இந்திய மாலுமிகளுடன் கடத்தப்பட்ட கப்பல் கண்டுபிடிப்பு
மொகாதிஷு: 10 இந்திய மாலுமிகளுடன் சோமாலியா தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ஜோர்டான் நாட்டுக் கப்பல், சோமாலியா அருகே கடலில் நின்று கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கப்பலை மீட்க தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
சோமாலியா மக்களுக்கு உதவுவதற்காக சர்க்கரை உள்ளிட்ட பொருட்களுடன் புறப்பட்ட ஜோர்டான் நாட்டு, எம்.வி. விக்டோரியா என்ற அந்தக் கப்பல், பயங்கர ஆயுதங்களுடன் வந்த சோமாலியா தீவிரவாதிகளால் 3 நாட்களுக்கு முன்பு கடத்தப்பட்டது.
அக்கப்பலில் 10 இந்திய மாலுமிகள் உள்ளனர். கப்பல் எங்கே போனது என்று தெரியாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் கப்பல் இருக்குமிடம் தற்போது தெரியவந்துள்ளது.
சோமாலியா தலைநகர் மொகாதிஷுவுக்கு 600 கிலோமீட்டர் வடக்கில், காராகாட் என்ற இடத்தில் கடலில் இந்தக் கப்பல் நின்று கொண்டிருக்கிறது. தற்போது கப்பலில் உள்ள தீவிரவாதிகளுடன் கப்பல் நிர்வாகமும், சோமாலியா அரசும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றன. தீவிரவாதிகள் தரப்பிலிருந்து பணம் ஏதும் கோரப்பட்டதா என்பது குறித்துத் தெரியவில்லை.
இந்த நிலையில் இந்தியக் கடற்படைக் கப்பல்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஐஎன்எஸ்டெல்லி போர்க் கப்பல் எந்த நேரத்திலும் புறப்படும் வகையில் தயார் படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டும் விக்டோரியா கப்பலை கடத்த முயற்சிக்கப்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக கப்பல் அப்போது தப்பி விட்டது. ஆனால் இந்த முறை தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் கப்பலை கடத்திச் சென்று விட்டனர்.