For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாக்.கில் பயங்கர குண்டுவெடிப்பு 60 பேர் பலி - 200 பேர் காயம்

By Staff
Google Oneindia Tamil News

Pakistan Bomb blast
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள பிரபல மரியாட் ஹோட்டலில் நேற்று இரவு பயங்கர தற்கொலைப் படைத் தாக்குதலை தீவிரவாதிகள் மேற்கொண்டதில், வெளிநாட்டவர் உள்பட 60 பேர் பலியானார்கள். 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

1000 கிலோகிராம் எடையுள்ள வெடிபொருட்களை நிரப்பியபடி வந்த லாரி மூலம், ஹோட்டல் நுழைவாயிலை இடித்த தீவிரவாதிகள் அதை வெடிக்கச் செய்ததாக தகவல்கள் கூறுகின்றன.

பாகிஸ்தானில் சமீப காலத்தில் நடைபெற்ற மிக பயங்கரமான தற்கொலைப் படைத் தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று இரவு 8 மணியளவில் வெடிகுண்டுகளை நிரப்பியபடி வந்த லாரி ஒன்று ஹோட்டல் நுழைவாயில் மீது பலமாக மோதியது. இதையடுத்து வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறின.

இதில் ஹோட்டல் முழுவதும் தீப்பிடித்துக் கொண்டது. 290 அறைகளைக் கொண்ட அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலின் பெரும்பாலான பகுதிகள் எரிந்து போய் விட்டன.

அந்த சமயத்தில் ஹோட்டலில் பல அமெரிக்கர்கள் தங்கியிருந்தனர். அவர்கள் உள்பட மொத்தம் 60 பேர் வரை இறந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அந்த ஹோட்டலே போரின்போது குண்டு வீசப்பட்டதைப் போல காணப்பட்டது.

இந்த பயங்கர சம்பவத்தில் இந்தியர்கள் யாரும் இறக்கவில்லை என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

குண்டுவெடிப்பின் தாக்கத்தால், நுழைவாயில் பகுதியில் 20 அடி ஆழம், 30 அடி அகலத்திற்குப் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.

ஹோட்டல் முழுவதும் தீயில் கருகி விட்டதால் இடியும் அபாயத்தில் உள்ளது. ஹோட்டல் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான கார்களும், வாகனங்களும் குண்டுவெடிப்பில் சிதறிப் போய் விட்டன.

அரசு டிவியான பிடிவியின் அலுவலகம் உள்பட அருகில் உள்ள பல கட்டடங்களும் சேதமடைந்துள்ளன.

பாதுகாப்பில் நிலவிய மிகப் பெரிய ஓட்டையை இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் நிரூபித்துள்ளது. ஹோட்டல் அமைந்துள்ள பகுதியில் மிக பலத்த பாதுகாப்பு வளையம் உள்ளது. அதைத் தாண்டி வெடிகுண்டுகளுடன் தீவிரவாதிகள் நுழைந்திருப்பது தலைநகரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மிகப் பெரிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

மரியாட் ஹோட்டல் தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. தலைநகர் முழுவதும் பதட்டம் நிலவுகிறது.

நேற்று இரவு எரிய ஆரம்பித்த மரியாட் ஹோட்டலின் மேல்தளங்கள் இன்னும் எரிந்து கொண்டிருக்கின்றன. நேற்று இரவு அந்த தளங்களுக்கு தீயணைப்புப் படையினர்செல்ல முடியவில்லை. இதையடுத்து இன்று காலை முதல் அங்கு எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைக்கும் முயற்சிகள் தொடங்கியுள்ளன.

எந்த நேரமும் கட்டடம் இடியலாம் என்ற ஆபத்து இருப்பதால் பொறியாளர் குழுவும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

அல் கொய்தா காரணம் - யு.எஸ்.

இஸ்லாமாபாத் தாக்குதலுக்கு அல் கொய்தா தீவிரவாதிகளே காரணம் என அமெரிக்க உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து 8 பேர் கொண்ட தனிப்படையை பாகிஸ்தான் அரசு நியமித்துள்ளது.

சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தான் நாடாளுமன்றம் தாக்கப்படலாம் என மிரட்டல் வந்தது. இதையடுத்து நாடாளுமன்றப் பாதுகாப்பில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் கவனம் செலுத்தி வந்தனர். ஆனால் கவனத்தை அங்கு திசை திருப்பி விட்டு விட்டு மரியாட் ஹோட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X