துபாய் ஜூமைரா சிட்டி-சிக்கலில் 1 லட்சம் பேர்

துபாயின் சட்வா பகுதியில் 1 லட்சத்திற்கு மேற்பட்ட வெளிநாட்டவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் ஆவர். இப்பகுதியில் மிகப் பெரிய அளவிலான ஜூமைரா கார்டன் சிட்டி உருவாக்கப்படவுள்ளது.
இதற்காக இப்பகுதியில் உள்ள பெரும்பாலான வீடுகள், கட்டடடங்ளை இடிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கு வசித்து வரும் வெளிநாட்டினர் அப்புறப்படுத்தப்படவுள்ளனர். இதனால் இவர்கள் தங்களது வீடுகள் உள்ளிட்டவற்றை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஷேக் சயீத் சாலை முதல் அல் வாசி சாலை வரை பல கிலோமீட்டர் தொலைக்கு ஜூமைரா கார்டன் சிட்டி உருவாக்கப்படவுள்ளது. டியாபா தெரு முதல் புகழ் பெற்ற, துபாயின் பழமையான பகுதியான சபா பார்க் வரையிலும் இந்த நகரின் எல்லை பரந்து விரிந்திருக்கும்.
இந்த இடைப்பட்ட பகுதியில் உள்ள அனைத்து கட்டடங்களையும் இடிக்கப் போகிறார்கள். சத்வா பகுதி துபாயிலேயே மிகவும் விலை குறைவான பகுதியாகும். இங்கு குறைந்த வாடகைக்கு வீடு கிடைக்கும், பொருட்களின் விலையும் சற்று மலிவாக இருக்கும். மத்திய துபாயில் இந்தப் பகுதி உள்ளது.
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் இப்பகுதியில்,தான் பெரிய அளவில் வசித்து வருகின்றனர். குடும்பத்துடன் தங்கியிருப்பவர்களுக்கும், கல்யாணமாகாத பேச்சலர்களுக்கும் இந்தப் பகுதி சொர்க்க பூமி போல.
துபாயிலேயே இப்பகுதி மட்டுமே சற்று மலிவான பகுதி. மற்றவை எல்லாம் படு காஸ்ட்லியான ஏரியாக்கள். எனவேதான் இந்தப் பகுதியில் வெளிநாட்டினர் குறிப்பாக இந்தியர்கள் அதிகம் வசிக்கின்றனர்.
ஆனால் இந்த பகுதியை தற்போது ஜூமைரா கார்டன் சிட்டிக்காக கையகப்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதனால் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இப்பகுதியில் உள்ள நில உரிமையாளர்களுக்கும், வீட்டு உரிமையாளர்களுக்கும் மார்க்கெட் விலையை விட 2 மடங்கு விலை தருவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளதால், அவர்களும் விற்பதற்கு சம்மதம் தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர். இதனால் வெளிநாட்டவர்கள் இங்கிருந்து அப்புறப்படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.