்தலில் பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றும் என என்.டி.டி.வி. நடத்திய 'எக்ஸிட் போலில்' (Exit Poll) தெரியவந்துள்ளது.
224 தொகுதிகள் கொண்ட சட்டசபையில் முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு கடந்த சனிக்கிழமை தேர்தல் நடந்தது. இதில் பெங்களூரின் 28 தொகுதிகளும் அடக்கம்.
வாக்களித்துவிட்டு வந்தவர்களிடம் என்.டி.டி.வி. எக்ஸிட் போல் நடத்தியது. அதில் தெரிய வந்த முடிவுகள்:
பெங்களூரில் பாஜகவுக்கு வெற்றி:
இந்தத் தேர்தலில் பாஜகவுக்கு 4 சதவீத வாக்குகள் அதிகம் கிடைத்துள்ளன. இதன் மூலம் பெங்களூரில் 28 தொகுதிகளில் பாஜகவுக்கு 14 இடங்களில் வெற்றி கிடைக்கலாம்.
காங்கிரசுக்கு 10 இடங்கள் மட்டுமே கிடைக்கும். அந்தக் கட்சியின் ஆதரவில் 4 சதவீதம் அளவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளது. பெங்களூரைப் பொறுத்தவரை தேவெ கெளடாவின் மதசார்பற்ற ஜனதா தளத்தின் ஆதரவு கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் சரியவும் இல்லை கூடவும் இல்லை. அந்தக் கட்சி 4 இடங்களில் வெல்லக் கூடும்.
பெங்களூர் தவிர்த்து பிற தொகுதிகளிலும் பாஜகவுக்கு கூடுதலான ஆதரவு இருந்தது தெரியவந்துள்ளது.
இதனால் மொத்தம் தேர்தல் நடந்த 89 தொகுதிகளில் பாஜக 31 இடங்களில் வெல்லும். காங்கிரஸ் 23 இடங்களில் வெல்லக் கூடும். மதசார்பற்ற ஜனதா தளம் 30 இடங்களில் வெல்லலாம்.
மொத்தத்தில் 89 தொகுதிகளில் மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு கிடைத்த வாக்குகளில் 6 சதவீதம் அளவுக்கு சரிவு ஏற்பட்டாலும் அந்தக் கட்சி 30 இடங்களில் வெல்லும் எனத் தெரிகிறது. இது கடந்த தேர்தலைவிட 6 இடங்கள் குறைவாகும்.
தென் கர்நாடகத்தி்ல் தேவெ கெளடா சார்ந்துள்ள ஒக்கலிகா சமூகத்தினர் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இப் பகுதியில் நடந்த தேர்தலில் அந்தக் கட்சிக்கு அதிக இடங்களில் வெற்றி கிடைக்கவுள்ளது. ஆனால், அடுத்த கட்ட வாக்குப் பதிவு மத்திய, வடக்கு, கடலோர மாவட்டங்களில் நடக்கவுள்ளது.
இந்தப் பகுதிகளில் மதசார்பற்ற ஜனதா தளம் எப்போதுமே வீக் என்பது குறிப்பிடத்தக்கது.
கடலோர மாவட்டங்களிலும் வட மாவட்டங்களிலும் பாஜக மிகுந்த பலத்துடன் உள்ளது குறிப்பிடத்தக்கது.