சென்னை அருகே நைஜீரிய வாலிபர் கைது - தீவிரவாதியா?
சென்னை: நைஜீரியாவைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், சென்னை அருகே பல்லாவரத்தில் கைது செய்யப்பட்டார். அவர் தீவிரவாதியா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை அருகே உள்ள பரங்கிமலை கன்டோன்மெண்ட் போர்டுக்கு நீண்ட காலத்திற்குப் பிறகு தேர்தல் நடைபெறுகிறது. பல்வேறு கட்சிகளின் சார்பிலும் வேட்பாளர்கள் சுயேச்சை சின்னங்களில் களத்தில் நிற்கின்றனர். அனல் பறக்கும் பிரசாரமும் நடைபெறுகிறது. இதையொட்டி மோதல் ஏற்பட்டு விடாமல் தடுப்பதற்காக போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
நேற்று இரவு பல்லாவரம் பகுதியில் உள்ள விடுதிகளில் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ஒரு ஓட்டலுக்கு சென்று போலீசார் சோதனை நடத்தினர். குறிப்பிட்ட அறையை போலீசார் தட்டினார்கள். அப்போது அந்த அறையில் இருந்த வெளியே வந்த நபர், போலீஸாரைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். திடீரென ஓட்டம் பிடித்தார்.
இதைப் பார்த்து குழப்பமடைந்த போலீஸார் அந்த நபரை துரத்தினர். ஆனால் இருளைப் பயன்படுத்தி அந்த நபர் ஓடி விட்டார். இதையடுத்து அவர் தீவிரவாதியாக இருக்கக் கூடுமோ என்ற சந்தேகம் போலீஸாருக்கு வந்தது. இதையடுத்து உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தரப்பட்டது.
அப்பகுதி முழுவதையும் சுற்றி வளைத்த போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். இதில், அதே பகுதியில் உள்ள மற்றொரு விடுதியின் பின்புறத்தில் உள்ள புதர் ஒன்றில் அந்த நபர் பதுங்கியிருந்தார்.
அவரைப் போலீஸார் சுற்றி வளைத்தனர். இதையடுத்து அந்த நபர் தனது செல்போனில் உள்ள சிம் கார்டை கழற்றி வாயில் போட்டு கடித்து விழுங்கி விட்டார்.
பின்னர் அந்த நபரை போலீஸார் மடக்கிப் பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். அங்கு நடந்த விசாரணையில், அவரது பெயர் முகம்மது சாதிக் என்பதும், தாயகம் நைஜீரியா என்றும் தெரிய வந்தது. ஆனால் சாயூ பென்கோ என்ற பெயரில் அந்த நபர் லாட்ஜில் தங்கியிருந்தார்.
முறையான விசா உள்ளிட்ட ஆவணங்கள் அவரிடம் இல்லை. அவர் ஏதாவது ஒரு சர்வதேச தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவராக இருக்கக் கூடும் என போலீஸார் சந்தேகப்படுகின்றனர். இதையடுத்து அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.