• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மேற்கு வங்கத்தை விட்டு வெளியேறுகிறோம் - ரத்தன் டாடா அறிவிப்பு

By Staff
|

Ratan Tata
கொல்கத்தா: வாடிக்கையாளர்கள், தொழிலாளர்கள், ஒப்பந்தகாரர்களின் நலனை முன்னிட்டு மேற்கு வங்க மாநிலத்தை விட்டு வெளியேறுகிறோம் என டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா முறைப்படி அறிவித்துள்ளார். இதன் மூலம் டாடாவின் நானோ கார் தொழிற்சாலை சிங்கூரை காலி செய்கிறது.

மேற்கு வங்க மாநிலத்திற்கு பெரும் பின்னடைவாக இது கருதப்படுகிறது. மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில், மக்களின் கார் என பிரபலப்படுத்தப்பட்ட நானோ கார் தொழிற்சாலையை நிர்மானித்தது டாடா மோட்டார்ஸ் நிறுவனம்.

இதற்காக சிங்கூரில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை மாநில அரசு டாடா நிறுவனத்திற்காக கையகப்படுத்திக் கொடுத்தது. இதற்கு திரிணாமூல் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்தது.

விவசாயிகளிடமிருந்து பெற்ற நிலத்தை மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்று காலவரையற்ற போராட்டத்தில் மமதா பானர்ஜி குதித்தார். சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தையும் அவர் மேற்கொண்டார்.

திரிணாமூல் காங்கிரஸின் தொடர் போராட்டம் காரணமாக சிங்கூர் யுத்த பூமியாக மாறியது. பலர் உயிரிழந்தனர். தொடர்ந்து நடந்து வந்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர ஆளுநரின் உதவியை நாடியது மேற்கு வங்க அரசு.

ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தியின் முயற்சியால் மமதாவையும், மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டசார்ஜியையும் அழைத்துப் பேசினார் காந்தி. இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டாலும் கூட திரிணாமூல் காங்கிரஸ் போட்ட திடீர் திடீர் நிபந்தனைகளை டாடா மோட்டார்ஸ் ஏற்கவில்லை.

இந்த நிலையில் தொடர்ந்து இழுபறி காணப்பட்டதால் தனது நிறுவனத்தை மூடியது டாடா மோட்டார்ஸ். இதனால் பணிகள் நடக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில், சிங்கூரை விட்டு டாடா நிறுவனம் வெளியேற முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின. அதை நிரூபிப்பது போல நானோ ஆலையில் இருந்து உபகரணங்களை அகற்ற ஆரம்பித்தது டாடா மோட்டார்ஸ்.

இந்தப் பின்னணியில், இறுதிக் கட்டமாக நேற்று மேற்கு வங்க முதல்வர் புத்ததேவை, டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா கொல்கத்தாவில் ரைட்டர்ஸ் பில்டிங்கில் சந்தித்துப் பேசினார்.

அப்போது, மேற்கு வங்கத்தை விட்டு வெளியேறக் கூடாது, நானோ தொழிற்சாலையின் வெற்றிகரமான செயல்பாட்டுக்கு மேற்கு வங்க அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என புத்ததேவ் உறுதியளித்தார். இறுப்பினும் மேற்கு வங்கத்தை விட்டு தாங்கள் வெளியேற முடிவு செய்து விட்டதாக ரத்தன் டாடா அவரிடம் தெரிவித்து விட்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ரத்தன் டாடா கூறுகையில், மேற்கு வங்கத்தை விட்டு நானோ திட்டத்தை கொண்டு செல்லும் செய்தியை மிக மிக வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்களது தொழிலாளர்கள், ஒப்பந்தகாரர்கள், வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளோம்.

மமதா பானர்ஜி தலைமையில் நடந்து வரும் போராட்டமே எங்களது வெளியேறுதலுக்குக் காரணம். 2 ஆண்டுகளுக்கு முன்பு மிகுந்த நம்பிக்கையுடன் இங்கு வந்தோம். ஆனால் அது நிறைவேறவில்லை.

எங்களை தொடர்ந்து மேற்கு வங்கத்திலேயே இருக்குமாறு முதல்வர் கேட்டுக் கொண்டார். ஆனால் ஒரு பக்கம் நாட்டு வெடிகுண்டுகளை வீசிக் கொண்டிருக்கும் நிலையில், எங்களது நிறுவனத்தின் சுற்றுச் சுவரை இடித்துத் தள்ளும் சூழ்நிலையில், போலீஸ் பாதுகாப்புடன் தினசரி பயத்துடன் ஒரு தொழில் நிறுவனத்தை நடத்த முடியாது.

கட்டுமான அளவிலேயே இவ்வளவு தொல்லைகள் என்றால் தொழிற்சாலையில் முழு அளவில் பணிகள் தொடங்கினால் என்ன நடக்குமோ?

ஆகஸ்ட் 22ம் தேதியே நாங்கள் மேற்கு வங்கத்தை விட்டு வெளியேற நேரிடும் என கூறியிருந்தேன். அப்படி நான் கூறியதற்குக் காரணம், நிலைமை சீரடைந்து, தொழிற்சாலையை நடத்தும் வாய்ப்பு ஏற்படும் என்ற நம்பிக்கையில்தான்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாளுக்கு நாள் போராட்டம் அதிகரித்ததே ஒழிய, தீர்வுக்கான வழி ஏதும் தென்படவில்லை. இதுவரை சந்தித்திரா தொல்லைகளையும், மிரட்டல்களையும், எங்களது தொழிலாளர்கள் மீதான தாக்குதல்களையும் நாங்கள் சந்தித்து விட்டோம்.

அக்டோபர் முதல் டிசம்பர் மாதத்திற்குள் நாங்கள் விற்பனையை தொடங்கி விடுவோம் என வாடிக்கையாளர்களிடம் உறுதியளித்துள்ளோம். அதை நாங்கள் காப்பாற்ற வேண்டும். எனவேதான் மேற்கு வங்கத்தை விட்டு வெளியேற முடிவு செய்தோம்.

ரூ 1 லட்சத்தில் நானோ காரைக் கொடுப்போம் என நான் முன்பே அறிவித்துள்ளேன். அதில் மாற்றம் இருக்குமா, இல்லையா என்பது குறித்து இப்போது பதிலளிக்க விரும்பவில்லை என்றார் டாடா.

தொழில் அமைப்புகள் அதிர்ச்சி - வருத்தம்:

மேற்கு வங்கத்தை விட்டு வெளியேற டாடா நிறுவனம் முடிவு செய்திருப்பது இந்தியத் தொழில்துறைக்கு மிகப் பெரிய சோகமான நிகழ்வு என இந்திய தொழிலக சம்மேளனம் வர்ணித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் இயக்குநர் சந்திரஜித் பானர்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் தவிர்க்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் ஒட்டுமொத்த இந்தியாவின் இமேஜையும் இது பாதித்து விடும்.

எதிர்காலத்தில் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக தெளிவான, ஒருமித்த கருத்து எட்டப்பட வேண்டும். தொழில் வளர்ச்சிக்கு எந்தத் தடையும், தொல்லையும் இல்லாத சூழ்நிலையை உருவாக்க வேண்டியது அரசியல் கட்சிகள் மற்றும் அவற்றின் தலைவர்களின் பொறுப்பாகும் என்று தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X