ஈரோடு அருகே பஸ் - லாரி மோதலில் 9 பேர் பலி
ஈரோடு: ஈரோடு அருகே அரசுப் பேருந்தும், லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 9 பேர் பலியானார்கள். 25 பேர் படுகாயமடைந்தனர்.
திருப்பூரிலிருந்து புதுக்கோட்டைக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 52 பேர் பயணம் செய்தனர்.
வெள்ளக்கோயிலை அடுத்த சங்கரன்பள்ளம் அருகே அந்த பேருந்து நள்ளிரவு 12 மணி அளவில் சென்று கொண்டிருந்தபோது, கரூரிலிருந்து கோவை நோக்கி சிமெண்ட் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று எதிரில் வந்து கொண்டிருந்தது.
அப்போது, பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் லாரியின் பெரும்பாலான பகுதி பெரும் சேதமடைந்தது.
விபத்தில் பேருந்து மற்றும் லாரி டிரைவர்கள் மற்றும் 3 பயணிகள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். விபத்தில் காயம் அடைந்த அனைவரும் காங்கேயம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். வழியிலேயே 4 பேர் உயிரிழந்தனர். 25 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்த சிலர் கோவை, கரூர், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட இடங்களில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளக்கோயில் தீயணைப்புப்படை வீரர்கள் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான வாகனங்களில் சிக்கியிருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.